Sunday, November 28, 2010

பொய்க் கால்கள்


பெருநிலத்தின் கதைகள் : 06 - நவராஜ் பார்த்தீபன்

கோபியின் அப்பாவின் நரைத்த தாடி முகத்தை மூடியிருந்தது. அலைச்சலும் துயரமும் அவரது முகத்தில் பெருங்களைப்பை வெளிப்படுத்தின. அவர் பேசுவதற்கு ஏலாதவரைப்போல குந்திக் கொண்டார். பாருங்கய்யா கோபியின்ட அப்பாவை… என்று கோபியின் அப்பாவை காட்டியபடி மீண்டும் அழத்தொடங்கினார் கோபியின் அம்மா. கோபியின் அம்மாவின் தலையிலிருந்த முடி முழுவதும் உதிர்ந்து போயிருந்தது. முகம் அழுதழுது கண்ணீர் பொருக்குகள் விழுந்திருந்தன. அழுவதும் திடீரென மௌனமாக யோசிப்பதுமாக மாறி மாறி முகம் சுருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் கூடாரத்திற்குள் நுழைந்து ஒரு சோடி பழைய செருப்புக்களை எடுத்துக் கொண்டு வந்தார். இது கோபி போட்ட செருப்பு சிலநேரம் என்ட வயிறு என்ட பிள்ளையை நினைச்சு எரியேக்க இந்த செருப்புக்களை வயித்துக்குள்ள வைச்சுக் கொண்டு கிடப்பனய்யா… என்று விம்மினார். அவன் பூட்டி விட்டு பொத்தானோட சேட்டக் கழற்றி வைச்சிட்டு போனான். அத எடுத்து பாப்பன். கடைசியா போகேக்க தன்ட உடுப்புப் பெட்டிய காட்டி நீங்க கஷ்டப்படேக்க இத திறந்து பாருங்க என்டான். ஒரு நாள் திறந்து பாத்தா தன்ட உடுப்புகளயும் தன்ட கொப்பிகளையும் வைச்சதோட இருப்பத்தையாயிரம் ரூபா காசையும் வைச்சிருந்தான். நாங்கள் எப்பிடி ஐய்யா அத எடுத்து செலவழிக்கிறது? என்றபடி உடுப்புப்பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.

கோபி இறுதிநாள் காணாமல் போயிருந்தான். ஆனால் கஜானந்தைப்போல உயிருடன் இருந்தால் திரும்பி வருவேன் என்ற வாக்குறுதிகளை கொடுத்துச் சென்றிருந்தான். யாழ்ப்பாணத்தில எங்கயாவது இருப்பானோ? எங்கள எங்கயாவது தேடிக் கொண்டிருப்பானோ? பாதை தெரியாம எங்கயாவது போயிருப்பானோ? காயப்பட்டு எங்கயாவது கிடப்பனோ என்று தொடர்ந்து எண்ணற்ற கேள்விகளை கோபியின் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். என்ட புள்ள வருவான். அவன் வருவான் என்டதாலதான் உயிர கையில பிடிச்சு வைச்சிருக்கிறன். இன்னும் ஒரு வருசம் பாப்பன். வராட்டி நான் செத்துப் போயிருவன் தம்பி… என்றபடி மீண்டும் விம்மி அழத் தொடங்கினார். கோபியின் பெரியம்மாவின் தலையிலும் முடியில்லை. தலை மொட்டையாக இருந்தது. கோபியை நினைத்து நினைத்து அழுது அவரது முடியும் உதிர்ந்து போய்விட்டது. யாழ்ப்பாணத்திலயும் வவுனியாவிலயும் ரோட்டுகளில பாருங்க தீபன். எங்கயாவது கோபி நிப்பான். நிண்டா அவனுக்கு சொல்லுங்க அம்மா பாத்துக் கொண்டிருக்கிறா என்டு. என்ட புள்ள ஓடி வருவான் என்னப் பாக்க…

