Sunday, November 28, 2010

மாவீரர் துயிலுமில்ல வீதி

பெருநிலத்தின் கதைகள் : 04 - நவராஜ் பார்த்தீபன்

அன்றிரவு யசோதரனின் வீட்டுக்கு போனேன். அவனின் மனைவி விஜிதா எங்களுக்குச் சாப்பாடு பறிமாறிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் பாப்பாக்கா என்ற யசோதரனின் மாமியார் இருக்கிறார். சத்ஜெய போரில் வீடு பாக்க வந்த கணவனை இழந்த அவர் இப்பொழுது மனிதாபிமானத்திற்கான போரில் பிரபா என்ற தனது மகனை இழந்திருக்கிறார். கணவன் இல்லாமல் கடுமையாக உழைத்து பிள்ளைகளை வளர்த்து வந்த பாப்பாக்காவின் மூத்த மகன் பிரபாதான் அவர்களது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்தான். ஏனைய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பற்காக வேலைகளுக்குச் செல்லுவான். அவன் கிளிநொச்சியுள்ள கடைகளில் வேலைக்கு நின்றதையும் தெருக்களில் சைக்கிள்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு திரிந்ததையும் தினமும் பார்த்திருக்கிறேன்.

குடும்பத்தை நிமிர்த்த நினைத்த பிள்ளையை யுத்தம் தின்று விட்டது. பாப்பாக்காவும் மூன்று பெண் பிள்ளைகளும் இரண்டு மகன்மார்களும் புதுமாத்தளனிலிருந்து படகு ஒன்றின் மூலம் வந்து படைகளிடம் சரணடைய வந்தார்கள். கடலில் வைத்து படைகளை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது இவர்களை நோக்கி படைகள் துப்பாக்கிச் சுடுகளை நடத்தத் தொடங்கிவிட்டனர். கரைக்கு வந்தததும் காயமடைந்த மகனை படகுக்குள் ஒளித்துக் கொண்டு வந்தார்கள். படகை ஓட்டிய ஓட்டியோ இறந்து சரிந்து போயிருந்தான். மகனை கைப்பற்றிய இராணுவம் வைத்தியசாலைக்கு கொண்டு போகிறோம் என்று சொல்லி விட்டு கொண்டு போனது. சில நாட்களின் பின்னர் பாப்பாக்காவையும் பிள்ளைகளையும் அழைத்து உங்கள் மகன் இறந்து போய் விட்டார் என்பதை சொல்லி திறபடாத சவப்பெட்டியைக் காட்டி விட்டு அடக்கம் செய்யப்போகிறோம் வாருங்கள் என்று இயல்பாகச் சொன்னார்கள்.

கிளிநொச்சியில் உயதநகரில் உள்ள தங்கள் தெருவில் ஒரு சிறிய கடையை போட்டு இரண்டாவது மகன் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார். சிறிய கடைதான். முதலுக்கு ஏற்ற வகையில் கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை கொள்வனவு செய்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மண்ணை கையால் உருண்டை உருண்டையாகப் பிடித்து வைக்கப்பட்ட அரைவாசிச் சுவர்களுடன் அவர்களின் வீடு அமைந்திருக்கிறது. அக்கம் பக்கமெல்லாம் இப்படியான வீடுகளும் தகரங்களையும் கூடாரங்களையும் கூட்டி மூடியிருக்கும் குடில்களிலும்தான் சனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகாமிலிருந்து அழைத்து வந்த பாப்பாக்கவும் பிள்ளைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் மூடப்பட்டிருந்த சவப்பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நானும் யசோதரனும் காலையில் மீண்டும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சென்றோம். அங்கு பதிவுகள், புகைப்படப்பிடிப்புக்கள், விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு மண்டபங்களிலும் ஆட்கள் குவிந்தபடி தங்கள் அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும் அங்கவீனப்பட்டவர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். காயமடைந்த சுவர்களை பின்னணியாக் கொண்டு அவர்களை குடும்பம் குடும்பமாக இராணுவம் புகைப்படம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மீண்டும் நான் அப்பண்ணாவை தேடிக் கொண்டிருந்தேன். வரிசையில் நிற்கும் சனங்களுக்கிடையில் ஊன்றுகோல்களை ஊன்றிக் கொண்டு பலர் நின்று கொண்டிந்தார்கள். அவர்களது முகத்தைப் பார்த்தேன். அப்பண்ணா இல்லை. நிவாரண அட்டைகளையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். வெயிலோ எல்லாரையும் காலையிலேயே வாட்டத் தொடங்கி விட்டது. சரிவராது காணிக்குப் போகட்டும் அங்கு வைத்துச் சந்திப்பம் என நினைத்துக் கொண்டேன்.

