Sunday, November 28, 2010

மிதிவெடிக்கிழங்குகள்

பெருநிலத்தின் கதைகள் :09 - நவராஜ் பார்த்தீபன்

முறிப்பு குளக்கட்டு வழியாக போகலாம் என்று சாலோம்நகர் வழியாக போய்க் கொண்டிருந்தேன். வழியில் இருந்த தென்னிந்திய திருச்சபையால் நடத்தப்பட்ட போய்ஸ் கோம் முற்றாக அழிந்திருந்தது. முன்பு அந்த விடுதிக்குப் போய் றேஜினோல்ட்டை அடிக்கடி சந்திருக்கிறேன். அவனின் வசித்த அறை இருந்த கட்டிடம் அப்படியே சரிந்து போய்க் கிடந்தது. அந்த இடம் கடும் யுத்த களமாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த இடத்தில் பெரிய மண் அணைகளும் கிடங்குகளும் அவைகளுக்குள் மிதிவெடிகளுமாக இருந்தது. அந்த யுத்தகளக்காட்சி அப்படியே முறிப்புக் குளத்திற்கால் செல்கிறது. இந்த மண்மேடும் யுத்தகளமும் இரணைமடு வரை நீண்டபடி செல்கிறது. முறிப்பு அழகான இடம். வயல்களும் வாய்க்கால்களும் என்று பச்சையாகவும் குளிர்மையாகவும் இருக்கும். இப்பொழுது அந்த இடமெல்லாம் அழிந்த நிலையில் இருக்கின்றன. சிவப்பு நிறமான மண்வீடுகளை மிக அழகாக அந்த மக்கள் அமைத்திருப்பார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் ஆட்கள் இப்பொழுது மீளக்குடியேறிக் கொண்டிருந்தார்கள். “ஐய்யோ… தம்பி அங்கால போகாதீங்க… ஒரே மிதிவெடி” என்று என்னைப் பார்த்து ராணி அக்கா சொல்லிக் கொண்டு “யாரு இந்தத் தம்பி எங்கயோ கண்டமாதிரி இருக்குது?” என்றபடி எனக்கு கிட்ட வந்தார். “ராணியக்கா என்ன எப்பிடி இருக்கிறிங்க என்னைத் தெரியுதா” என்று அவரைப் பார்த்துக் கேட்டேன். “அட… தீபன்…” என்றார். “எப்படித் தம்பி இருக்கிறீங்க? அம்மா என்ன செய்யுது? அம்மாவ முகாமில இருந்து விட்டிட்டாங்களா?” என்று கேட்டுக் கொண்டே அவர்களின் கூடாரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். “இல்ல அம்மாக்கள இன்னும் விடேல்ல… இந்த விடுறம்… அந்த விடுறம்… என்று காலம் போய்க் கொண்டிருக்குது பாப்பம்…” என்றபடி அவர்களின் பழைய மண் வீட்டைப் பார்த்தேன். ஒரு சுவரைத் தவிர மிகுதி எல்லாம் கரைந்து போயிருந்தது. அக்கம் பக்கம் இருந்த அனேகமான காணிகளில் இருந்த மண் வீடுகள் எல்லாமே இப்படித்தான் கரைந்து போயிருந்தன. ராணி அக்காவைப்போலவே கறுப்பு ராஜா அண்ணாவும் யுத்த அலைக்கழிவால் கறுத்து மெலிந்து போயிருந்தார். மகன் செல்வாவிற்கு வாயில் ஷெல்பட்டு இழுத்து தைக்கப்பட்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டபடி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.

“இந்தப் பெடியன் மளமளன்னு அந்தப் பக்கமாப் போகுது… அதுகளில ஒரே மிதிவெடி. இந்தா இதில அன்னைக்கும் ஒன்ன எடுத்து வெடிக்க வைச்சாங்க… விதைச்ச மாதிரி பெருகிப்போய்க் இருக்குது” என்றார். “ம்… ஏன் தம்பி” என்றார் பதிலுக்கு ராஜா அண்ணன். பக்கத்தில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெடித்த வெடி பொருட்களின் பாகங்களையும் வெற்றுச் சன்னங்களையும் அடுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். “இதுகள்தான் எங்களுக்கு இங்க மிஞ்சிக் கிடந்தது…” என்றார் ராஜா அண்ணா. அந்தக் குழந்தைகளோ மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதி எங்கும் மிதிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளதை எலும்புக் கூடுகள் விழித்திருக்கும் பதாகைகள் எங்கும் நடப்பட்டிருந்தன. வன்னி நிலமெங்கும் இந்த சிவப்பு எலும்புக்கூட்டு; மரங்கள்தான் முளைத்து விட்டன.