கோபியின் அம்மாவின் வார்த்தைகள் தடுக்க முடியாத துயர ஆற்றைப்போல பேரெடுப்பில் பாய்ந்து கொண்டிருந்தன. பிள்ளையை இழந்த தாயின் பெருந்துயரும் ஆற்ற முடியாத காயமும் வெதும்பிக் கொண்டிருந்தது. போங்க… கோபியைப் பாருங்க என்ற வார்த்தைகள் கோபியை தெருக்களில் என்னை தேட வைக்கும் அளவில் பாதித்திருந்தது. கோபியை உன்மையில் ஏதாவது ஒரு தெருவில் சந்திக்க முடியுமா என்ற ஏக்கத்தை எனக்குள்ளும் உண்டு பண்ணியிருந்தது. ஆனாலும் கோபியின் அம்மாவை அடுத்த முறை சந்திக்கும் பொழுது என்ன சொல்லப் போகிறேன் என்ற கேள்வி மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. கோபியும் கஜானந்தும் எங்கு போயிருப்பார்கள்? காணாமல் போன பிள்ளைகள் எல்லோரும் எங்கு போயிருப்பார்கள். அவர்கள் ஏதோனும் ஒரு தெருவில் தாய்மார்கள் நினைப்பதைப்போல அலைந்து கொண்டிருப்பார்களா? வருவதற்கு வழிதெரியாமல் நிற்பார்களா? அல்லது நினைவிழந்து இருப்பார்களா?

மணியக்கா அப்படித்தான் சுரேஸ் வருவான் என்று நம்பியிருக்கிறார். இந்தத் தாய்மார்களும் தந்தைமார்களும் சகோதரர்களும் உறவுகளும், சித்திரவதை செய்யப்படும் இளைஞர்களின் புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்தருப்பார்களா? யார் தான் அவற்றை கொண்டு சென்று காண்பிக்க முடியும். முகம் கட்டப்பபட்ட பிள்ளைகளும் சுடப்படும் பொழுது பின்பக்கமாக காட்டப்படும் பிள்ளைகளும் தங்கள் பிள்ளைகளாக இருக்கலாம் என நினைப்பார்களா? எலும்புக்கூடுகளை மீட்கும் பொழுது இவர்கள் தங்கள் பிள்ளைகளை தேடி வருவார்கள். சித்திரவதையினால் கொல்லப்பட்ட பிள்ளையில் மிஞ்சிய துண்டங்களில் எப்படி முகம் தெரியும்? சீருடைகளோ, தகட்டுத் துண்டுகளோ, சட்டைத் துண்டுகளோ, காற்சட்டையின் துண்டுகளோ மணிக்கூடுகளோ, மோதிரங்களோ, சங்கிலிகளோ இறப்பர் வளையங்களோ இந்த பெற்றோர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் பெருநிலம் கிளறிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் அப்பாண்ணாவின் வீட்டை நோக்கி நானும் யசோவும் போய்க் கொண்டிருந்தோம். மகாத்மா வீதி என்ற அந்த ஒழுங்கை வரும் பொழுது எனக்கு முதலில் ஆங்கிலக்கல்வி ஞாபகம்தான் வந்தது. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது ஆங்கிலக் கல்வி நிலையத்திற்கு போவதென்பதே பெரிய தகுதியாகி விட்டது. நீ ஆங்கிலக் கல்வி நிலையத்திற்கு போறாயே? என்பது பெரிய கேள்வியாகிவிட்டது. இந்த தொல்லை தாங்க முடியாமல் நானும் ஒரு நாள் ஆங்கிலக் கல்வி நிலையத்திற்கு போனேன். வாங்கோ இருங்கோ என்று அங்கு கல்வி கற்பித்த ரீச்சரும் சேரும் இருத்தினார்கள். கோழிக்கூடு மாதிரி கம்பிகளால் கட்டப்பட்ட இந்த வகுப்பறைகள் எனக்கு சிறைச்சாலை மாதிரி தெரிந்தன. ஆங்கிலம் என்றாலே பேய் என்பதைப்போல இருந்த எனக்கு அன்றோடு ஆங்கிலக் கல்வி நிலையத்திற்கு விடை கொடுக்க வைத்தது. ஆனால் குமணனன். கோபி, நவப்பிரசாத், சுமன் எல்லாம் போவார்கள். ஆங்கிலக் கல்வியுடன் அந்த ரீச்சரும் சேரும் மட்டுமல்ல, அதற்கு முதலில் கற்பித்த இந்திரா ரீச்சரும், உருத்திரபுரம் பாடசாலையில் படிப்பித்த அன்டன் சேரும் சிம்ம சொப்பனங்களாகின.