அப்பண்ணவை சந்திக்க முடியாமல் மீண்டும் நகரத்திற்கு சென்றோம். பேரழிவுகளின் காட்சி தொடர்ந்து கொண்டேயிருந்தன. இன்னும் கஜானந்தின் வீட்டுப் பக்கம் செல்லவில்லை என்று யசோதரனுக்கு சொல்லிக் கொண்டு துயிலுமில்ல வீதியில் சைக்கிளை விடு என்றேன். துயிலுமில்ல வீதியில் முதலில் கிளிநொச்சி பொதுச்சந்தை இயங்கியிருந்த இடம் அழித்து வெறுமையாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில கட்டிடங்கள் இடிபாடடைந்த நிலையில் நிற்கின்றன. சந்தைக்கு முன்னால் இருந்த பேரூந்து நிலையம் முன்பு அங்கு ஒரு பேரூந்து நிலையம் அமைந்திருந்தது என்பதைக்; காட்ட உருத்திரபுரம், முல்லைத்தீவு முதலிய இடங்களுக்குரிய தரப்பிடங்களின் பெயர்கள் கொஞ்சம் அழியாமல் இருந்தன. ஏனைய எல்லா தரிப்பிடங்களும் அழிந்து போய்விட்டன. துயிலும் இல்ல வீதியில் இருந்த பல கடைகள், கமல் திரையரங்கு, இசைநிலா திரையரங்கு எல்லாமே அழிந்து விட்டன.

பாரதி உணவகம் இருந்ததிற்கான தடயங்களை நான் தேடிக்கொண்டே வந்தேன். பக்கத்தில் இருந்த லோன்றிக்கார அய்யாவின் கடை, முன்னால் இருந்த ராயு அண்ணனின் அகநிலவு தேனீர்க்கடை, அதற்கு பின்னாலிருந்த இசைநிலா திரையரங்கு எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருந்தேன். இடிபாடடைந்து சில துண்டுச் சுவர்கள் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தன. முதலில் கஜானந்தின் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். அங்கு கஜானந்தின் இரண்டு தங்கைகளும் கூடாரத்திற்குள் இருந்தார்கள். சின்னவள் அட்சயாவும் இடம்பெயருவதற்கு முன்பு பார்த்ததை விட நன்றாக வளர்ந்திருந்தாள். பெரியவள் அபர்ணாவும் வளர்ந்திருந்தாள். தங்கைச்சி தீபண்ணா வாரார் என்று கொண்டு இருவரும் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். எனக்கோ கஜானந் இல்லாத அவனது காணிக்குள் காலடி எடுத்து வைக்கவே மிக துயரமாக இருந்தது.

