Sunday, November 28, 2010

சுதா கடை

பெருநிலத்தின் கதைகள் 03 - GTN நவராஜ் பார்த்தீபன்

சுதா அண்ணன் அனாதரவாக கைவிடப்பட்ட மனிதனைப்போல இருந்து கொத்து ரொட்டியைப் பிசைந்து கொண்டிருந்தார். முகத்தில் சோகம் கிளம்பிக் கொண்டிருந்தது. மிக அமைதியாக புன்னகையை இழந்து பேசிக் கொண்டிருக்கிறார். சுதா அண்ணனை நெருங்கிச் சென்று என்னைத் தெரியுதா என்று கேட்டேன். இருட்டில் முகத்தை மிக அவதானமாக பார்க்கிறார். நிறைய யோசித்த பின்னர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். முதலில் நாங்கள் இருவரும் உயிருடன் இருக்கும் செய்தியை பரிமாறினோம். தனக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்போல அவர் எதிர்பாத்தார். யாருமில்லாது சில பொதிகளை கொண்டு வந்து ஒரு வகுப்பறை மண்டபத்தில் வைத்து விட்டு இருக்கிறார். உடைந்த அந்த மனிதனின் கதைகளை நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். ஆனாலும் அவரை பார்க்க முடியாமலும் அவரது சொற்களை கேட்க முடியாமலும் வலித்தன.

அழகான அவரது குடும்பம் மனைவி, பிள்ளைகள் அவரது உயிரான கடை என்று எல்லாமே ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தன. சுதா கடை என்றால் எனக்கு மிக சிறிய வயது முதல் ஞாபத்தில் உள்ள கடை. கிளிநொச்சியில் 1993களில் இலிருந்து அந்த கடையை பார்த்திருக்கிறேன். அவர்களது உறவினர்களது கடை பக்கத்தில் இருந்தது. அவர்களது கடையை அம்பாள் கடை என்று அழைப்பார்கள். அம்பாள் கடைக்கும் சுதா அண்ணன் கடைக்கும் இடையில் ஒரு வியாபாரப்போட்டி எப்பொழுதும் நடந்து கொண்டிருந்தது. சுதா அண்ணன் கடுமையான உழைப்பாளி என்பதை அவரது கடை வளர்ந்து வந்த வித்தில் தெரிந்தது.

முதல் முதலில் கரடிப்போக்கு என்ற இடத்தில் நெல்லுக்கடை ஒன்றை சுதா அண்ணன் திறந்த பொழுது அந்த கடைக்கு போட்டுத் தொடங்கிய முதல் முழுவதும் அழிந்து போய் விட்டது. அதன் பிறகு கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் காடாக இருந்த பகுதியை வெட்டி குடியேறினார்கள். அவர்கள் அப்படி குடியேறிய காணியே முன்பு யாழ் பல்கலைக்கழக விவசாயபீடமாக இருந்து பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையாக மாறியிருக்கிறது. அந்தக் காணிக்கு பதிலாக அவர்களுக்கு வேறு காணியொன்று வழங்கப்பட்டது. தான் தண்ணீர் ஊற்றி வளர்த்த மாமரங்களும் தென்னை மரங்களும் அழியாத பொருளாக நிற்பதாக சுதா அண்ணன் மகிழ்ச்சியடைவார்.

சுதா அண்ணன் குணரஞ்சினி அக்காவை காதலிக்கும் பொழுது பெரிய பிரச்சினை ஏற்பட்டு விட்டது. சுதா அண்ணனின் பெற்றோர்கள் தாங்கள் வெள்ளாலர்கள் என்றும் குணரஞ்சினி அக்காவோ தச்சர் என்றும் சாதிப் பிரச்சினையை கிளப்பி விட்டார்கள். அதனால் குணரஞ்சினி அக்காவை கூட்டிக் கொண்டு சென்று சுதா அண்ணன் தனது வாழ்வை தொடங்கினார். பெற்றோர்கள், உறவினர்கள் சுதா அண்ணனை ஒதுக்கி வைத்து விட்டார்கள். பெற்றோர்களிடமிருந்து வெறுங் கையுடன் வந்த இவர்கள் முதன்முதலில் ஒரு ஆனந்தபுரத்தில் கடையை திறந்தார்.