அந்தப் பள்ளிக்கூடத்தடியில அன்னைக்கு ஒரு புள்ள மிதிவெடி மிதிவெடி என்னு கத்திச்சுது… என்று பக்கத்தில் இருந்த முதிர்ந்த அம்மா ஒருவர் சொல்லிக் கொண்டு வந்தார். மிதிவெடி எடுக்கப்பட்ட இடத்தில் சின்ன வட்டமாக கிடங்கிருந்தது. முறிப்பு விக்கினேஸ்வராப் பள்ளியில் படிக்கிற இரண்டு குழந்தைகள் அந்தப் பள்ளியின் முன்பாக புதைந்திருந்த வாகன மிதிவெடியை காட்டியிருக்கிறார்கள். உடனே பாதையை மூடி அந்த மதிவெடியை அகற்றப்;பட்டன. பாடசாலை வகுப்பறையின் முன்னாலும் ஒரு மிதிவெடியை பாடசாலைப் பிள்ளைகள் காட்டியிருக்கிறார்கள். அதனால் சில நாள்கள் அந்தப் பள்ளியை மூடி விட்டார்கள். முறிப்புப் பள்ளியின் முன்னால் உள்ள எளிமையான தேநீரகத்தில் ஒரு தேநீரை குடிக்கும் பொழுது சுதர்சனின் ஞாபகங்கள் வந்து கொண்டிருந்தன. “அவன் எங்க இருக்கிறானோ? இல்லையோ? ம்… வெளிக்கிடுவம்” என்று திரும்பவும் முறிப்பு குளக்கட்டால் சென்று அக்கராயன் நோக்கிச் செல்லத் தொடங்கினேன். முறிப்புக்குளம் முடிய ஊற்றுப்புலம் சந்தி வரும் இடத்திலும் மிதிவெடி மரங்கள் பெருகி நின்றன.

கோணாவிலில் சந்தியில் 1996ஆம் ஆண்டு நடந்த விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவுச் சுவரில் எழுதப்பட்ட ஞாபகக் குறிப்பை அழித்து அந்தக் கிராமத்தின் பெயர் புதிதாக எழுதப்பட்டிருந்தது. அந்த விமானத்தாக்குதலில் 14பேர் வரை கொல்லப்பட்டிருந்தார்கள். வெண்புறா அமைப்பும் ஊனமுற்றோர் சங்கமும் இருந்த இடத்தில் பாரிய முகாம் அமைக்கப்பட்டிருந்தது. என்னைக் கண்டதும் முன் காவலரணில் உள்ள சிப்பாய் நெருங்கி வந்தான். “எங்க போறது…” “அக்கராயன்..” “ஏன் போறது?” “சொந்தக் காரரிட்ட…” “ம்… போங்க… போங்க…” அவனின் கட்டளைப்படி சென்று கொண்டிருந்தேன். கோணாவில் சந்தி அழிந்து பாழடைந்திருந்தது. அகதிகளும் அந்தக் கிராம மக்களும் செழித்திருந்த இடம். சந்தியில் அருகில் எப்பொழுதும் சல… சல… என ஒரு வாய்க்கால் பாய்ந்து கொண்டிருக்கும். அந்தக் கிராம மக்களுக்கு அதுதான் நகரம். பக்கத்தில் உள்ள பாடசாலையும் அழிந்து கிடந்தது.

பக்கத்தில் யுனியன்குளம் வற்றிப் போயிருந்தது. தாமரை மலர்களையும் தாமரை இலைகளையும் காணவில்லை. உழுது விட்டதைப்போல காய்ந்து புழுதியாக கநற்துகொண்டிருந்தது. பிறகு வந்த தென்னிந்திய திருச்சபை ஆலயமும் அழிந்து கிடந்தது. அடுத்து யுனியன்குளம் சந்தி வந்தது. அதுவும் அழிந்து காய்ந்து போய் கிடந்தது. யுனியன்குளச் சந்தியில் உள்ள கள்ளுத் தவறணையில் எந்த நேரமும் ஆட்கள் கள்ளருந்திக் கொண்டிருக்கிறார்கள். உருத்திரபுரம், கோணாவில், யுனியன்குளம் என்று வரும் கல்லை எல்லாம் நம் ஆட்கள் உறிஞ்சிக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது எதுவும் தெரியவில்லை. பக்கத்தில் சில கடைகள் இருந்தன. ஒரு பேரூந்துத் தரிப்பிடம் அதுவும் பற்றை மண்டிக் கிடந்தது.

