Friday, January 14, 2011

அம்மா இல்லாத வீடு

பெருநிலத்தின் கதைகள் : 10 அம்மா இல்லாத வீடு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்


சுரேன் முற்றத்தில் இருந்து சட்டி பானைகளை கழுவிக் கொண்டிருந்;தான். அந்த சட்டி பானைகள் அழகை இழந்து போயிருந்தன. கறுத்து ஊத்தை பிடித்திருந்தது. தம்பி அந்தத் தாச்சிய எடுக்குக் கொண்டு வாடா கழுவுறதுக்கு... என்று தன் தம்பியை அழைத்துக் கொண்டிருந்தான் சுரேன். இதே முற்றத்தில் வசந்தாக்கா இருந்து கொண்டு சட்டி பானைகைள அழகாக கழுவும் காட்சிகள் என் கண்ணுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தன. கிழிந்த பாதிச் சரத்தைக் கட்டிக் கொண்டு குனித்திருந்தபடி கழுவிக் கொண்டிருந்தான். அவனின் தம்பி விதுசாந்தன் கூரையில்லாத வீட்டுக்குள் இருந்தான்.

வசந்தாக்காவின் சொந்த இடம் பழைய முறிகண்டி. றோசா அண்ணன் அவரை திருமணம் முடிந்த காலத்தில் சிறுவனாக இருந்த என்னை தன் சைக்கிளில் ஏற்றி பழைய முறிண்டிக்கு கூட்டிக் கொண்டு செல்லுவார். நீங்க கலியாணம் பண்ணினதுக்கு நான் இந்த காடெல்லாம் அலைய வேண்டிக் கிடக்குது... என்று றோசா அண்ணனை நான் நக்கலாக சொல்லுவேன். என்னைக் கூட்டிக் கொண்டு போகும் பொழுது முறிகண்;டி பிள்ளையார் கோயிலில் இறங்கி கும்பிட்டிட்டு எனக்கு கச்சான் கடலை எல்லாம் வாங்கித் தருவார். கிளிநொச்சியில் இருந்து பழைய முறிகண்டி போய் சேருவது எனக்கு ஏதோ பெரிய பயணத்தைப் போல இருக்கும். காலையில் புறப்பட்டால் மதியம் போய் சேர்ந்து விடலாம். முறிகண்டியில் இறங்கி காலைக் கழுவிட்டு அந்த மடத்தடியில் போய் இருப்பன். வுhவன்டா கும்பிட.. என்று றோசா அண்ணன் அழைப்பார். சீ நான் கும்பிடேல்ல.. என்று விட்டு இருப்பேன்.

அந்த மடத்திற்கு மேல் நல்ல குளிர்மையான மரங்கள் நிறைய நிற்கின்றன. புளியமரம் ஆலமரம் எல்லாம் இருக்கிறது. அந்த மடத்தில் உள்ள கட்டுக்களில் படுத்து உறங்கினால் மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பூசகர்தான் முறிகண்டிப் பிள்ளையார் கோயிலில் பூசை செய்து வந்தார். அவருடன் எப்படியும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் அந்தக் கோயிலுக்கு செல்லுவேன். 1993களில்தான் இந்த சம்பவங்கள் நடந்தன. யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் வவுனியாவுக்கும் போற ஆட்கள் பலர் அந்த மடங்களில் படுத்துக் கிடப்பார்கள். ஆதரவற்றவர்களும் அந்த மடத்தில் வந்து படுத்துக் கிடப்பார்கள்.

சில வீடுகளில் முதியவர்கள் நான் பேசாமல் போய் முறிகண்டிப் பிள்ளையரின்ட மடத்தில படுத்திருவன் என்று வெறுட்டுவார்கள். பெரியம்மா எதற்கெடுத்தாலும் முறிகண்டியானே... என்று சொல்லுவார். அடிக்கடி நேத்தி வைத்து விட்டு போய் தேங்காய் உடைப்பார். இது மட்டும் நடந்தால் நான் முறிகண்யானிட்ட நடந்து போய்; தேங்கா உடைப்பன்... என்று சொல்லுவார். முறிகண்டிப் பிள்ளையார் கோயின் முன்னால் உள்ள தேங்காய் உமைடக்கும் தொட்டிலில் தேங்காய் சிதறல்கள் எப்பொழுதும் நிறைந்து கொண்டிருககும். அந்த தேங்காய் சிதறல்களை வெட்டி கொப்பராவாக காய வைத்து பிறகு எண்ணையாக்கி விக்கிறது என்று பெரிய நிருவாகம் முறிகண்டிக் கோயிலிலல் இயங்கியது. முறிகண்டிப் பகுதியில் வசிக்கிற ஆட்கள் பலர் அங்கு வேலை செய்வார்கள்.

போய் இறங்கியதும் கச்சான் கச்சான்... என்று கூவும் சத்தம் கேட்கும். வாங்கோ வாங்கோ கால் கழுவலாம்... கற்பூரம் வாங்கலாம்... கச்சான் வாங்கலாம்... தேத்தண்ணி குடிக்கலாம்... வாங்கோ வாங்கோ என்று போட்டி போட்டு கூவுவார்கள். பேரூந்தை விட்டு இறங்கும் பயணிகள் எந்தக் கடைக்கு செல்லுவது என்று தடுமாறுவார்கள். முறிகண்டிக் கச்சான் மிகவும் தனித்துவமான சுவையானது. முறிகண்டிக்குப் போனால் கச்சான் வாங்குவது ஒரு பழக்கம். முறிகண்டியை கடக்கும் பிரயாணிகளின் கையில் நிச்சயம் கச்சான் இருக்கும். கச்சானை சப்பிக் கொண்டே இருப்பார்கள். கச்சான் வியாபாரத்தை பல குடும்பங்கள் வெற்றிகரமாகச் செய்து தங்கள் வாழ்க்கையை நகர்த்துவாரகள்.

கோயிலை சுற்றி நிறைய அலரி மரங்கள்தான் நிற்கின்றன. அந்தக் கோயிலில் நடக்கிற பூசைகளுக்கு இந்தப் பூக்களை அந்தப் பூசகர் பயன்படுத்துவார். பாத்தியாடா எங்கட கோயில?... எங்கட ஊர் பழம்பெரும் ஊர். உங்கள மாதிரி காடு வெட்டிக் குடியேறினனான்களே? என்று வசந்தாக்கா சொல்லுவார். ம்.. பெரிய ஊர்தான்.. போற ஆக்கள் எல்லாம் இறங்கி கும்பிட்டு தேங்காய் உடைச்சு கப்பூரம் கொழுத்தித்தானே போறினம் என்று நான் சொல்லுவன். முன்பு வேறு இடத்தில் கோயில் இருந்ததாம். பின்னர் அந்த பிள்ளையாரை தூக்கி வந்து தற்பொழுது இருக்கிற இடத்தில் வைத்தார்கள். இருநூறு வருடங்கள் பழமையானது என்பதற்கு சான்றுகள் இருக்கிறதாம் என்று வசந்தாக்கா சொல்லிக் கொண்டிருந்தார். தெருவில் பாலை மரத்தடியில் இருந்த ஒரு கல்லு இன்று முக்கியமான கோயிலாக வளர்ந்து விட்டது என்றும் வசந்தாக்கா சொல்லிக் கொண்டிருந்தார்.


இப்பொழுதோ முறிகண்டி நிறைய மாறியிருக்கிறது. அந்த மடங்கள் எல்லாம் யுத்ததில் உடைந்து விட்டன. கோயில் சூழல் மாறி குளிர்ச்சியைக் காணவில்லை. முறிகண்டியில் கடும் சண்டை நடந்தது. அக்கராயனை கைப்பற்றிய இராணுவம் அப்படியே அக்கராயன் குளம், நாலாம் கட்டை என்று கைப்பற்றிக் கொண்டு முறிகண்டிப் பக்கம் வந்தது. முறிகண்டியை பிடித்தால் அப்படியே அறிவியல் நகர் ஊடாக கிளிநொச்சியையும் வசந்தநகர், இந்துபுரம், சாந்தபுரம் என்று இரணைமடுவையும் கைப்பற்ற இராணுவம் முயன்றது. முறிகண்டியுடன் கிளிநொச்சியை தக்க வைக்க போராளிகள் கடுமையாக போராடியும் மண்தடைகளை உடைத்தபடி இராணுவம் முறிகண்டியை கைப்பற்றியது.

முதல் முதலில் முறிகண்டிப் கோயிலுக்குப் போகும் கோயிலின் கூரை உடைந்திருந்தது. ஆலயச் சூழல் சிதைந்திருந்தது. முறிகண்டி எப்படி யுத்த களமாக இருந்தது என்பதை முறிகண்டியிலிருந்து அக்கராயனுக்கு செல்லும் வழியில் உள்ள பதுங்குகுழிகளும் மண் அணைகளும் சொல்கின்றன. நீ பேசாமல் இருடா நான் தானே சைக்கிள உலக்குறன்... என்று றோசா அண்ணன் சொல்லுவார். கொக்காவில் உயர்வான பகுதி. கொக்காவில் ஒரு இராணுவ முகாம் இருந்தது என்றும் அதை இயக்கம் அடித்துப் பிடித்துக் கொண்டது என்றும் றோசா அண்ணன் சொல்லுவார். பெரிய அசைக்க முடியாத முகாம் இருந்ததாம். அதையும் மாங்குளத்தையும் இயக்கம் அடித்தது அப்பொழுது பெரிய வெற்றியாம் என்று கதைகளைச் சொல்லிக் கொண்டு வந்தார்.

அடேய் கரடி நிக்குமடா... என்று றோசா அண்ணன் சொல்லுவார். கரடியா? ம் சிலவேளை எங்கட சைக்கிளில பின்னால வந்து ஏறி இருக்கும் என்று என்னை வெறுட்டுவார். எனக்கு அந்த வழியில் காட்டுக் கோழிகள் திரிவதை பார்க்க நிறைய ஆசையாய் இருக்கும். எத்தனையோ நாள் பார்த்திருக்கிறன். டேய் அங்க பார் காட்டுக்கோழி... பாரடா... என்று எனக்கு காட்டுவார். நல்ல வடிவா இருக்குது... பிடிச்சுக் கொண்டு போய் வளப்பமா? என்று மிகவும் ஆசையுடன் கேட்டபன். அதைப் பிடிக்க ஏலாது... அதுகள் ஓடுற ஓட்டம்... இதுகள் வீட்டில இருந்தா காட்டுக்கு வந்தது என்று றோசா அண்ணனை கேட்டபன். ம்... சுட்டுத்தான்டா பிடிக்க வேணும்... பாதை மாறி வந்திட்டுதுகள். காட்டில இருந்து வளருரதால இப்படி வடிவா இருக்குதுகள் என்று சொல்லுவார். புத்துவெட்டுவான் கிராமமும் இடையில் வரும். எல்லாம் காடுதானே.. அடே இந்தக் கிராமத்தில நிறைய தொல்பொருட்கள் இருக்காம் என்று றோசா அண்ணன் சொல்லுவார். புத்துவெட்டுவானில் தமிழர்களின் புராதனங்கள் நிறைய புத்துள்ளன.

பழைய முறிகண்டிக் குளத்திற்குக் கிழ் பக்கமாக உள்ள பாதையால போக வசந்தாக்கா வீடு வந்தது. குளத்தின் குளிர்மையும் மரங்களின் நிழல் குளிர்மையும் என்று அந்தச் சூழல் இதமாயிருக்கும். அப்பாடா என்று ஒரு மாதிரி வந்து சேந்தாச்சு... என்ன ஊரப்பா இது? என்று சொல்லியதும் ம்.. நக்கலப்பார்... சரி முகத்தையும் கால்கைகளையும் கழுவிட்டு வா சாப்பிட என்றார் வசந்தாக்கா. ஏன் இவ்வளவு காடுகளத்தாண்டி வந்து இருக்கிறியள்? என்றேன். இந்த ஊரின்ட இந்தக் குளத்தின் அருமை உனக்குத் தெரியுமே? என்றார் வசந்தாக்கா. நாங்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கதான்டா... என்று பெருமையாக சொல்லுவார். அவர்களின் வீட்டில் சமைக்கிற சோறு, கறி எல்லாம் வித்தியாசமாக இருக்கும். நல்ல சுவையாக இருக்கும். அடேய் ஒல்லித்தடி கொஞ்ச நாள் இஞ்ச நின்டு சாப்பிடு நல்லா மொத்தமாய் வருவாய்... என்று சொல்லுவா. பின்னேரங்களில் வசந்தாக்காவின் தம்பி என்னை பழைய முறிகண்டி குளத்திற்கும் கூட்டிக் கொண்டு போவான். அந்தக் குளத்தில நிறைய தாமரைக்காய்கள் பிடுங்கி சாப்பிட்டுக் கொண்டு வருவேன். எங்கு பார்த்தாலும் ஒரே வயல்களாக இருக்கும். சரி... இனி என்ன... கிளிநொச்சிக்கு வாங்க.. அடேய் எங்கட ஊர் எங்களுக்கு உயிரடா... என்று வசந்தாக்கா சொல்லுவார்.