அவரது மனைவியின் முகத்தில் எப்பொழுதும் புன்னகையும் வெளிச்சமும்தான் மிகுந்திருக்கும். சுதா அண்ணன் கடையுடன் நிற்கும் பொழுது அவர் பாடசாலைக்கு வந்து படிப்பித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தொண்டர் ஆசிரியராக நீண்டகாலம் கற்பித்து பின்னர் நிரந்தரமான நியமனத்தை பெற்றிருந்தார். பாரதிபுரம் என்ற பின்தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலையில் மிக அர்ப்பணிப்புடன் கல்வி கற்பித்து வந்திருக்கிறார். அப்படி பாடசாலைக்கு செல்லும் பொழுது அவர்களின் கடைசி மகன் சிறிய பிள்ளையாயிருந்தான். அவனைவிட இரண்டு இரட்டை பெண் பிள்ளைகளும் இருந்தார்கள்.

வறுமையான நிலையில் பொருட்களை வாங்கும் சில்லறைக் கடைகளாக இவைதான் எங்கள் பகுதி மக்களுக்கு இருந்தது. மில்லுக்கு வேலைக்கு செல்பவர்கள், வயலில் வரம்பு கட்டுபவர்கள் என்று முழுக்க முழுக்க கூலி வேலை செய்பவர்கள்தான் எங்கள் ஊரில் இருந்தார்கள். அவர்களது வருமானத்திற்கும் அவர்களது கையில் பிழங்கும் பணத்திற்கும் ஏற்ப இந்த கடைகளில்தான் பொருட்களை வாங்குவார்கள். அம்பாள் கடை அம்மாவை எனது அம்மாவுக்கு நிறையப் பிடிக்கும். அவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அம்பாள்கடை கடையின் தடயமே 1996இல் சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் பொழுது அவர்கள் இடம்பெயர்ந்து சென்ற பொழுது முற்றாக அழிந்து விட்டது. அவர்கள் முன்னேறி முன்னேறி பக்கத்தில் ஒரு புடவைக் கடையொன்றையும் திறந்தார்கள்.

கிளிநொச்சிமீதான முற்றுகையை தொடங்கும் பொழது அவர்கள் ஏதோ ஒரு திசையில் அலைந்தார்கள். இறுதியில் வவுனியாவில் போய் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள். கிளிநொச்சி மீண்டும் கைப்பற்றப்பட்ட பொழுது அவர்கள் திரும்பிய பொழுது அவர்களின் கடையிருந்த தடயமும் இல்லை. சுதா அண்ணனின் கடையும் இருந்ததிற்கான தடயமும் இல்லை. அம்பாள் கடை அம்மாவின் குடும்பம் இறுதியில் ஒன்றுமே வேண்டாம் என்று நாட்டை விட்டே வெளியேறி விட்டார்கள். ஆனால் சுதா அண்ணன் தனது கடையிருந்த தடயத்தை தேடினார். மீண்டும் கடையை உருவாக்க பல முயற்சிகளை எடுத்தார். சுதா கடை என்ற அவரது கடை சுடர்நிலவு என்ற புதிய பெயருடன் பொலிவுடன் மீளத் திறக்கப்பட்டது.

சுதா அண்ணனே கடைக்கான பொருட்களை பழைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வருவார். அவரது கடைக்கும் நகரத்தின் மையத்தில் உள்ள கடைக்கும் இடையில் இவர் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லுவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். மதிய வேளையில் கொஞ்ச நேரம் கடையை பூட்டி விட்டு தான் இப்படி பொருட்களை வாங்கச் செல்லுவார். சுதா அண்ணனின் வெற்றியின் பின்னால் அவரது உழைப்பின் பின்னால் அவரது மனைவியின் உழைப்பு கனவு ஒற்றுமை எல்லாமே இருந்திருக்கிறது. நன்றாக படிக்க வேண்டும் என்று எப்பொதும் குணரஞ்சனி அக்கா எனக்கு சொல்லிக் கொண்டிருப்பார்.

கிளிநொச்சியிலிருந்து சுதா குடும்பமும் இடம்பெயரத் தொடங்கியது. போகும் பொழுது ஒரு லொறி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன அவரிடம் இருந்தன. எல்லாவற்றையும் லொறியில் தூக்கி எடுத்துப் போட்டுக் கொண்டு தர்மபுரத்தில் கொண்டுபோய் போட்டார்கள். அங்கும் கடையை திறக்கலாம் என தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடையை உருவாக்கும் அன்றைய (மார்கழி 13, 2008) வேலைகளை முடித்துக் கொண்டு பாணையும் வாழைப்பழங்களையும் எடுத்து வைத்தார் சுதா. அவருக்கு பக்கத்திலும் சுற்றியும் இரண்டு மகள்கள், மனைவி, கடையை போடும் வேலைக்கு வந்த உதயகுமார் மற்றும் செல்வராஜ் எல்லோரும் சாப்பிடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவரது மகன் பக்கத்து வீட்டு சிறுவனுடன் கரம்போர்ட் விளையாடிக் கொண்டிருந்தான்.