ஸ்கந்தபுரம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். ஸ்கந்தபுரம் சந்தி முழுவதும் மிதிவெடிகள் விதைக்கப்படடிருந்தன. எல்லா இடங்களிலும் சிவப்பு நிறமான அந்தப் அபாயப் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஸ்கந்தபுரம் சந்தியே முழுமையாக அழிந்துவிட்டது. முன்பொரு காலத்தில் எப்படி இருந்த இடம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அங்கிருந்த கடைகள் அதற்குப் பக்கத்தில் இருந்த வீடுகள் எல்லாம் அழிந்து விட்டன. உடைந்த வீடுகளின் உள்ளேயும் வெளியிலும் முற்றங்களிலும் மிதிவெடிகள் புதைத்த அபாயங்கள் சிரித்துக் கொண்டு நின்றன. சில மிதிவெடி அகற்றும் பணியாளர்கள் வீதிகளில் உள்ள மிதிவெடிகளை அகற்றிக் கொண்டு நின்றார்கள்.

அவர்களில் ஒரு முகம் தெரிந்த முகத்தைப் போலிருந்தது. ம்… சசி அக்கா நின்று மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். “சசி அக்கா…” என்று அவருக்கு கிட்டவாச் சென்ற பொழுது “அண்ணே தள்ளி நில்லுங்கோ… மிதிவெடி அகற்றுற இடத்திற்கு வரக்கூடாது. சில வெடிப்புகள் ஏற்படமலாம்” என்று ஒரு பணியாளர் தடுத்தார். “தள்ளி அங்கால நில்லுங்கோ தீபன் வாரன்… என்று விட்டு கிழங்குகளை பிடுங்க தூர் வாருவதுபோல முட்டுக்காலில் இருந்து மிதிவெடிகளை சசி அக்கா பிடுங்கிக் கொண்டிருந்தார். பரவலாக பல பணியாளர்கள் அப்படி முட்டுக்காலில் இருந்து மிதிவெடியை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சரி அரைவாசிக்கு மேலாக பெண்கள்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“அண்ண இதுகள எங்க அள்ளிக் கொண்டு போறியள்?” என்று கேட்டேன். “இதுகளுக்குள்ள நிறைய மிதிவெடிகள் கிடக்குது. சனங்களில்லாத இடங்களில கொண்டு போய்க் கொட்டி மிதிவெடியள அகற்றின பிறகு கொண்டு வந்து கொட்டுவம்…” என்றார் அவர். பக்கத்தில் சில பெரிய வாகனங்களில் மிதிவெடி விதைத்த மண்ணை அள்ளிக் கொண்டு மக்கள் இல்லாத பகுதி நோக்கி கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஆனாலும் மிதிவெடிகளுக்கு அருகாக மக்கள் செல்லும் வழிகள் இருக்கின்றன. வேலையை இடைக்கிடை நிறுத்தி மக்களை பாதையில் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். “அண்ண பயமில்லையே?” என்று பயத்துடன் அவரைப் பார்த்துக் கேட்டன். “பெரிய பயம்தான் இன்சுரன்ஸ் செய்திட்டு வந்திருக்கிறம்…” என்றார். “எங்களில நிறையப் பேருக்கு கால் கை கண்கள இழந்து வீட்டில இருக்கினம். சரியான ஆபத்தான வேலை தம்பி” என்று தலைக்கவசத்தை அணிந்து கொண்டு மிதிவெடிகளை நோக்கி போய்க் கொண்டிருந்தார்.

சல… சல… என்று ஸ்கந்தபுரம் வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. அக்கராயன் குளத்திலிருந்து வரும் அந்த வாய்க்காலில் சில சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு சிறுவனாய் அந்த வாய்க்காலில் குளித்த ஞாபகங்கள் வந்து கொண்டிருந்தன. 1996இல் ஸ்கந்தபுரம் தெருக்களில் எல்லாம் அகதிகள் நிறைந்த காலத்தில் இந்த வாய்க்காலில்தான் அந்த சனங்கள் குளித்துக் கொண்டிருப்பார்கள். வாய்க்காலின் முன்னால் ஒரு தேநீரகம் இருந்தது. அது அழிந்து வெளித்துப் போன வெளியில் இப்பொழுது புதிய தேநீரகம் ஒன்று இருந்தது. அதில் போய் ஒரு தேநீர் குடித்துக் கொண்டிருந்தேன். சசி அக்கா அந்த தேநீரகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காலம் அவருக்கு மிதிவெடிகளை பிடுங்கும் உடையை போட்டு விட்டிருக்கிறது. சசியக்காவுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவரின் கணவர் கமல் தடுப்பில் இருக்கிறார். திருமணம் செய்ய முன்னர் போராளியாக இருந்தமையால் தடுப்புமுகாமில் வைத்து அவரை கொண்டு போய் விட்டார்கள்.