கஜானந் நிக்கிறானா? என்று கேட்டுக் கொண்டுதான் முன்பு அந்த வீட்டுக்குள் நுழைவேன். அந்தத் தெருவில் செல்லத் தொடங்கிய பொழுதே எனக்கு கஜானாந் பற்றிய ஞாபகங்கள் வந்து குவியத் தொடங்கின. இப்பொழுது அவனை நான் தேடிக் கொண்டு வரும் வீடும் இல்லை அவனும் இல்லை. அம்மா கடைக்குப் போயிற்றார். வந்திருங்க அண்ணா என்று சொல்லிக் கொண்டு என்னை தங்கை அபர்ணா நெருங்கி வந்தாள். எனக்கோ அங்கு நிற்க முடியாதளவில் துயரம் பெருகிக் கொண்டிருந்தது. அண்ணா எங்கேயம்மா என்று அட்சயாவைப்யைப் பார்த்துக் கேட்க அவளின் சிரிப்பு திடீரென சோர்ந்து போனது. நான் மேலும் அவர்களைப் பார்க்க தாங்க முடியாதவனாகிறேன். கஜானந்தும் நானும் அவனின் அம்மா சுட்டுத் தந்த ரொட்டிகளைச் சாப்பிட்டது. பியரைக் குடித்து விட்டு அவனின் வீட்டில் தூங்கியது எல்லாம் என் ஞாபகத்திற்கு வந்தன. சிதைவடைந்த சுவர் துண்டில் அமர்ந்திருந்தபடி எல்லாவற்றையும் நினைக்க ஓ.. என அழ வேண்டும் போலிருந்தது.

நான் பிறகு வாரன் என்று கூறிவிட்டு அகநிலவு தேனீரகத்தடிக்கு போவம் வாடா என்று யசோவை அழைத்துக் கொண்டு வந்தேன். அகநிலவு தேனீரகத்திற்கு முன்னாலுள்ள முற்றம் பற்றைகளும் புற்களுமாய் இருக்கிறது. மேலே நின்ற நாவல் மரம் காயத்துடன் மனிதர்களை இழந்து தனித்து அசைந்து கொண்டிருந்தது. அது கஜானந்தையும் சேனாவையும் அமலனையும் தேடுவதைப்போல இருந்தது. அது கிளிநொச்சியில் வாழ்ந்த பல மனித்களை பார்த்திருக்கும் அவர்களுக்காகவும் அது அசைந்து கொண்டிருந்தது. அவர்கள் திரும்பாத அந்த மரத்தடி நிழலுக்கு எங்கள் பழைய நண்பர்கள் யாரும் திரும்புவதில்லை. நாங்கள் கூடி நின்ற பழைய இடத்தில் ஒரு முறை நின்று பார்த்தேன். நீ எங்க போனாலும் இந்த இடத்திற்குத்தான் திரும்பி வர வேணும் என்று கஜானந் சொன்னதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. திரும்பவும் அதே இடத்தில் வந்து நிற்கிறோம். ஆனால் எங்களுடன் பயணத்தை தொடங்கியவர்கள் சேர்ந்திருந்தவர்கள் யாரும் இப்பொழுது இல்லை.