திருமணம் ஆகிய கொஞ்ச நாட்களில வசந்தாக்க கிளிநொச்சிக்கு வந்திட்டா. வசந்தாக்காவின் புன்னகைதான் அவரின் முக்கியமான அடையாளம். பெரியம்மாவுக்கு வசந்தாக்கா என்றால் சரியான விருப்பம். என்ட மருமகள் மருமகள்... என்று சொல்லுவார். றோசா அண்ண வசந்தாக்கா குடும்பத்தில பிறகு வசந்தாக்கா தான் எல்லாவற்றையும் கவனிக்கத் தொடங்கினார். சுமக்கத் தொடங்கினார். தன் மூன்று பிள்;ளைகளையும் கைக்கிளில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் கொண்டு போவார். றோசா அண்ணன் மோட்டார் சைக்களில் முதல் லொறி என்று எல்லா வாகனங்களும் திருத்துற வேலை செய்கிறவர். அவர் உழைப்பதில் முழுவதையும் செலவழித்து விடுவார். வசந்தாக்காதான் வீடு கட்ட வேணும், கிணறு கட்ட வேணும். பிள்ளையளுக்கு படிப்புக்கு வேணும் என்று அவரை வழி நடத்துவார்;.

டேய் போய் படியடா.... விளையாடினது காணும் படியுங்க அப்பன்... என்று பிள்ளைகளிடம் எப்பொழுதும் அவர் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு கேட்கும். பிள்யைள் படிச்சு நல்லா வரவேணும். படிக்க வேணும் என்பது வசந்தாக்காவின் இலட்சியம். எங்கட காலத்தில இப்படி படிக்கிற சந்தர்பம் கிடைச்சாத படிச்சிருப்பம்... நாங்கள் எருமமாடு மேய்ச்சு வயலில கிளி களைச்சு வளந்தனான்கள் என்று சொல்லுவா. வசந்தாக்காவின் எண்ணம் போல் பிள்ளைகளும் நன்றாக படித்தார்கள். சத்ஜெய யுத்தத்தில் அவர்களின் வீடு உடைந்து விட்டது. ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் போராளிகள் கிளிநொச்சியைக் பகைபற்றிய பிறகு வீட்டைத் திரும்ப கட்டியதுடன் கிணறும் கட்டிக் கொண்டார். அந்த நாட்களில் சீமெந்து கடும் தட்டுப்பாடு. விடுதலைப் புலிகள் சீமெந்தில் பதுங்குகுழி அமைத்திருவார்கள் என்பதால் இராணுவம் சீமெந்தை தடை செய்தது. எப்படியோ கிளிநொச்சிக்கு வரும் சீமெந்தை அதிக விலை கொடுத்து வாங்கி வீடும் கிணறும் கட்டி விட்டார் வசந்தாக்கா.

வசந்தாக்காவின் இறுதி மகன் விதுசாந் வசந்தாக்காவின் நினைவுப் டபத்தை எனக்கு நீட்டினான். அவளின்ட சிரிப்பை பாரடா என்று அம்மா சொன்னார். ம்... என்றபடி பாத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி உந்தப் படத்தை எடுத்து பாத்தக் கொண்டிருப்பான். இவனுக்கு தாய நினைச்சால் பெரிய கவலை... இப்படி ஆறேழு வயதில தாய் இல்லாம இவன் கஷ்டப்படுறன். இவன மாதிரி எத்தின பிள்ளையள் தாய இழந்து கஷ்டப்படுதுகள். எல்லாம் பாவமடா... என்று சொல்லிக் கொண்டு குறைச்சுட்டை நெருப்புக் கொல்லியை வைத்து பத்திக் கொண்டிருநார் சிவஞானம்தாத்தா. சிவஞானம் தாத்தா நீர்பாசனத்தில வேலை செய்தவர். இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறார். அவருக்கு எண்பத்தி எட்டு வயது. வாழ வேண்டிய அவள் போயிற்றாள் சாகவேண்டிய நான் இருக்கிறன். சிவஞானம் தாத்தாவின் கதையை கேட்க எனக்கு தொண்ணுற்றி ஒன்பது வயதில யுத்தத்தில இருந்து மீண்டு வநத அருளம்மாதான் நினைவுக்கு வந்தார். இவர் சொல்லுற மாதரிரி வாழவேண்டிய எத்தனையோ பேர் அநியயமாக கொல்லப்பட்டு விட்hடர்கள்.

இப்ப ஆர் இதுகள படிக்கச் சொல்லுறது? இதுகளும் படிக்கிற மனநிலையில இல்லை. அவனும் குடிச்சுக் கொண்டு திரியிறன். எந்த நேரமும் அவளைப் பற்றியே கதைச்சு அழுகிறான். எனக்கு இந்தப் பிள்ளையள தேற்றுரதா? றோசாவைத தேற்றுரதா? என்டு தெரியேல்லயடா என்றார் சிவஞானம்தாத்தா. ம்... எல்லாம் கனவு மாதிரி நடந்து முடிஞ்சுது. வசந்தாக்கா கட்டிய கிணறு அப்படியே இருக்கிறது. கிணற்றைப் பார்க்க அவரின் ஞாபகம் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டிருக்கிறது. வீடு கூரையற்றிருக்கிறது. சுவர்கள் உடைந்து விட்டன. அவள் கட்டின வீட்டின்ட கோலத்தைப் பார் என்றார் சிவஞானம்தாத்தா. அழயாயிருந்த வீடு பாழடைந்து இடிந்த கோலத்துடன் இருந்தது.

சுரேன் பானையில தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தான். சில சுள்ளி விறகுகள வைத்து அடுப்பை பற்ற வைத்தான். இதுகள் நல்லா சாப்பாடு சாப்பிட்டு எத்தின நாளாகுது. சும்மா அவிச்சு அவிச்சு சாப்பிடுதுகள். சிலவேளை உப்பு புளி எதுவும் இருக்காது. பக்கத்து வீட்டு புள்ள சில நேரத்தில வந்து கறிய வைச்சு தரும். அவள் இருந்தால் இந்தப் புள்ளயலின்ட சாப்பாட கேக்கவா? வேணும்? வெள்ளி செவ்வா பாக்காமல் மீன்காச்சி தருவாள் எனக்கும் மச்சம் இல்லாமல இறங்காது... மதியம் ஆகிவிட்டால் சோற்றைக் சமைத்து வைத்து விட்டு சந்தைக்கு மீன் வாங்க சைக்கிளில் பறந்து பறந்து போறவார்.

காறிய காய்சிச வைத்து விட்டு பள்ளிக்கூடம் விட பிள்ளைகளை ஏற்றப் போவார். வந்து சாப்பாடு கொடுத்திட்டு மாலைநேர பிரத்தியேக வகுப்புக்களுக்கு ஏற்றிக் கொண்டு போவார். இப்படி நாள் முழுக்க பிள்ளைகளுக்காக இயங்கிக் கொண்டிருப்பார். வசந்தாக்காவின் கடைசி மகன் விதுசாந்தின் முகம் அம்மாவுக்காக ஏங்;கிக் கொண்டிருக்கிறது. அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை. மிகவும் சோர்வடைந்திருந்தான். அம்மா இல்லாத வீடு அம்மா இல்லாத பிள்ளை என்ற துயர்க்கதை அவனின் முகத்தில் எழுதப்பட்டிருந்தது.

வன்னி யுத்தத்தின் பொழுது ஒருநாள் விசுவமடுவில் இடம்பெய்ர்ந்து ஒரு இடத்தில் தஞ்சமடைந்திருந்தார்கள். இன்றைக்கு என்ட பிள்ளையளுக்கு கூல் காய்சிகச் கொடுக்கப் போறன்... என்று சொல்லிக் கொண்டு கூல் காய்சும் வேலையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் வசந்தாக்கா. கடுமையாக எறிகணைகனள் வந்து விழுந்து கொண்டிருந்தன. கிடைத்த பொருட்களை வைத்து கூல் காய்ச்சும் வேலையில் அவர் கண்ணாயிருந்தார். வசந்தாக்காவின் பிள்ளைகள் மூன்றும் பதுங்குகுழியிற்குள் கூல் குடிக்க காத்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் சாதாரணமாக வந்த எறிகணை ஒன்று வெளியில் கூல் காய்சிக் கொண்டிருந்த வசந்தாக்காவையும் கூல் பானையையும் கொன்று போட்டிருந்தது. எல்லோரையும்போல இரத்த வெள்ளத்தில் வசந்தாக்கா சிதறிப்போய்க் கிடந்தார்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்

Sunday, November 28, 2010

மிதிவெடிக்கிழங்குகள்

பெருநிலத்தின் கதைகள் :09 - நவராஜ் பார்த்தீபன்

முறிப்பு குளக்கட்டு வழியாக போகலாம் என்று சாலோம்நகர் வழியாக போய்க் கொண்டிருந்தேன். வழியில் இருந்த தென்னிந்திய திருச்சபையால் நடத்தப்பட்ட போய்ஸ் கோம் முற்றாக அழிந்திருந்தது. முன்பு அந்த விடுதிக்குப் போய் றேஜினோல்ட்டை அடிக்கடி சந்திருக்கிறேன். அவனின் வசித்த அறை இருந்த கட்டிடம் அப்படியே சரிந்து போய்க் கிடந்தது. அந்த இடம் கடும் யுத்த களமாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த இடத்தில் பெரிய மண் அணைகளும் கிடங்குகளும் அவைகளுக்குள் மிதிவெடிகளுமாக இருந்தது. அந்த யுத்தகளக்காட்சி அப்படியே முறிப்புக் குளத்திற்கால் செல்கிறது. இந்த மண்மேடும் யுத்தகளமும் இரணைமடு வரை நீண்டபடி செல்கிறது. முறிப்பு அழகான இடம். வயல்களும் வாய்க்கால்களும் என்று பச்சையாகவும் குளிர்மையாகவும் இருக்கும். இப்பொழுது அந்த இடமெல்லாம் அழிந்த நிலையில் இருக்கின்றன. சிவப்பு நிறமான மண்வீடுகளை மிக அழகாக அந்த மக்கள் அமைத்திருப்பார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் ஆட்கள் இப்பொழுது மீளக்குடியேறிக் கொண்டிருந்தார்கள். “ஐய்யோ… தம்பி அங்கால போகாதீங்க… ஒரே மிதிவெடி” என்று என்னைப் பார்த்து ராணி அக்கா சொல்லிக் கொண்டு “யாரு இந்தத் தம்பி எங்கயோ கண்டமாதிரி இருக்குது?” என்றபடி எனக்கு கிட்ட வந்தார். “ராணியக்கா என்ன எப்பிடி இருக்கிறிங்க என்னைத் தெரியுதா” என்று அவரைப் பார்த்துக் கேட்டேன். “அட… தீபன்…” என்றார். “எப்படித் தம்பி இருக்கிறீங்க? அம்மா என்ன செய்யுது? அம்மாவ முகாமில இருந்து விட்டிட்டாங்களா?” என்று கேட்டுக் கொண்டே அவர்களின் கூடாரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். “இல்ல அம்மாக்கள இன்னும் விடேல்ல… இந்த விடுறம்… அந்த விடுறம்… என்று காலம் போய்க் கொண்டிருக்குது பாப்பம்…” என்றபடி அவர்களின் பழைய மண் வீட்டைப் பார்த்தேன். ஒரு சுவரைத் தவிர மிகுதி எல்லாம் கரைந்து போயிருந்தது. அக்கம் பக்கம் இருந்த அனேகமான காணிகளில் இருந்த மண் வீடுகள் எல்லாமே இப்படித்தான் கரைந்து போயிருந்தன. ராணி அக்காவைப்போலவே கறுப்பு ராஜா அண்ணாவும் யுத்த அலைக்கழிவால் கறுத்து மெலிந்து போயிருந்தார். மகன் செல்வாவிற்கு வாயில் ஷெல்பட்டு இழுத்து தைக்கப்பட்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டபடி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.