வெள்ளை நிறமாக அவர் அணிந்திருந்த கவசத்தின் முன்பக்கம் கண்ணாடி அமைந்திருந்தது. அந்த கண்ணாடி வெடிக்கும் மிதிவெடியின் தாக்கத்திலிருந்து முகத்தை பாதுகாக்குமா என்று எனக்குள் நினைத்தேன். “என்னப்பன் தீபன்… மணியங்குளமா போறிங்க?” என்றபடி வந்தார். “ம்… மணியங்குளம் எப்படி இருக்குது?” என்று கேட்ட பொழுது முகத்தில் பிரதிபலித்த அவரது உணர்வு மணியங்குளம் எப்படியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது. கண்களில் கண்ணீர் கசிந்து முகம் வாடி வெதும்பியது. “இந்தப் பிள்ளையள பாக்கிறதுக்காக இப்படி மிதிவெடிக்குள்ள போறன்” என்றார்.

மிகவும் ஆபத்தான வேலையை சசியக்கா செய்து கொண்டிருக்கிறார். சசியக்காவை மாதிரி பலர் அதுவும் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இப்படி ஆபத்தான வேலைக்குச் செல்கிறார்கள். இராமநாதன் குடியிருப்பில் இருக்கிற பிரதீபா கல்லுடைக்கும் வேலைக்கு போகிறார். அவரது கணவரும் தடுப்பில் இருக்கிறார். “அவர் நான் இப்பிடி மிதிவெடி அகற்றுற வேலைக்குப் போறன் என்டதும் துடிச்சுப் போனார்… என்ன செய்யிறது?” “வாங்கோ வந்து பீடுங்கிப் பாருங்கள்?” என்பதைப்போல திரும்பும் இடமெல்லாம் இந்த நிலத்தில் மிதிவெடிகள்தான் சிரித்துக் கொண்டிருக்கிறன. பல மிதிவெடிகள் பதுங்கிப் பதுங்கி பலரது கைகளையும் கால்களையும் உயிர்களையும் எடுக்கப் போகிறது. முகங்களை காயப்படுத்தப் போகிறது என்பதை நினைக்க மனம் என்னவோ செய்தது.

“பிள்ளையள் கேட்டால் நான் சொல்லுறேல்ல. அதுகள் ஏதோ கிழங்கு பிடுங்கிற வேலைக்குத்தான் நான் போறன் என்டு நினைக்குங்கள். ஒவ்வொரு மிதிவெடியையும் பிடுங்கேக்க என்ட பிள்ளையள்தான் கண்ணுக்கு முன்னால வருங்கள்…” என்றார். வெம்மையும் புழுதியும் அச்சமும் படிந்த முகத்தை துடைத்தபடி சுடும் தேநீரை குடித்துக் கொண்டிருந்தார். “கண நேரம் நிக்க ஏலாது பேசுவாங்கள். நான் வெளிக்கிடுறன். இப்ப மணியங்குளம்தானே போறிங்க” என்றபடி தலைக்கவசத்தை அணிந்து கண்ணாடியால் முகத்தை மூடிக் கொண்டு உடைககளின் பட்டியை இழுத்துக் கட்டிக் கொண்டு மிதிவெடிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