பாணை எடுத்து கைகளில் வைத்து பிய்த்துக் கொண்டிருந்த பொழுது, அந்த சொற்ப கணத்தில் சத்தம் எதுவும் இல்லாமல் ஒரு ஷெல் வந்து விழுந்தது. அந்த இடமே கருகிப் போக சுதாவின் மனைவி கருகியபடி முனகிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஷெல்கள் விழுவதைப் பார்த்து எங்கோ ஓடிக் கொண்ந்தார்கள். மேலே கட்டியிருந்த தரப்பாலை காணவில்லை. பிள்ளைகளை மனைவியை காணவில்லை. சுதா அண்ணன் ஐய்யோ ஓ.. வெனக் கத்திக் கொண்டிருக்கிறார். யாரும் தூக்குவதற்கும் வரவில்லை. நின்ற நாயும் எங்கோ ஓடிக் கொண்டிருந்தது. வேலைக்கு வந்த உதயகுமார்தான் தனது உடலில் ஏற்பட்ட காயத்தால் இரத்தம் வழிய வழிய வைத்தியசாலைக்கு சென்று அம்புலன்ஸ்சை கூட்டிக் கொண்டு வந்தான்.

பக்கத்து வீட்டு சிறுவனுடன் கரம்போட் விளையாடிக் கொண்டிருந்த மகனைப் பார்க்கிறார் அவனுக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மகள்களும் இறந்து கருகிப் போய்க்கிடக்கிறார்கள். சுதா அண்ணன் தனது மனைவியை தூக்கி;க்கொண்டு அம்புலன்ஸில் விசுவமடு வைத்தியசாலைக்கு கொண்டு போகிறார். அங்கிருந்தும் இங்கிருந்தும் காயப்பட்டவர்கள் கொண்டு வரப்படுகிறார்கள். வைத்தியசாலையோ காயப்பட்டவர்களால் நிறைந்து கிடக்கிறது. அவல ஒலி பெரியளவில் கேட்டுக் கொண்டிருக்கிறது. வைத்தியர்களும், தாதியர்களும், பணியாளர்களும் என்ன செய்வதென தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். மருந்துக்கு பெரிய தட்டுப்பாடு.

எப்படியாவது தனது மனைவியை காப்பாற்றும்படி வைத்தியரை சுதாவும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். எரிந்து உடலின் சில பாகங்கள் இல்லாமல் போய்விட்டது. முதுகுப் பக்கமாக குடைந்த மாதிரி ஓட்டையாக இருந்த பகுதியில் இரத்தம் சகிந்து கொண்டிருந்தது. முகத்தை தவிர உடம்பெல்லாம் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டுள்ளது. குணரஞ்சினி அக்கா கண்களை திறந்து சுதாவைப் பாhக்கிறார். மகன் மட்டும் நிற்பதைப் பார்த்துவிட்டு இரண்டு மகள்களையும் கேட்கிறார். அவர்கள் இராசேந்திரம் அதிபருடன் நலமாக இருப்பதாக சுதா அண்ணன் சொல்லவும் பேசாமல் தூங்கத் தொடங்கினார். விறகு போட்டு எரிக்கப்பட்டதைப்போல குணரஞ்சனி அக்கா இருப்பதாக சொல்லிக் கொண்டு சுதா அழுதுகொண்டே வந்தார்.

கருகிக் கிடந்த பிள்ளைகளை கொண்டுபோய் இராசேந்திரம் அதிபருடன் சேர்ந்து அடக்கம் செய்துவிட்டு மீள வைத்தியசாலைக்கு வந்த பொழுது மீண்டும் குணரஞ்சினி அக்கா புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். மருந்து தட்டுப்பாடு ,ஷெல் தாக்குதல்கள் என்று கடுமையான நெருக்கடி இன்னும் அதிகரித்த பொழுது அவர் மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு தனியாக தரைவழிப் பாதையால் அனுப்பப்பட்டார். காயமடைந்த மகன் வள்ளிப்புனம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறான். அங்கும் வான் தாக்குதல்கள் மூள்கின்றன. மீண்டும் இரணைப்பாலையில் அமைக்கப்பட் தற்காலிக வைத்தியசாலைக்கு போகிறார்கள் சுதா அண்ணனும் மகனும். பின்னர் கப்பலால் திருகோணமலை வைத்தியசாலைக்கு இருவரும் அனுப்பப்பட்டார்கள்.