இந்திரா ரீச்சரும், ஆங்கிலக்கல்வி நிலைய சேரும் ரீச்சரும் சத்ஜெய யுத்தத்துடன் இடம்பெயர்ந்து கிளிநொச்சியை விட்டே போய் விட்டார்கள். இந்திரா ரீச்சர் மாமரத்திற்கு கீழே மணல் பரப்பி சுற்றி வர இருத்தி படிப்பித்துக் கொண்டிருப்பார். ஆங்கிலத்தோடு தமிழ் கணக்கு போன்ற பாடங்களும் படிப்பிப்பார். முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சத்ஜெய யுத்தம் தொடங்கும்வரை எங்கள் உயர் கல்வி நிலையம் இந்திரா ரீச்சரின் மாமரம்தான். மலையகத்தில் இருந்து 1970களில் இனக்கலவரத்தால் துரத்தப்பட்ட இந்திரா ரீச்சரை சத்ஜெய யுத்தம் கிளிநொச்சியிலிருந்து திருப்பி கலைத்து விட்டது.

மகாத்மா வீதி சனங்களின் நடமாட்டத்தை இழந்து பாழடைந்திருந்தது. ஆங்கிலக் கல்வி நிலையம் இருந்த இடத்திற்கு பக்கத்தில் வன்னி யுத்தத்திற்கு முதல் அருணகிரி கல்வி நிலையம் இருந்தது. ஓலைக் கொட்டில்களும் கழிவு மரத்துண்டுகளால் செய்த இருக்கைகளும் எழுதும் தட்டுக்களும் அழிந்திருந்தன. முந்தி நானிருந்து படிச்ச இடத்தை பாரடா தீபன்… என்று யசோ சொன்னான். இரவிரவாக அந்த இடத்தில் இருந்து யசோ படித்துக் கொண்டிருப்பான். நானும் யசோவும் இந்த வகுப்பறைகளில் இருந்து பாடங்கள் குறித்து விவாதித்திருக்கிறோம். வகுப்பறை கூரையை இழந்திருக்க மேலாக இருக்கும் புளியமரம் செழிப்பிழந்து கிடந்தது.

அப்பாண்ணாவின் வீடு இருந்த இடத்தில் சுவர் துண்டுகள் சில உடைந்து கரைந்து விழாமல் நின்றன. பழைய வீடு இருந்த இடத்தில் தகரங்கள் மூடப்பட்டிருந்தன. அப்பண்ணா யார் வந்திருக்கிறது என்று பாருங்க… என்றபடி யசோ அப்பண்ணாவை அழைத்தான். தரையில் கிடந்த அப்பண்ணா காலை இழுத்தபடி ஊன்றுகோல்களை ஊன்றியபடி எழுந்து வந்தார். இங்க பார் தீபன… என்றார் சிரித்தபடி. எப்படி இருக்கிறீங்கள்? என்று கேட்க முடியாமல் என்ன செய்யிறீங்க என்றேன். முதலில் தரப்பால் தந்தாங்கள். இப்ப தகரம் தந்திருக்கிறாங்கள். சும்மா மூடிக் கொண்டு இருக்கிறம். ஐஓஎம் நிறுவனத்திட்ட குடுத்துதான் வீடு கட்ட வேணும் வாரம் என்டவங்கள் காணேல்ல பாத்துக் கொண்டிருக்கிறன். என்று மாமரத்துடன் சாய்ந்தபடி ஊன்றுகோல்களை இறுகப் பிடித்தார்.

அப்பாண்ணாவின் காலை காணவில்லை. அவர் தனது காலை இழந்து போயிருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது என்னாலே தாங்க முடியாதிருந்தது. அப்பண்ணா பொய்க்காலை தூக்கி சதைந்த மண் திட்டில் வைத்துக் கொண்டு மீண்டும் என்னோடு பேசத் தொடங்கினார். ஜெயக்குட்டியை நான் தேடினேன். அவனும் மற்றப் பிள்ளைகளும் நந்தினி அக்காவும் வவுனியாவுக்கு போயிருக்கிறார்கள் என்று அப்பண்ணா சொல்லியபடி நீங்கள் இருந்து படிச்ச இடத்தை பாத்தியே எப்பிடி இருக்குது? என்றார். வெறும் நிலமாய் அழிந்து போயிருந்தது. நன் சைக்கிள் ஓடுவனடா என்றபடி மீண்டும் என்னைப் பாத்து புன்னகைத்தார். ஒற்றைக் காலை இழந்து சைக்கிள் ஓடுவதை தான் அடைந்த சாதனையாக அப்பண்ணா மகிழ்வதை நாங்கள் புரிந்து கொண்டோம். உன்மையாகவா? என்ற வார்த்தைகளுடன் அப்பண்ணாவின் பொய்க்காலை நான் வடிவாக பாத்துக் கொண்டிருந்தேன்.