ஸ்கந்தபுரத்திலிருந்து மணியங்குளத்திற்கு போகும் வழியில் தொடக்கம் முதல் மிதிவெடிகள்தான் வாய் பிளந்து நிற்கின்றன. எல்லாம் அழிந்து பாழடைந்து கிடந்தது. வீட்டு முற்றங்கள் வேலிகள் எல்லாம் மிதிவெடிகள் அகற்றுவதற்காய் உழுது கிண்டப்பட்டிருந்தது. மணியங்குளம் சந்தியும் அழிந்து கிடந்தது. மணியங்குளத்தில் சிறுவர்களும் சத்தமிட்டு குளிப்பதைப் பார்க்க அழகாக இருந்தது. அந்தக் குளத்தில் நானும் நீந்தித் திரிந்திருக்கிறேன். முன்னாலுள்ள மரத்துடன் இருந்த குட்டிக் கோயில் உடைந்து கிடந்தது. மணியங்குளத்து அணைதான் மணியங்குளம் கிராமத்தின் பிரதான வழிபோல பயன்படுகிறது. குடியிருப்பு நோக்கி போய்க்கொண்டிருந்தேன். அகிலனின் காணியும் நகுலேஸின் காணியும் மதிவெடி மயமாக இருந்தது. தெருவின் கரையில் காவலரண்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அகிலன் யாழ்ப்பாணத்தில் யாரோ சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கியிருக்கிறான். நகுலேஸ் மணியங்குளத்தின் மற்றொரு பக்கத்தில் தற்காலிகமாக வசிக்கின்றான்.

மணியங்குளத்தில் நிரந்தரமாக் வசித்து வரும் நகுலேஸ் மற்றும் அகிலன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். இடம்பெயர்ந்து அங்கு தஞ்சமடைந்த காலத்தில் நகுலேஸ் வீட்டுக் கிணற்றில்தான் நாங்கள் குடிப்பதற்கு தண்ணி எடுப்போம். அவர்கள் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு தெற்கிலிருந்து வந்தவர்கள். வந்த காலம் முதல் மணியங்குளத்தில்தான் வசித்து வருகிறார்கள். நானும் நகுலேஸோடு அகிலனும் அந்த இடங்கள் எல்லாம் திரிந்து கொண்டிருப்பம். அந்தத் தெருக்களில் இருந்து கதைச்சுக் கொண்டிருப்பம். ஐய்யனார் கோயில் திருவிழா, வீதி நாடகம் என்று ரம்மியமாயிருந்த கிராமம் அது. சனங்கள் நெருக்கமாக வாழும் மணியங்குளம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். நாங்கள் குந்தியிருந்து கதைச்ச எல்லா இடமும் இப்பொழுது மிதிவெடிகள் விதைக்கப்பட்டு பெரியளவில் விளைந்து அடர்ந்து போயிருக்கின்றன.

குடியிருப்பு வாசலில் ‘மிதிவெடி அபாயம்’ என்ற அபாயப் பலகைக்குமிக அருகாக குழந்தை ஒன்று தடியுடன் நின்று கொண்டிருந்தது. குடியிருப்பின் நடுவில் தொடர்ச்சியாக மிதிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளன. எங்கும் எலும்புக்கூடுகள் சிரிக்கும் பட்டிகளும் பதாகைகளும்தான் நடப்பட்டிருந்தன. 1996 இல் கிளிநொச்சி இடப்பெயர்வுடன் ஸ்கந்தபுரம் அக்கராயனில் குவிந்திருந்த சனங்கள் பலர் அந்தக் குடியிருப்பில்தான் குடியேறினார்கள். அவர்களில் யாழ்ப்பாணம், ஆனையிறவு, பரந்தன் போன்ற நீண்ட காலமாக போரால் பாதிக்கப்பட்ட மக்களும் குடியிருக்கிறார்கள். எல்லாம் கூடார மயமாக இருந்தது. சிவக் கொலுந்தம்மா கூடாரத்திலிருந்து வெளியில் வந்து பார்த்து என்னை அடையாளம் கண்டு கொண்டு வந்தார். மிகவும் சத்தமாக பேசும் சிவக்கொலுந்தம்மா இப்பொழுது மிக மெதுவாகவே பேசினார். குடியிருப்பில் அவரை நிறையப் பேருக்குப் பிடிக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்.

“எங்க சுதன்?” என்று கெட்டேன். “அவனைத்தானே இன்னும் காணேல்ல அய்யா…” என்று மெலிந்த முகம் கோணலாகி துயரடைய அழத் தொடங்கினார். “அப்ப பவித்திரன்? அவன் தடுப்பில இருக்கிறாள்” என்றார். “ஐய்யோ! இந்த தாயுக்கு இன்னுமா துயரம்?” என்று மனம் வலித்தது. சிவக்கொலுந்தம்மாவின் கணவர் கதிரவேலு முதலில் போராட்டத்தில் களப்பலியானார். பின்னர் அவரின் இரண்டு பிள்ளைகளும் போராட்டத்தில் களப் பலியானவர்கள். தாங்க முடியாத கோலத்தில் இருந்த அந்தத் தாய் இன்னும் மெலிந்து போயிருந்தார். அவருக்கு ஆறுதலாக பகிர வார்த்தைகள் போதாதவை. கணியில் சிதைந்த சிதைவுகளை நிலத்தில் இருந்தபடி பொறுக்கிப் பொறுக்கி அள்ளிக் கொண்டிருந்தார். வாழ் நிலத்திற்கான எல்லா வகையான தியாகங்களின் பின்னரும் துயரங்களைக் கடந்தும் அவர் சிதை நிலத்து சிதைவுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