“இந்தப் பெடியன் மளமளன்னு அந்தப் பக்கமாப் போகுது… அதுகளில ஒரே மிதிவெடி. இந்தா இதில அன்னைக்கும் ஒன்ன எடுத்து வெடிக்க வைச்சாங்க… விதைச்ச மாதிரி பெருகிப்போய்க் இருக்குது” என்றார். “ம்… ஏன் தம்பி” என்றார் பதிலுக்கு ராஜா அண்ணன். பக்கத்தில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெடித்த வெடி பொருட்களின் பாகங்களையும் வெற்றுச் சன்னங்களையும் அடுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். “இதுகள்தான் எங்களுக்கு இங்க மிஞ்சிக் கிடந்தது…” என்றார் ராஜா அண்ணா. அந்தக் குழந்தைகளோ மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதி எங்கும் மிதிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளதை எலும்புக் கூடுகள் விழித்திருக்கும் பதாகைகள் எங்கும் நடப்பட்டிருந்தன. வன்னி நிலமெங்கும் இந்த சிவப்பு எலும்புக்கூட்டு; மரங்கள்தான் முளைத்து விட்டன.

அந்தப் பள்ளிக்கூடத்தடியில அன்னைக்கு ஒரு புள்ள மிதிவெடி மிதிவெடி என்னு கத்திச்சுது… என்று பக்கத்தில் இருந்த முதிர்ந்த அம்மா ஒருவர் சொல்லிக் கொண்டு வந்தார். மிதிவெடி எடுக்கப்பட்ட இடத்தில் சின்ன வட்டமாக கிடங்கிருந்தது. முறிப்பு விக்கினேஸ்வராப் பள்ளியில் படிக்கிற இரண்டு குழந்தைகள் அந்தப் பள்ளியின் முன்பாக புதைந்திருந்த வாகன மிதிவெடியை காட்டியிருக்கிறார்கள். உடனே பாதையை மூடி அந்த மதிவெடியை அகற்றப்;பட்டன. பாடசாலை வகுப்பறையின் முன்னாலும் ஒரு மிதிவெடியை பாடசாலைப் பிள்ளைகள் காட்டியிருக்கிறார்கள். அதனால் சில நாள்கள் அந்தப் பள்ளியை மூடி விட்டார்கள். முறிப்புப் பள்ளியின் முன்னால் உள்ள எளிமையான தேநீரகத்தில் ஒரு தேநீரை குடிக்கும் பொழுது சுதர்சனின் ஞாபகங்கள் வந்து கொண்டிருந்தன. “அவன் எங்க இருக்கிறானோ? இல்லையோ? ம்… வெளிக்கிடுவம்” என்று திரும்பவும் முறிப்பு குளக்கட்டால் சென்று அக்கராயன் நோக்கிச் செல்லத் தொடங்கினேன். முறிப்புக்குளம் முடிய ஊற்றுப்புலம் சந்தி வரும் இடத்திலும் மிதிவெடி மரங்கள் பெருகி நின்றன.

கோணாவிலில் சந்தியில் 1996ஆம் ஆண்டு நடந்த விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவுச் சுவரில் எழுதப்பட்ட ஞாபகக் குறிப்பை அழித்து அந்தக் கிராமத்தின் பெயர் புதிதாக எழுதப்பட்டிருந்தது. அந்த விமானத்தாக்குதலில் 14பேர் வரை கொல்லப்பட்டிருந்தார்கள். வெண்புறா அமைப்பும் ஊனமுற்றோர் சங்கமும் இருந்த இடத்தில் பாரிய முகாம் அமைக்கப்பட்டிருந்தது. என்னைக் கண்டதும் முன் காவலரணில் உள்ள சிப்பாய் நெருங்கி வந்தான். “எங்க போறது…” “அக்கராயன்..” “ஏன் போறது?” “சொந்தக் காரரிட்ட…” “ம்… போங்க… போங்க…” அவனின் கட்டளைப்படி சென்று கொண்டிருந்தேன். கோணாவில் சந்தி அழிந்து பாழடைந்திருந்தது. அகதிகளும் அந்தக் கிராம மக்களும் செழித்திருந்த இடம். சந்தியில் அருகில் எப்பொழுதும் சல… சல… என ஒரு வாய்க்கால் பாய்ந்து கொண்டிருக்கும். அந்தக் கிராம மக்களுக்கு அதுதான் நகரம். பக்கத்தில் உள்ள பாடசாலையும் அழிந்து கிடந்தது.

பக்கத்தில் யுனியன்குளம் வற்றிப் போயிருந்தது. தாமரை மலர்களையும் தாமரை இலைகளையும் காணவில்லை. உழுது விட்டதைப்போல காய்ந்து புழுதியாக கநற்துகொண்டிருந்தது. பிறகு வந்த தென்னிந்திய திருச்சபை ஆலயமும் அழிந்து கிடந்தது. அடுத்து யுனியன்குளம் சந்தி வந்தது. அதுவும் அழிந்து காய்ந்து போய் கிடந்தது. யுனியன்குளச் சந்தியில் உள்ள கள்ளுத் தவறணையில் எந்த நேரமும் ஆட்கள் கள்ளருந்திக் கொண்டிருக்கிறார்கள். உருத்திரபுரம், கோணாவில், யுனியன்குளம் என்று வரும் கல்லை எல்லாம் நம் ஆட்கள் உறிஞ்சிக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது எதுவும் தெரியவில்லை. பக்கத்தில் சில கடைகள் இருந்தன. ஒரு பேரூந்துத் தரிப்பிடம் அதுவும் பற்றை மண்டிக் கிடந்தது.

ஸ்கந்தபுரம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். ஸ்கந்தபுரம் சந்தி முழுவதும் மிதிவெடிகள் விதைக்கப்படடிருந்தன. எல்லா இடங்களிலும் சிவப்பு நிறமான அந்தப் அபாயப் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஸ்கந்தபுரம் சந்தியே முழுமையாக அழிந்துவிட்டது. முன்பொரு காலத்தில் எப்படி இருந்த இடம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அங்கிருந்த கடைகள் அதற்குப் பக்கத்தில் இருந்த வீடுகள் எல்லாம் அழிந்து விட்டன. உடைந்த வீடுகளின் உள்ளேயும் வெளியிலும் முற்றங்களிலும் மிதிவெடிகள் புதைத்த அபாயங்கள் சிரித்துக் கொண்டு நின்றன. சில மிதிவெடி அகற்றும் பணியாளர்கள் வீதிகளில் உள்ள மிதிவெடிகளை அகற்றிக் கொண்டு நின்றார்கள்.

அவர்களில் ஒரு முகம் தெரிந்த முகத்தைப் போலிருந்தது. ம்… சசி அக்கா நின்று மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். “சசி அக்கா…” என்று அவருக்கு கிட்டவாச் சென்ற பொழுது “அண்ணே தள்ளி நில்லுங்கோ… மிதிவெடி அகற்றுற இடத்திற்கு வரக்கூடாது. சில வெடிப்புகள் ஏற்படமலாம்” என்று ஒரு பணியாளர் தடுத்தார். “தள்ளி அங்கால நில்லுங்கோ தீபன் வாரன்… என்று விட்டு கிழங்குகளை பிடுங்க தூர் வாருவதுபோல முட்டுக்காலில் இருந்து மிதிவெடிகளை சசி அக்கா பிடுங்கிக் கொண்டிருந்தார். பரவலாக பல பணியாளர்கள் அப்படி முட்டுக்காலில் இருந்து மிதிவெடியை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சரி அரைவாசிக்கு மேலாக பெண்கள்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“அண்ண இதுகள எங்க அள்ளிக் கொண்டு போறியள்?” என்று கேட்டேன். “இதுகளுக்குள்ள நிறைய மிதிவெடிகள் கிடக்குது. சனங்களில்லாத இடங்களில கொண்டு போய்க் கொட்டி மிதிவெடியள அகற்றின பிறகு கொண்டு வந்து கொட்டுவம்…” என்றார் அவர். பக்கத்தில் சில பெரிய வாகனங்களில் மிதிவெடி விதைத்த மண்ணை அள்ளிக் கொண்டு மக்கள் இல்லாத பகுதி நோக்கி கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஆனாலும் மிதிவெடிகளுக்கு அருகாக மக்கள் செல்லும் வழிகள் இருக்கின்றன. வேலையை இடைக்கிடை நிறுத்தி மக்களை பாதையில் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். “அண்ண பயமில்லையே?” என்று பயத்துடன் அவரைப் பார்த்துக் கேட்டன். “பெரிய பயம்தான் இன்சுரன்ஸ் செய்திட்டு வந்திருக்கிறம்…” என்றார். “எங்களில நிறையப் பேருக்கு கால் கை கண்கள இழந்து வீட்டில இருக்கினம். சரியான ஆபத்தான வேலை தம்பி” என்று தலைக்கவசத்தை அணிந்து கொண்டு மிதிவெடிகளை நோக்கி போய்க் கொண்டிருந்தார்.

சல… சல… என்று ஸ்கந்தபுரம் வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. அக்கராயன் குளத்திலிருந்து வரும் அந்த வாய்க்காலில் சில சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு சிறுவனாய் அந்த வாய்க்காலில் குளித்த ஞாபகங்கள் வந்து கொண்டிருந்தன. 1996இல் ஸ்கந்தபுரம் தெருக்களில் எல்லாம் அகதிகள் நிறைந்த காலத்தில் இந்த வாய்க்காலில்தான் அந்த சனங்கள் குளித்துக் கொண்டிருப்பார்கள். வாய்க்காலின் முன்னால் ஒரு தேநீரகம் இருந்தது. அது அழிந்து வெளித்துப் போன வெளியில் இப்பொழுது புதிய தேநீரகம் ஒன்று இருந்தது. அதில் போய் ஒரு தேநீர் குடித்துக் கொண்டிருந்தேன். சசி அக்கா அந்த தேநீரகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காலம் அவருக்கு மிதிவெடிகளை பிடுங்கும் உடையை போட்டு விட்டிருக்கிறது. சசியக்காவுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவரின் கணவர் கமல் தடுப்பில் இருக்கிறார். திருமணம் செய்ய முன்னர் போராளியாக இருந்தமையால் தடுப்புமுகாமில் வைத்து அவரை கொண்டு போய் விட்டார்கள்.

வெள்ளை நிறமாக அவர் அணிந்திருந்த கவசத்தின் முன்பக்கம் கண்ணாடி அமைந்திருந்தது. அந்த கண்ணாடி வெடிக்கும் மிதிவெடியின் தாக்கத்திலிருந்து முகத்தை பாதுகாக்குமா என்று எனக்குள் நினைத்தேன். “என்னப்பன் தீபன்… மணியங்குளமா போறிங்க?” என்றபடி வந்தார். “ம்… மணியங்குளம் எப்படி இருக்குது?” என்று கேட்ட பொழுது முகத்தில் பிரதிபலித்த அவரது உணர்வு மணியங்குளம் எப்படியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது. கண்களில் கண்ணீர் கசிந்து முகம் வாடி வெதும்பியது. “இந்தப் பிள்ளையள பாக்கிறதுக்காக இப்படி மிதிவெடிக்குள்ள போறன்” என்றார்.