எங்கள் அணியில் பத்துப் பதினைந்து ஆட்களுக்க மேல் இருக்கிறார்கள். கிளிநொச்சியில் உள்ள அநேகமான கழிவுகள் எங்கள் அணியில்தான் இருந்தன. பியிரும், சிகரட்டும், மதுபானக் கடையும் தெருவும் அரட்டையும் என்று காலத்தை கழித்து இப்பொழுது ஓரளவுக்கு பல்கலைக்கழகம், கல்வியல் கல்லூரி என்று ஏதோ போய்விட்டார்கள். சிலர் போரில் இறந்து விட்டார்கள். கஜானந் எங்கள் குழுவில் மிகவும் கலகலப்பானவன். உயர்தரம் படித்த பின்னர் அந்தக் குழுவை அந்த இடத்தில் கஞ்சி பஜாரை உருவாக்கிய தந்தை அவன்தான். ஒருநாளும் அந்தப் பக்கமும் செல்லாத என்னையும் ஒருவாறு கொண்டுபோய் சேர்த்தது அவன்தான். பல்கலைக்கழகம் மூடப்பட்டு ஒரு வருடமாக ஊரில் நிற்கும்பொழுது விவரணப் படம் எடுக்கும் வேலை ஒன்று செய்து கொண்டிருந்தேன். அந்த வேலை தவிர்ந்த நேரங்களில் அந்த இடம்தான் பொழுதை சுகமாய் இனிதாய் கழிக்கும் இடமாக கடைசிவரை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஏன்டா இஞ்ச வாறீங்கள்? என்ட உயிர எடுக்கிறீங்கள்? நான் வியாபாரம் செய்யிறேல்லையா? என்று எல்லாரையும் ராயு அண்ணன் சிரித்துக் கொண்டே திட்டிக் கொண்டிருப்பார். உங்களின் கடையில் நாங்கள்தானே தேனீர் குடிக்கிறம், கண்ணாடிப் பெட்டியில வைச்சிருக்கிற வடையள், மோதகங்கள சாப்பிட யார் ராயுஅண்ண வரப்போறறாங்கள்? என்று கஜானந் சொல்லிச் சிரிப்பான். கடையில் இருந்த கதிரைகளில அரைவாசியில் எங்கள் பெடியள்தான் எந்த நேரமும் இருப்பார்கள். ராயுவர் எழுப்பி எங்களைக் கலைச்சுக் கலைச்சு களைச்சுப் போவார். ஒரு தேனீர் தாங்க ஒரு சிகரட் தாங்க போறம் என்று கேட்டு வாங்கிய பிறகும் குழு இடத்தை விட்டு நகராது. வேலைக்கு வெளிக்கிடும் பொழுதும் ராயு அண்ணனிடம் வந்த ஒரு தேனீர் குடித்து விட்டுத்தான் போவேன்.

கஜானந் எனக்கு மிகவும் பிரியமான நணபன். அந்த இடத்தில் பழகி கொஞ்ச நாட்களின் பின்னர் ஒருநாள் எல்லா நண்பர்களும் போய்விட்ட பின்னர் நானும் கஜாகனந்தும் லோன்றிக் கடை அய்யாவின் சுவரில் குந்திக் கொண்டு கதைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் அவன் தன் அப்பம் விற்கும் கதைகளை ஆரம்பித்தான். மாலை நேரத்தில் அரிசி மா இடித்து விட்டு காலையில் நேரத்துடன் அம்மா சுட்டுத் தரும் அப்பங்களை நகரத்தில் உள்ள சில கடைகளுக்கு போடுவேன். அப்பாவின் உழைப்பு காணாது அதனால்தான் ஒரளவு வீட்டில் சமையல்கள் நடக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தான். இதேபோலத்தான் யசோதரனும் றோல், மிதிவெடி என்ற பலகாரங்களை செய்து கடைகளுக்கு போடுகின்றான். அவனின் வீட்டில் அவனது அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் சேர்ந்துதான் இந்தத் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யசோவும் காட்போர்ட் பெட்டி ஒன்றில் பலகாரங்களுடன் செல்லுவதை சின்ன வயதிலிலேயே பாத்திருக்கிறேன். கஜானந்திற்குள் இப்படி பல கதைகள் உறைந்திருந்தன.

நாங்கள் துயிலுமில்ல வீதியில் நிற்கும் பொழுது எத்தனையோ நாட்கள் களத்தில் மரணித்த போராளிகளின் உடல்களை சுமந்து செல்லும் வண்டிகள் செல்லுவதைப் பார்த்திருக்கிறோம். சிலவேளை வண்டிகளுக்கப் பின்னால் சென்று துயிலும் இல்லம் வரை போய் வருவோம். எங்களுடன் படித்த பழகிய பல நண்பர்கள் வீரமரணம் அடைந்து வெற்றுப் பெட்டிகளில் வருவார்கள். சிலவேளை ஒரு நாளிலேயே நாலைந்து வெற்றுடல்களும் கொண்டு செல்லப்படும். கனவுக்காய் மரணித்த அந்த வீரர்கள் உறங்கும் நிலம் அந்த வீதியால் செல்லப்படும் பொழுது வரும் முறிப்பு என்ற இடத்தில்தான் இருந்தது. அங்கு சென்று பார்த்த பொழுது அடித்து அழிக்கப்பட்டு சாய்க்கப்பட்ட நிலத்தின் மேலால் புற்கள் அடர்ந்திருக்கின்றன. பச்சை நிறமாக செழித்து வளர்ந்து காடாகியிருக்கும் அந்த நிலத்தில் அழிந்த கல்லறைகளுக்கு மேலால் எருக்கம் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. கல்லறைகளை அழித்து விட்டார்கள் எருக்கம் மரங்களை அழிக்க முடியுமோ என்று ஒரு கிழவன் சொல்லிக் கொண்டு போகிறார்.