எனக்கொரு பொய்க்கால் தாங்க… என்ற வார்த்தைகளை நான் பல இடங்களில் கேட்டிருந்தேன். காலில்லாத ஆக்களுக்கு பொய்க்கால் குடுக்கிறம் வாங்க… என்று இராணுவம் ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தது. எங்கட காலை எடுத்திட்டு இப்ப பொய்க்கால் தாரினம் என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன. ஒரு கால ஒரு என்ஜியோ தந்தது. அத வைச்சிட்டு இன்னொரு கால் வாங்கினால் மாறி மாறி போடலாம் என்று அப்பண்ணா சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அறிவிப்பிற்பால் கிளிநொச்சியில் அன்று பொய்க்காலுக்காக நிறையப்பேர் படயெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஊன்றுகோல்களுடன் வரிசையாக அமைதியாக குழப்பமின்றி அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பொறுங்கப்பா எல்லாருக்கும் கால் தருவினம் என்ற ஆறுதல் வார்த்தைகளும் கேட்டன. ஊன்றுகளை ஊன்றியபடி சிலர் பொய்க்கால்களை போட்டுக் கொண்டும் சிலர் கால் இலலாமலும் நின்று கொண்டிருந்தார்கள். ஏனப்பா காலைப் போட்டுக் கொண்டு வந்தனி கழட்டி வைச்சிட்டு வந்திருக்கலாமே? என்று ஒரு வயது முதிர்ந்த அய்யா சொல்லிக் கொண்டிருந்தார்.

கால்களற்றவர்களின் நகரம் என்றும் கால்களற்றவர்களின் நிலம் என்றும் எனக்கு அழைக்கத் தோன்றுகிறது. கோதாரி விழுந்த செல் என்ன மாதிரி விழுந்து இந்தக் காலை கொண்டு போனதெண்டுதான் எனக்கு தெரியேல்ல. ஏதோ பெரிய சத்தம் கேட்டது. முழிச்சா காலைக் காணேல்ல. ஈழப்போர் தொடங்கியதிலிருந்து கால்களை இழந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். போராளிகளில் பலர் கால்களை இழந்து போயிருந்தார்கள். ஆனாலும் கால்கள் இருப்பவர்களைவிட அவர்களின் பயணங்களும் பணிகளும் பலத்துடனிருந்தது. கால்களின் காயங்களுடனோ, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையிலோ பல போராளிகள் இருந்தனர். நானும் நினைவு தெரிந்த நாட்கள் முதலாக பலர் கால்களை இழந்து திரிவதை பார்த்து வருகிறேன். சிலவேளை கால்கள் துண்டிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருப்பதைபோல் யுத்தக்கனவுகள் எனக்கு வரும் துடித்து எழும்பி கால்களை பார்ப்பேன். நித்திரையை விட்டு முழித்ததும் எனது கால்கள் இருக்கின்றன என்று பெரிய ஆறுதலாக இருக்கும். அய்யோ! உனக்கு கால் இல்லாமல் போக கனவு கண்டனான் என்று யாராவது சொன்னால் கால் போகத்தான் போகுது என்று மனம் பதைபதைக்கும். எங்கள் நிலத்தில் எங்கள் நகரங்களில் எங்கள் கிராமங்களில் எங்கள் தெருக்களில் எங்கு கால் வைத்தாலும் கால் போகுதோ தெரியேல்ல… என்ற பயம் எல்லோரையும் பீடிக்கும். கண்ணிவெடிகளின் புதைந்திருக்கும் வெடிக்காத குண்டுகளின் நிலமாக பெருநிலம் மாறிவிட்டது.