மிகவும் ஆபத்தான வேலையை சசியக்கா செய்து கொண்டிருக்கிறார். சசியக்காவை மாதிரி பலர் அதுவும் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இப்படி ஆபத்தான வேலைக்குச் செல்கிறார்கள். இராமநாதன் குடியிருப்பில் இருக்கிற பிரதீபா கல்லுடைக்கும் வேலைக்கு போகிறார். அவரது கணவரும் தடுப்பில் இருக்கிறார். “அவர் நான் இப்பிடி மிதிவெடி அகற்றுற வேலைக்குப் போறன் என்டதும் துடிச்சுப் போனார்… என்ன செய்யிறது?” “வாங்கோ வந்து பீடுங்கிப் பாருங்கள்?” என்பதைப்போல திரும்பும் இடமெல்லாம் இந்த நிலத்தில் மிதிவெடிகள்தான் சிரித்துக் கொண்டிருக்கிறன. பல மிதிவெடிகள் பதுங்கிப் பதுங்கி பலரது கைகளையும் கால்களையும் உயிர்களையும் எடுக்கப் போகிறது. முகங்களை காயப்படுத்தப் போகிறது என்பதை நினைக்க மனம் என்னவோ செய்தது.

“பிள்ளையள் கேட்டால் நான் சொல்லுறேல்ல. அதுகள் ஏதோ கிழங்கு பிடுங்கிற வேலைக்குத்தான் நான் போறன் என்டு நினைக்குங்கள். ஒவ்வொரு மிதிவெடியையும் பிடுங்கேக்க என்ட பிள்ளையள்தான் கண்ணுக்கு முன்னால வருங்கள்…” என்றார். வெம்மையும் புழுதியும் அச்சமும் படிந்த முகத்தை துடைத்தபடி சுடும் தேநீரை குடித்துக் கொண்டிருந்தார். “கண நேரம் நிக்க ஏலாது பேசுவாங்கள். நான் வெளிக்கிடுறன். இப்ப மணியங்குளம்தானே போறிங்க” என்றபடி தலைக்கவசத்தை அணிந்து கண்ணாடியால் முகத்தை மூடிக் கொண்டு உடைககளின் பட்டியை இழுத்துக் கட்டிக் கொண்டு மிதிவெடிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

ஸ்கந்தபுரத்திலிருந்து மணியங்குளத்திற்கு போகும் வழியில் தொடக்கம் முதல் மிதிவெடிகள்தான் வாய் பிளந்து நிற்கின்றன. எல்லாம் அழிந்து பாழடைந்து கிடந்தது. வீட்டு முற்றங்கள் வேலிகள் எல்லாம் மிதிவெடிகள் அகற்றுவதற்காய் உழுது கிண்டப்பட்டிருந்தது. மணியங்குளம் சந்தியும் அழிந்து கிடந்தது. மணியங்குளத்தில் சிறுவர்களும் சத்தமிட்டு குளிப்பதைப் பார்க்க அழகாக இருந்தது. அந்தக் குளத்தில் நானும் நீந்தித் திரிந்திருக்கிறேன். முன்னாலுள்ள மரத்துடன் இருந்த குட்டிக் கோயில் உடைந்து கிடந்தது. மணியங்குளத்து அணைதான் மணியங்குளம் கிராமத்தின் பிரதான வழிபோல பயன்படுகிறது. குடியிருப்பு நோக்கி போய்க்கொண்டிருந்தேன். அகிலனின் காணியும் நகுலேஸின் காணியும் மதிவெடி மயமாக இருந்தது. தெருவின் கரையில் காவலரண்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அகிலன் யாழ்ப்பாணத்தில் யாரோ சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கியிருக்கிறான். நகுலேஸ் மணியங்குளத்தின் மற்றொரு பக்கத்தில் தற்காலிகமாக வசிக்கின்றான்.

மணியங்குளத்தில் நிரந்தரமாக் வசித்து வரும் நகுலேஸ் மற்றும் அகிலன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். இடம்பெயர்ந்து அங்கு தஞ்சமடைந்த காலத்தில் நகுலேஸ் வீட்டுக் கிணற்றில்தான் நாங்கள் குடிப்பதற்கு தண்ணி எடுப்போம். அவர்கள் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு தெற்கிலிருந்து வந்தவர்கள். வந்த காலம் முதல் மணியங்குளத்தில்தான் வசித்து வருகிறார்கள். நானும் நகுலேஸோடு அகிலனும் அந்த இடங்கள் எல்லாம் திரிந்து கொண்டிருப்பம். அந்தத் தெருக்களில் இருந்து கதைச்சுக் கொண்டிருப்பம். ஐய்யனார் கோயில் திருவிழா, வீதி நாடகம் என்று ரம்மியமாயிருந்த கிராமம் அது. சனங்கள் நெருக்கமாக வாழும் மணியங்குளம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். நாங்கள் குந்தியிருந்து கதைச்ச எல்லா இடமும் இப்பொழுது மிதிவெடிகள் விதைக்கப்பட்டு பெரியளவில் விளைந்து அடர்ந்து போயிருக்கின்றன.

குடியிருப்பு வாசலில் ‘மிதிவெடி அபாயம்’ என்ற அபாயப் பலகைக்குமிக அருகாக குழந்தை ஒன்று தடியுடன் நின்று கொண்டிருந்தது. குடியிருப்பின் நடுவில் தொடர்ச்சியாக மிதிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளன. எங்கும் எலும்புக்கூடுகள் சிரிக்கும் பட்டிகளும் பதாகைகளும்தான் நடப்பட்டிருந்தன. 1996 இல் கிளிநொச்சி இடப்பெயர்வுடன் ஸ்கந்தபுரம் அக்கராயனில் குவிந்திருந்த சனங்கள் பலர் அந்தக் குடியிருப்பில்தான் குடியேறினார்கள். அவர்களில் யாழ்ப்பாணம், ஆனையிறவு, பரந்தன் போன்ற நீண்ட காலமாக போரால் பாதிக்கப்பட்ட மக்களும் குடியிருக்கிறார்கள். எல்லாம் கூடார மயமாக இருந்தது. சிவக் கொலுந்தம்மா கூடாரத்திலிருந்து வெளியில் வந்து பார்த்து என்னை அடையாளம் கண்டு கொண்டு வந்தார். மிகவும் சத்தமாக பேசும் சிவக்கொலுந்தம்மா இப்பொழுது மிக மெதுவாகவே பேசினார். குடியிருப்பில் அவரை நிறையப் பேருக்குப் பிடிக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்.

“எங்க சுதன்?” என்று கெட்டேன். “அவனைத்தானே இன்னும் காணேல்ல அய்யா…” என்று மெலிந்த முகம் கோணலாகி துயரடைய அழத் தொடங்கினார். “அப்ப பவித்திரன்? அவன் தடுப்பில இருக்கிறாள்” என்றார். “ஐய்யோ! இந்த தாயுக்கு இன்னுமா துயரம்?” என்று மனம் வலித்தது. சிவக்கொலுந்தம்மாவின் கணவர் கதிரவேலு முதலில் போராட்டத்தில் களப்பலியானார். பின்னர் அவரின் இரண்டு பிள்ளைகளும் போராட்டத்தில் களப் பலியானவர்கள். தாங்க முடியாத கோலத்தில் இருந்த அந்தத் தாய் இன்னும் மெலிந்து போயிருந்தார். அவருக்கு ஆறுதலாக பகிர வார்த்தைகள் போதாதவை. கணியில் சிதைந்த சிதைவுகளை நிலத்தில் இருந்தபடி பொறுக்கிப் பொறுக்கி அள்ளிக் கொண்டிருந்தார். வாழ் நிலத்திற்கான எல்லா வகையான தியாகங்களின் பின்னரும் துயரங்களைக் கடந்தும் அவர் சிதை நிலத்து சிதைவுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

கூடாரத்திற்கு வெளியில் தென்னைம் கன்றுக்கு கீழாக இருந்து லட்சுமி அம்மா ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். “இஞ்ச பார் தீபன…” என்று புன்னகையுடன் வரவேற்றார். அவர்களளை மூன்று வருடத்திற்கு பிறகு அன்றுதான் சந்தித்தேன். சந்திக்கும் பொழுது ஏற்பட்ட மகழ்ச்சியைவிட அவர்கள் ஒவ்வொருதரும் பூண்டிருந்த கோலம் மனதை மிகவும் வலிக்கச் செய்தன. லட்சுமி அம்மாவின் கூடாரம் காற்றுக்கு பட.. பட என்று அடித்துக் கொண்டிருந்தது. காணியில் நின்ற தென்னம் கன்று சற்று வளர்ந்து நிழல் பெய்து கொண்டிருந்தது. சுகியக்காவின் கூடாரமும் பக்கத்தில்தான் இருக்கிறது. “தம்பி நான் தனியாள் என்டுறதால ஒன்டுமில்லயாம்…” என்றார் சுகியக்கா. வீட்டுத்திட்டம், தகரம் என்று ஒன்றுமே தரவில்லை என ஏமாற்றத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதி யுத்தத்தில் பலியான சுரேஸின் மனைவி நிசாந்தி கையில் ஒரு குழந்தையுடன் நின்றாள். மற்றைய குழந்தை நிலத்தில் அமர்ந்திருந்து விளையாடிக் கொண்டிருந்தது. அசோக் அண்ணையும் ராதிகாவும் மாத்தளனில் செல் விழுந்து இறந்து விட்டார்கள். அவர்களின் குழந்தைகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“தீபன் வாடா ரொட்டி சாப்பிட…” என்றார் லட்சுமி அம்மா. ரொட்டிகளை சுட்டுக் கொண்டிருக்கும் லட்சுமி அம்மாவுக்கு அருகில் இருந்த பாத்திரத்தில்; அவர் சுட்ட அழகான ரொட்டிகள் கிடந்தன. எனக்கு ரொட்டி என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். இடம்பெயர்ந்து மணியங்குளத்தில் தஞ்சமடைந்த காலத்தில் ஏற்பட்ட வறுமைச் சூழலில் ரொட்டிதான் எங்கள் முக்கிய உணவாகியது. ரொட்டி ஏழைகளின் உணவு. “தேங்காப்பூ போடாமலும் ரொட்டி நல்லா சுடலாம்…” என்று லட்சுமி அம்மா சொல்லுவார். வெறும் மாவில் உப்புத் தண்ணியை மட்டும் விட்டுச் சுட்டு தன் பிள்ளைகளுடன் எனக்கும் சேர்த்துத் தருவார். கிளிநொச்சி யுத்த காலத்தில் பெருங்காடாயிருந்த அந்தப் பகுதியில் சனங்கள் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள். இன்று பலர் அங்கு நிரந்தரமாய் வாழ்கிறார்கள். எல்லா வீடுகளும் எல்லா மனிதர்களும் போராட்டத்தில் உன்னதமான பங்காற்றியிருக்கின்றனர். இன்று எத்தனையோ இழப்புக்களுக்கு முகம் கொடுத்து வாழ்வை மீளத் தொடங்கியிருக்கிறார்கள். நான் ரொட்டியை சாப்பிடத் தொடங்கும் பொழுது கைகளில் சிறிய ரொட்டித் துண்டகளை இறுக பிடித்தபடி ஒற்றைக் கண்ணை இழந்த சுகியக்கா, அசோக் ராதிகாவின் இரண்டு பிள்ளைகளுக்கும் “வெடிபொருட்கள் ஆபத்தானவை! அவற்றுக்கு கிட்டே செல்லாதீர்கள்!! அவை அபாயமானவை!!!” என்ற யுனிசொப் அமைப்பு ஒட்டியிருந்த சுவரொட்டியை காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

பொம்மை வீடுகள்

பெருநிலத்தின் கதைகள் : 08 - நவராஜ் பார்த்தீபன்

முறிகண்டிக்குப் போகும் வழியில் வள்ளியம்மா வீட்டுக்குப் போக வேணும் என்று முதல்நாளே நினைத்திருந்தேன். வள்ளியம்மா வெளியில் உள்ள மண் அடுப்பில் முறுக்குச் சுட்டுக் கொண்டிருந்தார். அடுப்புக்கும் ஒரு முறுக்கை வைத்திருந்தார். வள்ளியம்மாவின் கூடாரதத்திற்குள் ஒரு தராசும் கொஞ்ச பயிற்றங்காய்களும் வெங்காயமும் பிஸ்கட் பைகளும் இன்னும் சில பொருட்களும் இருந்தன. என்னைப் பார்த்ததும் வாங்க தம்பி… இருங்க தம்பி… என்று அன்போடு அழைத்தார். முகத்தில் இன்னும் பெருந்துயரின் களைப்பு ஆறாமலிருந்தது. வாடி காய்ந்து போயிருந்தார். ஐயா மல்லாவிக்கு போயிருக்காறு… இப்ப வந்திருவார்.. மல்லாவியில இருக்கிற புள்ளய பாக்கப் போனாரு… என்றபடி வள்ளியம்மா தொடர்ந்து முறுக்கை சுட்டுக் கொண்டிருந்தார்.