இறுதியாய் 2006 மாவீரர் நாளன்று முழுவதும் நான் கஜானந் மற்ற நண்பர்கள் எல்லாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நின்றோம். அணியணியாய் சனங்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்காய் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நின்றார்கள். எனது அண்ணாவின் கல்லறையின் முன்பாக அம்மாவும் தங்கைச்சியும் அண்ணாவின் மனைவியும் அண்ணாவின் குழந்தையும் அஞ்சலித்தபடி நிற்கிறார்கள். இதே நிலத்தில் அண்ணா புதைக்கப்பட்ட நாளன்று நாம் உருகி உருகி அழுது கொண்டிருந்தோம். எல்லாக் கல்லறைகளின் முன்பாகவும் அதே அழுகை ஆண்டுகள் கழிந்தும் தொடர்ந்து கொண்டிருந்தன. கஜானந் பார்த்து துயரில் உறைந்தபடி நின்றான். எங்கள் நண்பர்களில் பலரது சகோதரர்களும் மாவீரர்களாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். சில நண்பர்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் போன்றவற்றுக்கும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கும் போயிருந்தார்கள்.

நாவல்மரத்திற்குப் பின்னால் இப்பொழுது யாரும் இல்லை. ஒரு நாள் கிபீர் பெரும் இரைச்சலுடன் வந்து கொண்டிருந்தது. கிளிநொச்சியை சுற்றிச் சுற்றி இரைந்து அதிர வைத்துக் கொண்டிருந்தது. ஜெனிற் அந்த நாவல்மரத்தின் பின்பாகத்தான் ஒளிந்திருந்தான். கிளிநொச்சி நகரமே அதிர்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. தங்கச்சி பாடசாலைக்குப் போயிருந்தாள். அம்மா வேலைக்கு போயிருந்தார். என்ன செய்கிறார்களோ என்று பதை பதைத்துக் கொண்டிருந்தது. கிளிநொச்சி கீபர் நகமாக மாறும் அளவுக்கு கட்டுநாயக்கா முதலிய விமானத்தனங்களில் விமானங்கள் நிற்பதைவிட கிளிநொச்சியில்தான் கூடுதலான நேரங்களில் நிற்கும். கிபீர் இரணைமடுவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில்தான் உலாவித் திரிந்து கொண்டிருக்கும்.

இரவில் தூங்க முடியாது. டேய்.. கிபீர் என்று அமம்மா தட்டி எழுப்பும் பொழுதெல்லாம் கிபீர் குண்டை கொட்டி விட்டதுதேவா என்ற அதர்ச்சியுடன் எத்தனை நாள் நித்திரையில் துடித்தெழும்பியிருப்பேன். எழும்பியதும் தங்கச்சி எங்க அம்மா? என்பதுதான் என் முதலாவது கேள்வி. கிபீர் வந்து பெரும்பாலும் இரணைமடுப் பக்கமாக குண்டுகளை கொட்டி விட்டுப் போவதே வழக்கமாக மாறிவிட்டது. சரி கிபீர் போய்விட்டது என்று பதுங்குகுழியைவிட்டுத் திரும்பப் போய் படுத்து கண்ணயர திரும்ப வரும். என்னம்மா… என்று அம்மாவைக் கேட்டுக்கொண்டு மறுபடியும் பதுங்குகுழிக்கு ஓடுவோம். எங்கள் வீட்;டின் முன்னால் உள்ள வீட்டில் பிறந்து சில நாட்களேயான குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஒரு இளம்தாய் எங்கள் வீட்டிலுள்ள பதுங்குகுழிக்குள் வந்து எங்களுடன் சேர்ந்து இருப்பார்.