வவுனியா வைத்தியசாலையில் குணரஞ்சினி அக்கா அனுமதிக்கப்பட்டிருந்தார். திருகோணமலையில் ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் (16.03.209 அன்று) வவுனியாக்கு இருவரும் போகிறார்கள். மகனோ அம்மாவுக்கு காயங்கள் ஆறி நலமாய் இருப்பார் என்று சுதா அண்ணனுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். சுதா அண்ணனோ இரண்டு பிள்ளைகளையும் எங்கே என மனைவி கேட்கப்போகிறார் என்ன பதில் சொல்லுவது என அழுது கொண்டிருக்கிறார். வவுனியாவில் இருந்து குணரஞ்சினியக்கா தொலைபேசியில் கதைக்கும் பொழுது பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார். அவர்கள் நலமாயிருக்கிறார்கள் என்று சுதா கூறிய பொழுது எனக்கு இவ்வளவு நடந்தும் பிள்ளைகளுக்கு ஒன்றும் நடக்கவில்லையா என்று ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் கேட்கிறார். உங்களுக்கு மட்டும்தான் காயம் என்று குணரஞ்சினி அக்காவுக்கு சொல்லி விட்டு யோசிக்க வேண்டாம் என்று கூறியது ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது.

வவுனியாவுக்கு வந்ததும் இருவரும் இறங்கி வைத்தியசாலையை நோக்கி விரைந்து செல்லுகிறார்கள். வைத்தியசாலையில் சுதாவின் வவுனியாவில் இருந்த உறவினர்கள் எல்லாம் நிற்கிறார்கள். குணரஞ்சினி எங்கே என்று அவர் கேட்ட பொழுது அவர்கள் எந்தப் பதிலும் சொல்ல முடியாதவர்காளக தடுமாறிக் கொண்டிருந்தார்கள். இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி சென்றார்கள். இங்கு நின்ற தாதி ஒருவரை பார்த்து குணரஞ்சினி எங்கே இருக்கிறார் என்று கேட்ட பொழுது அவர் போன மாதமே (02.04.2009 அன்று ) இறந்து விட்டார் என்று சொல்லுகிறார். இறுதிவரை தனது இரண்டு மகள்களும் இறந்து போனதையும் குணரஞ்சினி அக்கா அறியாமலே இருந்தார். தனது மனைவி இறந்து போனாள் என்பதை அறிந்த சுதா அண்ணனும் அம்மா இறந்து போனாள் என்பதை அறிந்த மகனும் எழுப்பிய அழுகை வவுனியா வைத்தியசாலையில் ஒலித்துக் கொண்டிருந்த அழுகையுடன் கலந்தன.

நாளைக்கு காணியில் நிற்பேன் என்னை வந்து அங்கு சந்திக்கிறாயா என்று சுதா அண்ணன் கேட்டார். சரி வாரன் என்று நான் பதில் சொன்னேன். இனி நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லையடா என்று அவர் சொல்லிக் கொண்டே கொத்துரொட்டியை இன்னும் சாப்பிடாமல் பிசைந்து கொண்டிருந்தார். நான் இன்னும் அப்பாண்ணாவை தேடிப் பிடிக்க முடியவில்லை. காலையில் வந்து பார்ப்போம் என்று யசோதரன் சொல்லிக் கொண்டிருந்தான். இதற்கிடையில் இராணுவம் அனுமதித்த நேரத்திற்கு மேலாக நாம் நேரம் எடுத்திருந்தபடியால் பாடசாலையை விட்டு நாங்களாகவே வெளியேறிக் கொண்டிருந்தோம்.

1 comment:

  1. பெருநிலம் 9 தொடர்களையும் ஒரே இருப்பில் படித்து முடித்தேன் வேதனையாக இருக்கு.இப்ப மக்களின் துயரம் எவ்வளவு கொடியது என்பதை பக்கத்திலிருந்து கதைப்பதைப் போல சொல்லப்படுகிறதுது.

    தர்மினி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...