பொன்னகரில் ஒரு காணியில் உள்ள வள்ளியம்மாவின் வீடும் அங்கிருக்கிற எல்லா வீடுகளும் டெனிசாவின் பொம்மை வீடும் ஒரே மாதிரித் தெரிந்தன. டெனிஷா விளையாடிக் கொண்டிருந்தாள். டெனிஷாவின் அம்மா ஒரு வீடு கட்டுவதை பார்த்து விட்டு தனது பொம்மைக்காக தரப்பால் துண்டுகளை வைத்து அவள் ஒரு வீடு கட்டிக் வைத்திருக்கிறாள். இந்த வீட்டை யாருக்கு கட்டியிருக்கிறீங்கள் டெனிஷா? என்று கேட்டேன். இதை என்ட பொம்மைக்காக கட்டினனான்… அதுவும் கிட்டடியிலதான் மீளக் குடியேறினது... இப்போதைக்கு அதுக்கு ஒரு வீடு தேவை அதுதான் கட்டுறன் என்றாள்.

டேனிஷாவின் வீட்டிற்கும் அவளது அம்மா குடியிருக்கும் வீட்டிற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டுமே தரப்பால்களினால் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றி வர சுவரோ, எந்தத் தடுப்புமோ இல்லை. வெம்மையும் காற்றும் புழுதியும் தாராளமாக உள் நுழையும் அந்த சிறிய கூடாரங்களை டெனிஷா சொல்லுவதுபோல பொம்மைகள் வாழும் வீடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சில இடங்களில் பொம்மைகளின் வீடுகள் மிகவும் வசதியாகவும் அழகாகவும் இருக்கும். இங்கு பொம்மைகள்கூட வாழ முடியாத வீடுகள் எனப்படும் கூடாரங்களில் தானே வள்ளியம்மாவைப் போலிருக்கிற, தங்கப்பிள்ளை அம்மாவைப் போலிருக்கிற நமது சனங்கள் வாழ்கிறார்கள். காற்றுக்கு கூடாரங்கள் அசைந்து நடனமாடிக் கொண்டிருந்தன.

வள்ளியம்மா கிளிநொச்சி பொன்னகர் என்ற கிராமத்தில் 1983இல் இனக்கலவரம் காரணமாக வந்து குடியேறியிருக்கிறார். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் மாயா அக்கா, பொன்;னக்கா, ஆராயி அக்கா இப்படி பலர் இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். இராமநாதன் குடியிருப்பில் இருக்கிற சந்தனதோமஸ் 1935இலேயே வன்முறைக்கு அஞ்சிக்கு கிளிநொச்கிக்கு வந்து விட்டார். வன்முறை பற்றிய கதைகளுடன் மலையகம் பற்றிய கதைகளையும் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இனி அந்தப் பக்கமும் போக மாட்டம்… எப்பிடி நம்பி அங்க இருக்கிறது.. அந்த கொடுமையை நாம மறக்க மாட்டம்… என்று அவர்கள் சொல்லுவார்கள். செழிப்பான மலை நாட்டைப்போல அதன் குளிர்ச்சியைப்போல அவர்கள் சொல்லும் மலையகக் கதைகள் இருக்கும். இரத்தம் கசியும் வன்முறை நாட்களையுமாய் நிமிடங்களையுமாய் அவர்களது கதைகள் மாறியிருந்தன.

வள்ளியம்மாவின் கூடாரம் ஒரு தரப்பாலினால் நிலத்தில் இழுத்து கட்டப்பட்டிருக்கிறது. ஐயோ… நேற்றிரவு முழுக்க சரியான மழை.. இதுக்குள்ளதான் கிடந்தேன். சரி தறப்பாளு காத்தில போகப்போகுதுன்னு நினைச்சன் தம்பி. தண்ணி முழுக்க இதுக்குள்ள வந்திட்டுது. யாருக்கு தெரியும் மழை வருமின்னு. தெரிஞ்சா மண்ணை சுத்திபோட்டு அணைச்சிருக்கலாம்… என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இப்பொழுது மண்ணை வெட்டி கூடாரத்தை சுற்றி அணைத்துப் போட்டிருக்கிறது. பக்கத்தில் உள்ள காட்டில் வெட்டிய சில தடிகளை நட்டும் நிலத்தில் கட்டைகளை இறுக்கியும் கூடாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தரையிலுள்ள ஈரத்தைப்போலவே கூடாரத்திற்குள்ளும் தரை ஈரமாக இருக்கிறது.

இந்தம் கம்பி வேற சுடுகுதய்யா.. என்று கைகளில் இருந்த கம்பியை பக்கத்தில் இருந்த பாததிரத்தின்மேல் வைத்தார். மின்சாரம் கடத்துவதற்கு பயன்படுத்தும் ஒரு கம்பியைத்தான் வள்ளியம்மா அகப்பையாக பாவிக்கிறார். அந்தக் கம்பி எளிதில் வளைந்தும் விடும். கொதிக்கும் எண்ணையில் பட்டுக் கொண்டிருப்பதால் கடுமையாக சுடும். டேனிஷாவின் பொம்மை வீட்டுக்கும் அந்தக் கம்பி அகப்பைக்கும்கூட பெரிய வித்தியாசங்கள் இருப்பதுபோல எனக்கு தொயவில்லை. டெனிசா பொம்மை வீட்டில் சமைக்கும் பொழுது இதைப்போல தடிகளைத்தான் அகப்பையாக பாவிப்பாள். சட்டியாக சிரட்டைகளை பாவிப்பாள். குடியேறி சில நாட்களேயாகயிருக்க முற்றத்தில் இன்னும் புற்கள் சாகாமல் வெளித்தள்ளுகின்றன. மிகவும் அழகாக இருக்கிறது வள்ளியம்மாவின் மண் அடுப்பு. மழை பெய்த்தால் அந்த அடுப்பு கரைந்து விடும். இந்த மழைக்குள்ளயும் அடுப்ப ஒரு மாதிரி மூடிக்கீடி காப்பாத்திட்டன்… என்று சிரித்தபடி சொன்னார்.

பெருநிலத்தில் எல்லா வீடுகளிலும் அந்த மாதிரி மண் அடுப்புக்கள்தான் பெரியளவில் பயன்படுத்தப்படும். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பொன்னக்கா மிகவும் அழகான மண் அடுப்புக்களை செய்வார். எங்கள் கிராமத்தில் பொன்னக்காவை கூப்பிட்டுத்தான் எல்லோரும் அடுப்பு போடுவார்கள். முதல் நாள் புற்று மண் வெட்டி குலைத்து ஊற வைப்பார். பெரும்பாலும் மாலை நேரங்களில் பொன்னக்கா அடுப்பு போடுவதற்கு எதாவது ஒரு வீட்டுக்குப் போவார். வரும் திங்கள் சுப்புறு வீட்டுக்கு அடுப்பு போடனும்… செவ்வாய் முத்துவேல் வீட்டுக்கு போட்டுக் கொடுக்கனும்… என்று பெரிய பட்டியலே கையில் இருக்கும். பொன்னக்காவின் விட்டில் உள்ள அடுப்பு அழகாக மெழுக்கப்பட்டு திருநீறு பூசப்பட்டிருக்கும். இது யாரு பொன்னு போட்ட அடுப்பா? என்று பார்த்தவுடன் கேட்பார்கள்.

வள்ளியம்மாவின் அடுப்பு வெட்டை வெளியில் இரண்டு காட்டுத் தடிகள் வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தது. சின்னத் தறப்பாள் துண்டை கூரையாக கொண்ட அடுப்புகள், தூக்கிக் கொண்டு போய் கூடாரத்தறி;குள் வைக்க கூடிய அடுப்புக்கள் மழையில் ஊறி உடைந்த அடுப்புக்கள் என்று பல வகையான அடுப்புக்களை காணுகிறேன். தடியை அடுப்புப் பக்கம் தள்ளிக் கொண்டு என்ட புள்ளய காணல்ல அய்யா என்று ஒற்றை கைகயை தலையில் வைத்தபடி பிதற்றத் தொடங்கினார். எங்க இருக்கிறானோ என்னமா நடந்தது ஒண்ணும் தெரியேல்ல… இரவிரா அதத்தான் யோசிச்சுக்கிட்டுக் கிடக்கிறன்… என்ன செய்யிறது? தின்கிறதுக்கு எதாவது செய்யனுமே? அதுதான் இந்த முறுக்கை சுட்டு கிளிநொச்சி ஆஸ்பத்திரியடியில வைச்சிக்கிட்டு இருப்பேன்… போற வார சின்னனுகள் வாங்கி சாப்பிடும். அப்புறம் சாயந்திரத்தில இப்படி காய் கறிய வாங்கிட்டு வந்து இங்க விக்கிறன் என்று சொல்லிக் கொண்டு வேகிய முறுக்குகளை பாத்திரத்தில் போட்டு குலுக்கினார்.

அந்த டெனிசாப் பிள்ளய காணல்ல… தான் கட்டின வீட்டுக்குள்ள விளையாடிக்கிட்டிருக்கும்… என்று அவளின் பொம்மை வீட்டைப் பார்த்தார். இன்னைக்கு என்ன சாப்பிட்டிச்சோ தெரியல்ல… இரண்டு முறுக்கு குடுக்கனும் பாவம். அந்தப் புள்ளயின்ட அப்பா செல் விழுந்து செத்திரிச்சு. அதிலதான் அவங்க தாத்தாவும் மாமாவும் செத்தாங்க… என்று சொல்லிவிட்டு டெனிஷாவை வள்ளியம்மா கூப்பிட்டார். டெனிஷா என்னும் குழந்தை நிகழ்காலத் துயரம் மிக்க குழந்தையாக வந்து கொண்டிருந்தாள். கேள்விகளை விதைக்கும் மனதை உலுக்கும் புன்னகையுடன் வந்தாள். எதிர்காலம் பற்றிய சூன்யமான வெளிகள் தெரிந்தன. அம்மா வேலை தேடி போயிருக்கிறா… நான் விiயாடிக் கொண்டிருந்தனான்… என்றாள் டெனிஷா.