இப்பிடித்தான் ஒருநாள் நான் வேலையால் வந்து வீட்டுக்குள் நுழைய கிபீர் விமானங்கள் வந்து சுற்றிக் கொண்டிருந்தன. அன்றும் தங்கச்சி பாடசாலைக்குப் போயிருந்தாள். அம்மா வேலைக்குப் போயிருந்தார். திடீரென கிபீர் விமானங்கள் பதிந்து குண்டுகளை கொட்டத் தொடங்கின. பக்கத்து வீட்டு அம்மா ஒருவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சட்டென வெறும் நிலத்தில் விழுந்து கிடந்தார். என்னையும் படு தம்பி! படு! என்று சொல்லிக் கொண்டு பதைபதைப்புடன் கிடந்தார். விமானங்களோ குண்டுகளை தொடர்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. மாறி மாறி ஒவ்வொரு விமானங்களும் நாலலைந்து குண்டுகள் என நான்கு விமானம் இருபது குண்டுகளை பொழிந்தன. எனக்கு மேல்தான் குண்டுகள் விழுகின்றன என நினைத்தேன். புகை மண்டலமாக வீடு அதிர்ந்து பொருட்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டன. கிபீர் போன பிறகு பார்த்தால் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சசியும் அவனின் தம்பியுமான கிருசாந்தனும் அவனின் அப்பா அத்தை அத்தையின் கணவர் என்று ஐந்து பேர் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். சசியும் கிருசாந்தனும் எங்கள் பாடசாலையில்தான் அப்பொழுது உயர்தரம் படித்தார்கள். அவர்கள் கஜானந்துடனனும் மிக நெருக்கமாக பழகியிருக்கிறார்கள்.

இறுதியாய் நான் கிளிநொச்சியிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் கஜானந்துடன் கொஞ்சநேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இசைநிலா திரையரங்கின் வாசலில் நண்பர்hகளுடன் படித்திருந்தான். என்னை போகாதடா! என்று அவன் மறித்துக் கொண்டிருந்தான். பாஸை கிழித்தால் போக மாட்டாய்தானே என்று ராயுகடையில் இறுதியாய் தேனீர் குடிக்கும் பொழுதும் சொல்லிச் சிரித்தான். ராயு அண்ணனிடம் இறுதியாய் குடித்த தேனீர், அன்று எனது பிறந்தநாள் என்பதால் அவனுடன் இறுதியாய் சாப்பிட்ட கேக் எல்லாயும் மிக செழிய ஞாபகங்களாய் உள்ளன.

கஜானந் நவஜீவனம் என்ற விடுதியில்தான் இருந்து வளர்ந்து வந்தான். தற்பொழுது அவனது பெற்றோர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை என்பதால் நவஜீவனம் என்ற விடுதியிலிருந்து கஜானந்தை எடுத்து வந்து வளர்த்தார்கள். ஆனால் அவனின் அம்மாவும் அப்பாவும் மற்ற பிள்ளைகளை விட தன்னில்தான் அதிகமான பாசம் வைத்திருப்பதாக கஜானந் சொல்லிக் கொண்டிருப்பான். அவனின் அம்மாவின் பாசத்திற்கு முன்னால் இந்தக் கதையை யாரும் நம்ப மாட்டார்கள். இன்று கண்ணீரும் காத்திருப்புமாக கஜானந்திற்காய் அவனின் அம்மா காத்துக் கொண்டிருக்கிறார். கஜானாந் இல்லாமல் அவனது குடும்பம் மட்டுமல்ல, நாங்கள் மட்டுமல்ல அந்தத் தெருவே துயர முகம் அணிந்திருக்கிறது. கொஞ்சப் பொருட்களை வாங்கிக் கொண்டு கஜானந்தின் அம்மா ஒரு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...