கூடாரத்திற்கு வெளியில் தென்னைம் கன்றுக்கு கீழாக இருந்து லட்சுமி அம்மா ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். “இஞ்ச பார் தீபன…” என்று புன்னகையுடன் வரவேற்றார். அவர்களளை மூன்று வருடத்திற்கு பிறகு அன்றுதான் சந்தித்தேன். சந்திக்கும் பொழுது ஏற்பட்ட மகழ்ச்சியைவிட அவர்கள் ஒவ்வொருதரும் பூண்டிருந்த கோலம் மனதை மிகவும் வலிக்கச் செய்தன. லட்சுமி அம்மாவின் கூடாரம் காற்றுக்கு பட.. பட என்று அடித்துக் கொண்டிருந்தது. காணியில் நின்ற தென்னம் கன்று சற்று வளர்ந்து நிழல் பெய்து கொண்டிருந்தது. சுகியக்காவின் கூடாரமும் பக்கத்தில்தான் இருக்கிறது. “தம்பி நான் தனியாள் என்டுறதால ஒன்டுமில்லயாம்…” என்றார் சுகியக்கா. வீட்டுத்திட்டம், தகரம் என்று ஒன்றுமே தரவில்லை என ஏமாற்றத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதி யுத்தத்தில் பலியான சுரேஸின் மனைவி நிசாந்தி கையில் ஒரு குழந்தையுடன் நின்றாள். மற்றைய குழந்தை நிலத்தில் அமர்ந்திருந்து விளையாடிக் கொண்டிருந்தது. அசோக் அண்ணையும் ராதிகாவும் மாத்தளனில் செல் விழுந்து இறந்து விட்டார்கள். அவர்களின் குழந்தைகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“தீபன் வாடா ரொட்டி சாப்பிட…” என்றார் லட்சுமி அம்மா. ரொட்டிகளை சுட்டுக் கொண்டிருக்கும் லட்சுமி அம்மாவுக்கு அருகில் இருந்த பாத்திரத்தில்; அவர் சுட்ட அழகான ரொட்டிகள் கிடந்தன. எனக்கு ரொட்டி என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். இடம்பெயர்ந்து மணியங்குளத்தில் தஞ்சமடைந்த காலத்தில் ஏற்பட்ட வறுமைச் சூழலில் ரொட்டிதான் எங்கள் முக்கிய உணவாகியது. ரொட்டி ஏழைகளின் உணவு. “தேங்காப்பூ போடாமலும் ரொட்டி நல்லா சுடலாம்…” என்று லட்சுமி அம்மா சொல்லுவார். வெறும் மாவில் உப்புத் தண்ணியை மட்டும் விட்டுச் சுட்டு தன் பிள்ளைகளுடன் எனக்கும் சேர்த்துத் தருவார். கிளிநொச்சி யுத்த காலத்தில் பெருங்காடாயிருந்த அந்தப் பகுதியில் சனங்கள் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள். இன்று பலர் அங்கு நிரந்தரமாய் வாழ்கிறார்கள். எல்லா வீடுகளும் எல்லா மனிதர்களும் போராட்டத்தில் உன்னதமான பங்காற்றியிருக்கின்றனர். இன்று எத்தனையோ இழப்புக்களுக்கு முகம் கொடுத்து வாழ்வை மீளத் தொடங்கியிருக்கிறார்கள். நான் ரொட்டியை சாப்பிடத் தொடங்கும் பொழுது கைகளில் சிறிய ரொட்டித் துண்டகளை இறுக பிடித்தபடி ஒற்றைக் கண்ணை இழந்த சுகியக்கா, அசோக் ராதிகாவின் இரண்டு பிள்ளைகளுக்கும் “வெடிபொருட்கள் ஆபத்தானவை! அவற்றுக்கு கிட்டே செல்லாதீர்கள்!! அவை அபாயமானவை!!!” என்ற யுனிசொப் அமைப்பு ஒட்டியிருந்த சுவரொட்டியை காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...