ஓம் தம்பி அந்தப் புள்ள நிக்காம வேலைக்கு போயிட்டுது. என்ட மற்ற மகள்ட புருசனும் தடுப்பிலதானிருக்காரு… என்றபடி தங்கப்பிள்ளை வந்தார் டெனிஷாவின் அம்மம்மா. அவர்கள் கதைத்த விதத்தைப் பார்த்ததும் நீங்க மட்டக்கிளப்பா? என்று அவரைப் பாத்துக் கேட்டேன். நாங்க மட்டக்களப்பில திருக்கோயில். தொண்ணூறாம் ஆண்டே இங்க வந்திட்டம். கொஞ்ச நேரம் கதைத்தி பிறகு இராவுக்கு விளக்கும் இல்லத் தம்பி… இந்த பத்தக்குள்ள இந்தக் குட்டி குரும்பானுகள வைச்சுக் கொண்டு எப்படி படுக்கிறது? தங்கப்பிள்ளை அம்மாவை பரிவுடன் பார்த்தபடி… நம்ப எல்லாருமே இப்படியே கிடந்து கதைச்சிக்கிட்டு இருப்பம் என்றார் வள்ளியம்மா. டெனிசா கொஞ்சம் கொஞ்சமாக முறுக்கை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

பிரிவுகளும் வலிகளும் இந்த நிலத்தில் நிறைந்திருப்பதை நினைக்க மனம் என்னவோ செய்தது. தம்பி இந்த இடத்தையெல்லாம் எடுக்கப் போறாங்களாம் என்னு சொல்லுறாங்க. நாங்க எங்க போறது? அட… இந்த நிலத்துண்டுதான் எங்களுக்கு இருக்குதுன்னு இங்க வந்தா அதையும் பறிக்கிறாங்க. பொன்னகர் என்ற அந்தக் கிhராமத்தில் ஐம்பது குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தார்கள். இப்பொழுது தடுப்பு முகாமிலிருந்து 15 குடும்பங்கள் வந்து விட்டன. ஏனைய குடும்பங்களை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில இனக்கலவரம், சண்டை என்டு பெரிய துன்பங்கள அனுபவிச்ச ஆக்கள்தான் வந்து குடியேறியிருக்காங்க. இதென்ன இழவு திரும்பத் திரும்ப துன்பமய்யா… ஏதோ கட்டப் போறாங்களாம். அதுக்கு நம்ம வயித்திலயா தம்பி அடிக்கிறது? இந்தப் புள்ளங்கள பாருங்க. இதுகளுக்கு ஒரு துண்டு நிலத்துக்கு நாங்க எங்க போறது? எங்கயாவது காட்டி இருங்கன்னா போக ஏலுமா? வள்ளியம்மாவின் கோபம் மிகுந்த வார்த்தைகளுக்கு தங்கப்பிள்ளை அம்மாவும் தலையாட்டியபடி ஒப்புதலளித்துக் கொண்டிருந்தார். என்ட ஒரு புள்ள தடுப்பில ஒன்டு கலியாணமும் இல்லாம கன்னியாக் கிடக்குது. ஓரு பிள்ளின்ட புருசன் செல்லில செத்துட்டாரு… என்றார் தங்கப்பிள்ளை அம்மா.

டேனிஷாவைத் தூக்கி வைத்துக் கொண்டார் தங்கப்பிள்ளை அம்மாவின் திருமணம் முடிக்காத மகள் இராசகுமாரி. டேனிஷாவின் முகத்தைப் பார்க்கும் பொழுது நிலமற்ற குழந்தையைப் போலிருந்தாள். மீண்டும் மீண்டும் டெனிஷாவைப் பார்த்தேன். நிகழக்காலத் துயரம் முகத்தில் வடிந்தபடியிருந்தது. இப்படித்தானே என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் சாந்தபுரம் பாடசாலையிலும் குழந்தைகள் காத்துக் கிடக்கின்றனர். சாந்தபுரம் மக்கள் சொல்லுவதைப்போலவே பொன்னகர் மக்களும் இந்துபுரம் மக்களும் நாங்க எங்கட காணிக்கு போக வேணும் என உறுதிபடச் சொல்கிறார்கள். ஆனால் ஏழு லட்சத்திற்கு வீடு கட்டித் தாரம் என்ற வார்த்தைகளால் இந்தக் கிராமம் குழம்பியிருக்கிறது. அப்ப காசு தந்த என்ன வேணுமன்டாலும் செய்யிறதே? எங்கட காணி அதவிடப் பெறுமதியானது என்டது சிலதுகளுக்கு விளங்கேள்ள என்றார் புவனா. போர் தீராத வறுமையை அளித்து எதிர் காலத்தை சூன்யமாக்கியிருப்பதால் சிலர் காணிகளை விட்டுக் குடுத்திட்டு காச வாங்குவம்… என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வள்ளியம்மாவைப்போல மலையகத்தில் இருந்து வந்த ஆராயி அக்காவும் முறுக்கு போன்ற பலகாரங்களை சுட்டு விற்பார். கச்சான் அல்வா, முட்டை பிஸ்கட், லட்டு இப்படி செய்து அதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் வாழ்க்கைiயை நகர்த்திக் கொண்டிருந்தவர். இப்பொழுது ஒரு கூடாரத்திற்குள் சுற்றி உரைப்பைகளை கட்டிக் கொண்டு இருக்கிறார். இந்த முறுக்கு முதலிய பலகாரம் நெருக்கடி மிக்க வாழ்க்கையில் பெரும் கைகொடுப்பதை ஆராயி அக்காவை வைத்தே பார்த்திருக்கிறேன். முதலில் இப்படிச் சில பைக்கற்றுக்களுடன் தொடங்கி பின்னர் பெரிய கம்பனியாக்கி விடுவார். ஏன்னைப் போன்றவர்கள் அவரது முகவராகி கடைகளுக்கு பலகாரங்கள் விற்றிருக்கிறோம்.

பெருநிலத்தில் மீளக்குடியேறிய பல இடங்களுக்குச் சென்ற பொழுது இப்படி பொம்மை வீடுகள் கண்களுக்கு தெரிந்தன. பெரியவர்கள் இருக்கும் கூடாரங்களில் இருப்பதைவிட குழந்தைகள் அந்த கூடாரங்களில்தான் இருக்க விரும்புகிறார்கள். வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வைத்து விளையாடும் பழக்கம் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவதுண்டு. ஆனால் பெருநிலக்குழந்தைகளின் வீட்டில் பழைய பொருட்களை காணமுடியாது. எல்லாம் அடித்துச் செல்லப்பட்டதைப்போல கிடக்கிறது. பழைய பொருட்கள் உக்கி விட்டன. வீடே இல்லாத பொழுது அவர்கள் எதை எடுத்துக் கொள்வார்கள். அகதிக் குழந்தைகள் என்பதையும் பொம்மை வீடுகள் என்பதையும் அகதி வீடுகள் என்பதையும் கிழிந்து போன பழைய தறப்பால்கள் சொல்கின்றன.

காயம் பட்ட சுவர்கள், ஓட்டை விழுந்த கூரைகள் என்பவைகளைவிட எத்தனை வீடுகள் அழிந்து கிடக்கின்றன. வீடில்லாத பொழுதுதான் முதலில் அவலம் ஏற்படுகிறது. அகதியாகிறான். குhற்றுக்கும் வெயிலுக்கும் மழைக்கும் தஞ்சமடைய முடியாது தவிக்க நேரிடுகிறது. இரவு உறக்கம் எல்லாம் துயர் நேரங்களாகின்றன. ஒரு நாள் வீட்டுக்குச் செல்ல முடியாது தெருவில் தவித்த யாராலும் இதை புரிந்து கொள்ள முடியும். வாழ்ந்த வீடு அழிந்தது என்கிற செய்தியை அறியும் பொழுது ஒருவர் தான் அழிந்துபோனதை உணர்வார். பெருநிலத்தில் தளிர்களும் தடிகளும் கூரையாகிவிட்டன. கூரையற்ற வீடுகளே சில எஞ்சியிருக்கின்றன. வீடற்றவர்கள் பலர். கூடாரங்களின் நிலம் என்கிற அளவில் பலவீனமான கூடாரங்கள் நிறைந்து விட்டன. சில குழந்தைகள் பொம்மை வீடுகளை அமைக்க சிறிய துண்டு தறப்பாளுக்காக அழுகின்றன.

யாருமறிய இந்தக் குழந்தைகளின் கைகளில் இருக்கும் பொருட்கள் வெறும் பொம்மைத்தனமானவை என்று சொல்ல முடியாது. சில வேளை தடிகளையும் வெடித்த வெடி பொருட்களின் பாகங்களையும் எடுத்து வைத்து விளையாடுகிறார்கள். மண் தடுப்பரண்களையும் செய்து காட்டுகிறார்கள். வெற்று ரவைச் சன்னங்களை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டு இடையிடையே செல்களின் விசிறிகளையும் கோதையும் வைத்து விட்டிருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் ஒரு வகையில் பொம்மைகளைப்போல ஏதுமறியாது தங்கள் பெற்றோர் ஆதரவாளர்களின் கைகளில் இருக்கின்றனர். அல்லது மடிகளில் இருக்கின்றனர்.

எப்பொழுதும் உடைந்து போகும் நிலையில் காற்றுக்கு அள்ளிச் செல்லும் நிலையில் மழை வெள்ளம் உட்புகும் நிலையில் இருக்கின்றன பொம்மை மக்களின் கூடாரங்கள். இந்த மக்களை பொம்மைகளைபோல தள்ளி தள்ளி வைப்பதும் பொம்மைகளை ஏமாற்றுவதுபோல ஏமாற்றுவதும்தான் இந்த நிலத்தில் இன்று நடக்கிறது. உறுதியான வீடுகளை காணவில்லை. வாழ்ந்த உறுதியான இடங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. சாம்பலும் மண் துகள்களும் கற்சிதைவுகளும் இரண்டாவதாக பொய்யப் போகும் மழையில் மேலும் கரைந்துவிடப் போகின்றன. உறுதியானதும் அழகானதுமான வீடு எப்படி இருக்கும் என்று டெனிஷாவோ நானோ அறிந்ததில்லை. மரப்பொந்துகளுக்குள் பற்றைகளுக்குள் சருகுகளுக்குள் போய் படுத்துக் கிடக்கும் பிராணியாக ஒடுங்கிக்கிடக்கின்றோம்.

என் புள்ளகள் நான் குந்தியிருக்கிற இடத்துக்காகத்தானே செத்துப் போனதுகள். அதுகள் செத்துக் கிடந்த இடத்தையும் அள்ளிக் கொண்டு போயிற்றாங்களே என்று கண்கள் கரைய சொல்லத் தொடங்கினார். என் இரண்டு புள்ளகள் அப்படிப் போச்சுது. ஓன்னு எங்க போனிச்சு என்ன நடந்தது என்னு தெரியாது? என்று வள்ளியம்மா கண்களை துடைத்துக் கொண்டார். இதுக்குள்ள கிடந்து சாக வேண்டியதாப் போச்சுது நம்பட நிலை… என்று மனம் வலிக்க சொல்லிக் கொண்டிருந்தார். டெனிசாவுக்கு நிலமில்லை. வீடில்லை. அந்தக் குழந்தை எங்கு போகும்? எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லுவார்கள். பொம்மைகளை தூக்கி எறிவதைப்போல இந்தச் சனங்களை தூக்கி எறிகிறார்கள். எங்கயாவது போய் வாழட்டும். ஆனால் டெனிஷாவுக்கு தெரியுமா அவள் எங்கு பிறந்தாள். இறுதியாக எந்த நிலத்தில் வாழ்ந்தாள்? அவள் விட்டுப் பெயர்ந்து சென்ற நிலம் எது? அந்தச் சிறிய வயதில் அவள் எல்லாhவற்றையும் அறிந்தபடி மௌனமாக இருக்கிறாள். இரசாகுமாரி என்கிற பெரியம்மாவின் இடுப்பில் இருக்கிற தருணங்களில்தான் அவள் முகம் துயருடன் பிரகாம் அதிகரித்து மலருகிறது.

டேனிஷாவின் பொம்மை வீட்டுக்குள் ஒற்றை கையையும் ஒற்றைக் காலையும் இழந்த பொம்மை படுத்துக் கிடந்தது. கண்கள் காயமுற்றிருந்தன். இந்தக் காயங்கள் எப்படி வந்தன? பொம்மையின் கை எங்கே? பொம்மையின் கால் எங்கே என்று டெனிஷாவைப் பார்த்துக் கேட்க முடியாதிருந்தன. அவளின் மனதில் ஆயிரம் ஆயிரம் கதைகள் தைக்கப்பட்டிருந்தன. பெருநிலமோ பொம்மைகளின் பொம்மை வீடுகள் நிறைந்த பொம்மை நிலமாகி விட்டது. நேற்றிரவு பெய்த கடும் மழையில் டெனிஷாவின் பொம்மை வீடு கவிழ்ந்து வெள்ளத்தில் அள்ளுண்டு சென்று விட்டது.