அடே இதுக்கே நீ இப்படி பாக்கிறா முரசுமோட்டையில இருக்கிற இராசேந்திரத்தைப் போய் பார் இரண்டு காலயும் செல் ஒட்டக் கொண்டு போயிற்றுது… என்றார் அப்பண்ணா. இராசேந்திரத்துக்கு நான்கு பெண்பிள்ளைகள். கோரைக்கண்கட்டு என்ற குடியிருப்பில் இருக்கிறார்கள். செல் விழும்பொழுது மனைவியும் பிள்ளைகளும் படுகாயம் அடைந்தார்கள். அவருக்கு இரண்டு கால்களும் முற்றாக இல்லாமல் போய் விட்டது. இப்பொழுது ஒரு பெட்டிக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். சீ… தருமபுரத்தில வைச்சு இரவு கிபீர் அடிச்சதில கால்கள் இரண்டும் போயிட்டுது. இரவென்டபடியாலதான் நான் கால்களைப் பறிகொடுத்தன். என்று இராசேந்திரம் என்னைப் பாத்து சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கடைசி மகள் லக்சிகா பாடசாலையால் வந்து வெள்ளை உடுப்புடன் அவருக்கு ஒத்தாசை புரிந்து கொண்டிருந்தாள். உயரமாக உள்ள பொருட்களை எடுத்துக் கொடுப்பதும். இராசேந்திரம் அண்ணனை சக்கர நார்காலியில் வைத்து தள்ளுவதுமாக லச்சிகா தகப்பனுக்கு உதவிக் கொண்டிருந்தாள். இந்தப் பிள்ளையள படிப்பிக்க வேணும். எப்பிடி வளக்கிறது என்டு சிலவேளை மனம் உடைஞ்சும் போகும். நாங்கள் எல்லாரும் இப்பிடி நினைச்சா என்ன செய்யிறது? வாழத்தானே வேணும். இப்பிடியே விட்டிட்டு சாகிறதே? சாவில எத்தின பாடுகள பட்டம் என்று வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தார்.

தம்பி! இந்த இடத்தில கடையை போட வேணாமாம். முகாமில அருசிய பருப்ப வித்த காசில இந்த இடத்தில வந்து வெத்தில பாக்கு சீவல் என்டு வித்துத்தான் கடையை துடக்கினான். பிறகு வீடு கட்டத்தந்த காசில என்டு ஒருமாதிரி கடையை போட்டால் கடையை திருப்பி பிடுங்கிப் போட வேணுமாம்… என்ன செய்யிறது என்டு தெரியேல்ல? முற்றாக துண்டிக்கப்பட்ட கால்கள் இருந்த பகுதியை தடவிக் கொண்டு சொன்னார். அவர் நடக்க வேண்டிய நிர்பந்தத்தை அவரது கடைசிப் பெண்குழந்தை முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தார். எனக்கோ போன கிழமை பாத்தா துசாரஞ்சினி என்ற அக்கராயன் மகா வித்தியாலய பாடசாலை மாணவியும் நினைவுக்கு வந்தாள். ஆனைவிழுந்தான் சந்தியில் கடை வைத்திருக்கும் துசாரஞ்சினி ஒரு காலை இழந்திருந்தாள். மற்றையகாலும் சிதைந்து போயிருந்தது. அவளது இரண்டு கால்களும் பொய்க் கால்களைப் போலத்தானிருந்தன. மிக நெருங்கிப் போய் காலைப் பாhத்த பொழுது சிதைந்த கால் பொய்க்காலைப்போல சிதைந்து மாறியிருந்தது. அவளது அம்மா வைத்திருக்கும் சாப்பாட்டுக் கடையின் பின்னால் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் sபொய்க்காலை கழற்றி வைத்து விட்டு சிதைந்த காலில் இலையான்கள் மொய்க்காதபடி பழைய சீலையால் மூடியிருந்தாள். புண் இன்னும் ஆறேல்லை தீபன்ண... திருப்பி வெட்டி ஒப்பிரேசன் பண்ணினால் காலை எடுக்க வேண்டி வந்திரும் என்டு டொக்டர் சொன்னவர். ஆனா புண் மாறாமல் காலை எடுக்க வேண்டி வந்திருமோ தெரியெல்ல... என்று முகத்தை கோணிக் கொண்டு சொன்னாள். பொய்க்காலை போட்டுக் கொண்டு சிதைந்த காலை வைத்துக் கொண்டு துசாறஞ்சினி சைக்கிளில் வகுப்புக்கு செல்லத் தொடங்கினாள்.