மாவுள் கண்கள்

பெருநிலத்தின் கதைகள் : 07 - நவராஜ் பார்த்தீபன்

எதிர்பாராமல் உதயகுமாரை வெண்புறா நிறுவனம் இருந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். உதயகுமார் உயிருடன் இருக்கிறான் என்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும். என்னைக் கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் விசாரிக்கத் தொடங்கினோம். எங்கடா இருக்கிற? எப்பிடியடா இருக்கிற? எங்க இருந்தனீ என்ற கேள்விகளை மாறி மாறிக் கேட்டோம். உதயகுமார் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒரு சில நாட்களாகியிருந்தன. மிக மெலிந்து போயிருந்தான். என்னடா இப்பிடி இருக்கிற? என்று அவனைப் பார்த்துக் கேட்டேன். முகாமில சாப்பிட்ட சாப்பாட்டின்ட வெளிப்பாடு என்றான். என்னை அவனது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனான். கிளிநொச்சியில் கரடிப்போக்கின் ஊடாக செல்லும் பொழுது ஒரு பாதை உருத்திரபுரத்திற்கும் இன்னொரு பாதை நாலாம் வாய்க்காலுக்கும் செல்லுகின்றது. உருத்திரபுரத்திலிருந்து நாலாம் வாய்க்கால், உருத்திரபுரம், பரந்தன் இப்படி அந்தப் பகுதி எல்லாமே வயல் நிலங்கள்தான். பச்சை வயல்களும் வாய்கால்களும் என்றிருந்த அந்தப் பகுதி இப்பொழுது கருகி வெளித்துப் போயிருந்தது.

பாத்திய எங்கட வயல்கள… என்று சோகம் பீறிட என் முகத்தை பார்த்து கேட்டான். படிக்கும் நேரம் தவிர மிகுதி நேரங்களை உதயகுமார் வயல்களில்தான் செலவிடுவான். இந்த வயல்கள் எந்தளவு தூரத்திற்கு செல்லுகின்றன என்று முன்பு அவனின் வீட்டுக்குச் செல்லும் பொழுது நான் கேட்டிருக்கிறேன். வயல்கள் பச்சையாய் விரிந்திருக்கும். இடையிடையே குடில்களைப்போல தெரியும் பூவரச மரங்கள் பச்சையாய் அசைந்து கொண்டிருக்கும். நாவல் மரங்கள் செழித்து பழங்கள் வாய்க்காலிற்குள்ளம் வயல்களிற்குள்ளும் கொட்டிக் கிடக்கும். கொக்குகளும் கானாங்கோழிகளும் ஓடித் திரிந்து கொண்டிருக்கும். வரம்புகளில் புற்கள் வளர்ந்து பச்சை மேடாயிருக்கும்.

இரணைமடுக்குளத்திலிருந்து வரும் நீர் கிளிநொச்சி குளத்திற்கு வந்து மீண்டும் பல இடங்களுக்கு பிரிந்து செல்கின்றன. உதயகுமாரின் வீட்டுக்குச் செல்லும் வழியிலும் ஒரு வாய்க்கால் செல்கின்றது. அது எங்கு செல்கின்றது என்றும் நான் உதயகுமாரிடம் கேட்டிருக்கிறேன. இடையிடே வீடுகள் ஒன்றிரண்டு இருக்கின்றன. மரத்தாலும் சீமென்டாலும் தடிகளாலும் பாலம் போட்டிருக்கும். சில இடங்களில் பாலம் இல்லாமல் வாய்க்காலைத் தாண்டியும் செல்வார்கள். சில இடங்களில் இறங்கி கால் நனையவும் செல்வார்கள். உதயகுமார் வீட்டுக்கு போகும் பொழுது அவனது அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். உதயகுமார் வீட்டில் பச்சை அருசியில்தான் சோறு சமைப்பார்கள். பச்சை அருசி சோறு அவனது வீட்டில் மட்டுமல்ல வன்னியில் உள்ள எல்லா வீடுகளிலும் சமைப்பார்கள். பச்சை அருசி சோற்றோடு சம்பலோ, பருப்புக் கறியோ சாப்பிட்டால்கூட போதுமாக இருக்கும். இப்பொழுது உதயகுமாரின் அம்மா நிவாரண அருசியை கழுவி உலையில் போட்டுக் கொண்டிருந்தார்.

வாங்க தம்பி… என்றது அவரது அன்பான அழைப்பு. உதயகுமாரின் அப்பா வேப்ப மரத்தின் கீழ் படுத்து நல்ல நித்திரை கொண்டிருந்தார். அந்த வேப்ப மரம் மிக வலுவுடன் நின்றிருந்தது. பல தலை முறைகளை கடந்து முறுக்கேறி வலியுடையுடன் அது நின்று கொண்டிருந்தது. உதயகுமாரின் அப்பா தினமும் வயல்களுக்குள் நின்று வேலை செய்து கொண்டிருப்பார். இப்பொழுது மிதிவெடிகள் கிடக்கலாம் என்பதால் அவர் வயல்களுக்குள் இறங்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் வயல் விதைக்க படையினர் அனுமதி வழங்கவில்லை என்று உதயகுமார் சொல்லிக் கொண்டிருந்தான்.

வெள்ளை அருசி சோற்றுடன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நானும் உதயகுமாரும் பரந்தன் குமரபுரத்தில் உள்ள மணியக்காவின் வீட்டுக்கு போனோம். அதற்கு முன்பாக நான் மணியக்காவின் குமரபுர வீட்டுக்கு போனதில்லை. நாங்களும் அவர்களும் ஸ்கந்தபுரத்தில் இடம்பெயர்ந்திருந்த பொழுதே பழகியிருக்கிறோம். இடம்பெயர்ந்த இடங்களில் எந்த வேறுபாடும் இல்லாமல் ஆழமாக பழகும் சூழலிருக்கும். வன்னியில் ஏற்பட்ட போர்கள் பல மகக்ளளை பல இடங்களில் வைத்து பழக வைத்திருக்கிறது. பரந்தனில் குடியேறிய மக்கிடம் விசாரித்து விசாரித்து போய் கொண்டிருந்தோம். மணல் தெருக்களாக இருந்தன. யுத்தம் நடந்த தடயங்களாக மண் திட்டுக்களும் பதுங்குகுழிகளும் அரண்களும் இருந்தன. இரண்டு அணிகளுக்கிடையில் தடுப்புச் சுவராக இருந்த பாலம், தெரு முடக்குகளில் பாதுகாப்பாக ஒளிந்திருந்து சண்டை பிடித்த இடங்கள் என்று பெரு யுத்தகளம் ஒன்றின் காட்சியை விரித்துக் கொண்டிருந்தது அந்த மணற்தெரு.

குமரபுரத்தில் இருக்கிற கால் ஏக்கர் குடியிருப்பில்தான் மணியக்கா இருக்கிறார். கால் ஏக்கரில் மீள்குடியேறியிருக்கிற சனங்கள் கூடாரங்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மணியண்ணையும் பூவரசம் தடிகளை நட்டு கூடாரம் அமைத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சுகியக்கா நின்று கொண்டிருந்தார். தீபன் வாரான் பார் புள்ள… என்று சுகியக்காவிடம் மணியண்ணை சொன்னதும் எங்க? என்று திரும்பி நின்று கொண்டு தன் ஒற்றைக் கண்ணால் பார்த்தார். சுகியக்கா என்னை கண்டதும் தீபன்… என்ட தம்பியப் பாருங்க.. என்று அழுத் தொடங்கினார். மெல்ல காலை நிதானமாக வைத்துக் கொண்டு என்னை நெருங்கி வந்தார்.

மணியக்கா எங்கோ நிவாரணம் குடுப்பதால் எடுக்கப் போயிருப்பதாகச் சொல்லிக் கொண்டு மணியண்ணை காணியில் நின்ற புற்களை செருக்கிக் கொண்டிருந்தார். மிகவும் கட்டையான அவரை புற்கள் மூடியபடி நின்றன. ஒற்றைக் கண்ணால் திருப்பித் திருப்பி சுகியக்கா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் முன்பு பார்த்த சுகியக்காவின் கண்ணை காணவில்லை. கண்கள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை என்னால் ஒரு செக்கன் கண்ணை முடிக் கொள்கையில்தான் புரிகின்றது. ஒரு அடியெடுத்துகூட வைக்க முடியாதிருந்தது.

யுத்தத்தினால் கண்களை பலர் இழந்து விட்டார்கள். எனக்கு ஒரு மாவுல் கண் வேணும் என்ற சுபராஜின் வார்த்தைகள் எனக்கு அவனைக் காணும் பொழுதெல்லாம் கேட்டபடியிருக்கும். பல்கலைக்கழகத்தில் அவன் படிக்க வரும் பொழுதிருந்த கண்களில் ஒன்று இப்பொழுது இல்லை. யாரோ ஒரு மாவுல் கண் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சில கண்களை வாங்கி வைத்திருந்தால் மாறி மாறி பாவிக்கலாம் எனறு சுபராஜ் கேட்டான். அந்தக் கண்ணால் பார்க்க முடியுமா என்று ஒரு குழந்தை கேட்டது. மாவுல் கண் அசையுமாடா என்று அவனிடம் முதலில் நான் கேட்டேன். அசையும் என்றும் கண்களை முடிக் கொள்ளலாம் என்றும் சுபராஜ் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிலபேருக்கு யுத்தத்தில் இரண்டு கண்களும் பார்வை இழந்து விட்டன. கிளிநொச்சி மகா வித்தியாயலத்தில் படித்துக் கொண்டிருந்த விஜயலாதன் யுத்த களத்தில் மிதிவெடியை எடுத்து விளையாடிய பொழுது வெடித்ததில் இரண்டுகளும் இல்லாமல் போய் விட்டன. அவனின் அப்பாவும் யுத்தத்தில் இறந்து விட்டார். மாடு மேய்க்கும் பொழுது அம்பலகாமத்திலிருந்து இராணுவம் எறிந்து கொண்டிருந்த எறிகணைகளினால் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ராஜ்குமார் இரண்டு கண்பார்வைகளைனயும் இழந்து விட்டான். அதே எறிகணை அவனின் அம்மாவையும் அப்பாவையும் முதலில் தின்றுவிட்டன. எனக்கு இந்த உலகம் எப்பிடி இருக்குமெண்டு தெரியும்… பாத்த உலகத்தை பார்க்கம இருக்க கஷ்டம்தான்… என்று ராஜகுமார் சொல்லிக் கொண்டிருப்பான்.

சுபராஜிற்கு கண்கள் வாங்க வேண்டும் என்று ஒரு கடைக்கு போன பொழுது அவனது கண்கள் இருந்த குழிக்கு அளவான கண்கள் இல்லை என்று திரும்பி வந்தான். அவனுக்கு சிறிய கண்கள் தேவை என்றும் அதை கொழும்பில் இருந்துதான் எடுத்து வரவேண்டும் என்று கடைக்காரர் சொல்லியிருக்கிறார்கள். மாவுல் கண்கள் ஆட்டின் கண்களைப்போலவே இருக்கும். முன்பு யுத்தத்தினால் கண்களை இழந்தவர்கள் பலர் ஆட்டுக் கண்களைத்தான் பாவித்தார்கள். போராளிகள் பொது மக்கள் என்று பலரைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கண்களால் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

கோணாவில் பாடசாலையில் படிக்கும் யோகப்பிரியாவிற்கு கண்ணில் எறிகணை பட்டததில் கருத்த முழி; இல்லாமல் போய் விட்டது. வெள்ளை முழி மட்டும் இருக்கிறது. அது சிறுத்து ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் கண்களை முடித் திறக்க முடிகிறது என்று ஆறுதல் பட்டாள். சில போராளிகள் கண்கள் இரண்டும் கைகள் இரண்டும் கால்கள் இரண்டும் காதுகள் இரண்டும் இல்லாமல் இருக்கிறார்கள். சிலருக்கு இந்த முக்கியமான உறுப்புகள் ஒன்றுமே இல்லாமல்கூட இருக்கிறது. இரண்டு கைகளும் இல்லாமல் கண்ணிலும் காயத்துடன் தன் எல்லா வேலைகளையும் ராஜா அண்ணன் பார்த்துக் கொள்ளுவார். சுப்பர் கப் மோட்டார் சைக்கிளில் நிறைய பொருட்களை கட்டிக் கொண்டு வேகமாக ஓடிச் செல்கையில் அவரை பார்த்து கையுள்ளவர்கள் எல்லாம் ஏங்கிக் கொண்டு நிற்பர்hகள். போராளி வெற்றிச்செல்விக்கு ஒரு கையும் ஒரு கண்ணும் இல்லை. அவர் என்னிடம் வரும் பொழுது சிலவேளை ஒரு பொய்க்கை கொண்டு வருவார். சிலவேளை அது கழன்று கீழே விழுந்து விடும். சுப்பர் கப் மோட்டார் சைக்கிளில் அந்தத்கையை ஒருமாதிரி ஊன்றிக் கொண்டு வருவார். சிலவேளை பொய்க்கையை கழட்டி முன்கூடைக்குள் வைத்திருப்பார்.