துசாரஞ்சினியபை; போலவே வினோதினி என்று அவளுடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கும் கால்கள் சிதைந்திருந்தன. வினோதினி ஊன்று கோல்களின் உதவியுடன்தான் நடப்பாள். சிகிச்சை அளிக்கும் பொழுது அவளது கால் கட்டையாய் போய் விட்டது என்றும் மீண்டும் காலை சத்திரசிகிச்சை செயய வேண்டும் என்றும் வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏதோ கிடக்கிற துண்டுகள வைச்சு ஒப்பிரேசன செய்து நடக்க நிறையப்பேர் ரை பண்ணினம். நானும் இந்த பொய்க்கால்களப் போட்டு நடப்பம் என்டு நடக்கிறன் என்றான் ஜெயந்தன். ஜெயந்தன் பூநகரி வில்லடியில் வசிக்கிறான். அவனுக்கு முழங்கால்களுடன் இரண்டுகால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன.

ஜெயந்தன் யாழ்ப்பாணம் வரும் பொழுது யாழ் நகரத்திற்கு என்னை வரும்படி கேட்டான். நானும் அவனை சந்திக்க ஆவலுடன் வந்தேன். நான் அதற்கு முன்பு ஜெயந்தனைப் பார்த்தில்லை. எங்க எப்பிடி இருக்கிறாய்? என்று நான் கேட்ட பொழுது ஊன்று கோல்களுடன் பஸ்தரிப்பிட இருக்கையில் இருக்கிறேன் என்றான். நானும் தேடிக் கொண்டு வந்தேன். அப்பண்ணாவை மத்திய கல்லூரியில் தேடிய மாதிரித்தான். எனக்கு குறுக்கும் மறுக்குமாக சிலர் ஊன்று கோல்களுடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் தங்களின் கைகளுக்கு பக்கமாக ஊன்றுகோல்களை வைத்திருக்கிறார்கள். என்னை அடையாளம் படித்தபடி ஜெயந்தன் எழுந்தான். பற்களை இறுக்கியபடி சற்று தடுமாறித் தடுமாறி நடப்பேன் என்ற தைரியத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

கால்களை எடுத்துக் கொண்டு போய் எங்க எப்படி ஒட்டுறது என்டு தெரியேல்ல. என்ட கால் துண்டாய் விழேக்க எடுத்துக் கொண்டு வரவேணும் போல கிடந்தது என்று பிரபா அண்ணா சொன்னார். என்ட கால்கள் துணடாகி விழேக்க அத விட்டிட்டு வர எனக்க பெரிய கவலையாய் இருந்தது என்று காலை விட்டு வந்த துயரத்தை சொல்லிக் கொண்டிருந்தார். முந்தி பின்னேரத்தில சும்மா இருப்பனே? எந்த நேரமும் கிராவுன்ட்தான். கால்களால பந்தை தட்டிக் கொண்டிருக்க வேணும் போல கிடக்கும். இப்ப வீட்டில கிடக்கிறன். பூநகரிக்கு போய்க் கொண்டிருக்கும் பொழுது நல்லூரில் வைத்து ரங்கன் என்று இரண்டு கால்களையும் இழந்த ஒரு அண்ணனைக் கண்டேன். சக்கரநாற்காலியில் தெருவைப் பாத்துக் கொண்டிருந்தார். அவருக்கு பொழுதுபோக்காகவும் குடும்பத்தை கொண்டு நடத்தவும் ஒரு பெட்டிக்கடையை போட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

எப்பிடி உழழைச்ச பெடியன்? எப்பிடி ஓடியாடித் திரஞ்ச பெடியன்? இப்ப நாங்கள் குழந்தையள மாதிரி தூக்கி கிடத்தி இருத்த வேண்டி இருக்குது… நாங்கள் என்னய்யா பாவம் செய்தனாங்கள்? எப்பயும் இந்தப் பெடி வயலைக் உழுது பயிர் வளரத்துக் கொண்டிருந்தான் என்று ரங்கனின் அம்மா அழுது கொண்டிருந்தார். ரங்கன்தான் வீட்டில் மூத்த பிள்ளை. அவனுக்கு இளையவர்களாய ஐந்து கசோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கண்கலங்கியபடி ரங்கனைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

கால்களுக்காக வரிசை இன்னும் நீண்டு கொண்டிருந்தது. கால் கொடுக்கும் நிகழ்வில் என்ட பிள்ளைக்கு ஒரு கால் தாஙகோ என்று குழந்தை ஒன்றை தூக்கி வந்தபடி ஒரு இளந்தாய் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை கால் இழந்ததையும் பொய்க் கால்களையும் அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தது. அப்பண்ணா சிரித்தபடி சைக்களில் சென்று கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...