பார்த்துக் கொண்டிருந்த உலகத்தை பாக்கமால் இருப்பது எப்படி துயரமானது. இருள் எப்படியிருக்கும். வெளிச்சம் எப்படியிருக்கும். பொருட்கள் எப்படியிருக்கும். நீர் எப்படியிருக்கும் என்று… எல்லாம் எப்படியிருக்கும்? என்பதை பார்த்த இவர்களையும் பிறப்பிலே கண்பார்வை அற்றவர்களையும் யுத்தம் தனது கோரமான ஒலிகளால்; வதைத்திருக்கிறது. ராஜ்குமாருக்கு செல்கள் விழுவது விமானம் தாக்குவது என்பன எப்படியிருக்கும் என்று தெரியும். அவன் பிறந்த நாள் முதல் முல்லைத்தீவில் நடக்கும் சண்டைகள், எறிகணைத் தாக்குதலகளுக்கு முகம் கொடுத்திருக்கிறான். என்ன சத்தமாயிருக்குது… இப்ப என்ன நடந்தது? விமனமா? ஷெல்லா? என்று இவனைப் பார்த்து பிறப்பிலே கண்பார்வை இழந்த பிள்ளைகள் கேட்பார்கள். நாளடைவில் அவர்களும் விமானம் வருகுது… செல் விழுகுது… குண்டு போடப்போறான்... இது கிபிர்தான்… என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் ராஜ்குமாரின் கண்களை பறிக்க முதலில் இருந்த யுத்த தளவாடங்கள் பல இப்பொழுது இல்லை. நிறைய நவீன யுத்த தளவாடங்கள் வந்து விட்டன. இப்பொழுது சனங்களுக்கு ஏற்ப அவர்களின் செறிவுக்கும் தூரத்திற்கும் அவர்களை அழிக்கும் வித்திற்கும் அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் வித்தித்திற்கும் ஏற்ப பல ஆயுதங்கள் வந்து விட்டன. இந்தப் பத்தாண்டுகளில் ஏற்பட்ட நவீன ஆயுதங்களை ராஜ்குமார் பார்க்கவில்லை. ஆனால் அவனும் வெடிக்கும் சத்தங்களை வைத்து இவை என்ன ஆயுதங்கள்? என்று ஒரளவு கண்டு பிடிப்பான்.

நான் உங்களுக்கு மாவுள் கண் வேண்டித் தாரன்… என்று சொல்லியதும் சுகியக்கா எனக்கு மாவுள் கண் வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஏனக்கா என்று அவரைப் பார்த்து கேட்டேன். என்ட கண்ணை ஆர் தம்பி திருப்பித் தருவினம். என்ட எல்லாக் கண்ணையும் இழந்திட்டனே… என்று தரையில் விழுந்து அழத் தொடங்கினார். தரையில் குந்திக் கொண்டு ஒற்றைக் கண்ணால் தரையை பார்த்து பேயறைந்த மாதிரி இருந்தார். மளமளவென உரப்பையை கிண்டி இரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு படத்தில் கோபியும் சுதன் அண்ணனும் சுகியக்காவும் அவர்களின் கடைசிக் குழந்தையை தூக்கி வைத்தபடி நின்று கொண்டிருந்தார்கள். மற்றப் படத்தில் கோபியும் கடைசிக் குழந்தையும் இருந்தார்கள்.

மணியக்கா 1996இல் சத்ஜெய யுத்தத்தினால் இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரம் முருகன் கோயிலடியில் எங்களுடன் இருந்தார். மணியக்காவுடன் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த லட்சுமியக்கா என்று குமரபுரத்தில் இருந்து வந்த நிறையப் பேர் இருந்தார்கள். எங்களுடன் மிக நெருக்கமாக மணியக்கா குடும்பம், லட்சுமியக்கா குடும்பம், கோபியன்றி, பாங்அன்றி, கொக்குவில் அன்றி என்று நிறையப்பேர் பழகினார்கள். மணியக்காவும் லட்சுமியக்காவும் பரந்தன் குமரபுரத்தில் இருந்து 1990 ஆகாயக் கடல்வெளிச் சமரினால் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். கோவியன்றியும் பாங்கன்றியும் யாழ்ப்பாணத்திலிருந்து சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். ஸ்கந்தபுரம் முருகன் கோயிலைச் சுற்றி எங்களப் போல அகதிகள்தான் நிறைந்திருந்தனர்.

அப்பொழுது நான், செந்து, சுரேஸ், சின்னத்தம்பி, பெரியதம்பி, சுகியக்கா, சோபா, சசி எல்லாம் சின்னப் பிள்ளைகள். விளையாடுறது அடிபடுறது என்று எங்கள் பொழுதுகள் ஸ்கந்தபுரம் முருகன் கோயிலடியில் கழிந்து கொண்டிருக்கும். அன்றைய அகதிக் குழந்தைகளாக நாங்கள் முருகன் கோயிலடியில் விளையாடிக் கொண்டிருந்தோம். சோபாவும் சசியும் குமரபுரத்திலிருந்து தங்கள் பொம்மைகளையும் கொண்டு வந்திருந்தார்கள். அத்தோடு கோயிலடியில் உள்ள தடி தண்டு போன்ற பொருட்களையும் வைத்து விளையாடிக் கொண்டிருப்போம்.

சோபாவும் சசியும் இத்தியடி அம்மன் கோயிலடியில் தற்காலிகமாக இயங்கிக் கொண்டிருந்த பரந்தன் பாடசாலைக்கு போய் படித்துக் கொண்டிருந்தார்கள். எட்டாம் வகுப்பு இறுதித் தவணை பரீட்சை அக்கராயனில் நடந்த பொழுதுதான் நான் பாடசாலை போனேன். அதுவும் போன போன பாட்டுக்கு வினாத்தள்களை கொடுத்தார்கள். இருந்து எழுதிக் கொடுத்தோம். பெறுபேறும் பார்க்கவில்லை. மணியங்குளம் போன்ற இடங்களில் எங்களை கொண்டு போய் குடியேற்றினார்கள். அப்ப கிளிநொச்சிக்கு இனி போக ஏலாது போல கிடக்குது… என்ற நினைப்பு எனக்கு ஏற்பட்டது. மணியங்குளத்திலயும் நாங்கள் லட்சுமியக்கா மணியக்கா வீட்டுக்கு பக்கத்திலதான் காடு வெட்டி குடியிருந்தோம்.

யாழ்ப்பாணத்தில இருந்து வந்த குணம் அண்ணன், கிஷ்ணா அண்ணன் என்று எங்களைச் சுற்றி எல்லா அகதிகளும் வந்து மணியங்ளத்தில் காடு வெட்டிய இடத்தில் குடியேறினார்கள். குணம் அண்ணை கச்சான் இனிப்பு பைகளை செய்து தன்து பிழைப்பை ஓட்ட, கிஷ்ணா அண்ணன் அவற்றை கொண்டு கடையில போடுவார். தேவா அண்ணா கடலை வண்டில் வைத்திருந்தார். இந்தக் குடியிருப்பிலதான் சுகியக்காவுக்கு திருமணம் நடந்தது. துளசி என்னும் திருகோணமலையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் சுகியக்காவை திருமணம் செய்து கொண்டார். கோபி என்ற பெண்குழந்தை அவர்களுக்கு பிறந்தது. குழந்தையும் மனைவியும் வீட்டிலிருந்தாலும் களம் அவர்களை அழைத்துக் கொண்டிருந்தது. துளசியண்ணன் ஒரு நாள் களத்திற்கு சென்றார். அன்று நடந்த சண்டையில் பலர் இறந்து விட்டார்களாம் என்ற செய்தி ஊரில் சகிந்தது. பின்னர் எதிர்பாராத சமரில் துளசி அண்ணன் வீரமரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் சுகியக்காவுக்கு கிடைத்தது. எதையும் அறியாமல் பிறந்து முப்பது நாட்களேயான குழந்தையான கோபிகா சிரித்துக் கொண்டிருந்தாள்.

துளசியண்ணையின் கல்லறைதான் இருபது வயதான சுகியக்காவின் உலகமாகி விட்டது. மக இளம் வயதில் சுகியக்காவைப்போல பல பெண்கள் விதவையானார்கள். அவர்கள் மறுமணம் செய்ய வேண்டும். மறு வாழ்வுக்கு செல்ல வேண்டும் என்பதைத்தான் ஊரில் உள்ள சனங்களும் போராளிகளும் வற்புறுத்துவார்கள். 2000களான அந்தக் காலத்தில் பல அப்பாக்கள் களம் சென்று வீரமரணம் அடைந்தார்கள். எல்லைப்படைகளாகவும் துணைப்படைகளாகவும் களத்திற்கு செல்லுவார்கள். சுகியக்காவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று போராளிகள் பலர் வீட்டில் வந்து புத்தி சொல்லிக் கொண்டிருப்பார்கள். சுதன் என்ற துளசி அண்ணனின் நண்பன் சுகியகக்காவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஒரு மாதிரி சுகியக்கா மறுமணம் செய்து கொண்டார். கோபிகாவை மிக அன்போடு பார்த்துக் கொண்டார் சுதன் அண்ணன்.

மீண்டும் ஒரு பெண்குழந்தை அவர்களுக்கு பிறந்தது. அந்தக் குழந்தை கைக்குழந்தையாக இருக்கும் பொழுதுதான் வன்னி இறுதி யுத்தத்தில் சுகியக்கா இடம்பெயரத் தொடங்கினார். கோபிகாவை சுதன் அண்ணன் தூக்கிக் கொண்டு ஓட சுகியக்கா பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார். பக்கத்தில் மணியக்கா, மணியண்ணை, செந்து, சுரேஸ் எல்லோரும் சனங்களோடு ஓடிக் கொண்டிருந்தார்கள். பொக்கனையில் எல்லோரும் போய் தஞ்சமடைந்தார்கள். அங்கும் கடுமையான எறிகணகள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. செத்து விழுபவர்களை பார்த்துக் கொண்டு மிக அஞ்சியபடி சுகியக்கா தன் பிறந்த குழந்தையை பொத்தி வைத்துக் கொண்டிருந்தார்.

முதலில் ஒரு எறிகணை சுதன் அண்ணாவை அந்த இடத்திலேயே கொன்று விட்டது. அடுத்த எறிகணை விழும் பொழுது சுகியக்கா கோபியைக் கூட்டிக் கொண்டு குழந்தையை தூக்கியபடி ஓட தொடங்கினார். சுகியக்காவின் கையை பிடித்தபடி கோபி நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது கையை விட்டு நழுவி நிலத்தில் குப்புர விழுந்தாள். இரத்தத்தில் தோய்ந்தபடி கிடந்த கோபியை பார்த்து அழுது துடிக்கும் பொழுது கையில் இருந்த குழந்தையும் காயப்பட்டு மூச்சடங்கி போய்விட்டது. அடுத்த எறிகணை சுகியக்காவின் ஒற்றை கண்ணை தின்று விட்டது. கப்பலை நோக்கி ஓடிய சுகியக்கா இறந்த குழந்தையை கப்பல் வரை கொண்டு சென்றார். சுரேஸை காணவில்லை. லாம்மாஸ்டர் கொண்டு பொருட்களை ஏற்றச் சென்றவன். இறந்து கிடப்பதாக யாரோ சொல்லியும் என்ட புள்ள வருவான் என்று மணியக்கா அழுது துடித்தார். காணாத சுரேஸையும் கண்ணுக்கு முன்னால் எல்லா கண்களையும் இழந்து கிடக்கிற சுகியக்காவையும் நினைத்து மணியக்கா மணலில் கிடந்து துடித்தார்.

சுகியக்காவிடமிருந்த இறந்த குழந்தையை கப்பலடியில் மணற்தரையில் புதைத்து விட்டு கப்பலால் மணியக்காவும் கடுமையான காயமடைந்த சுகியக்காவும் ஏற்றி அனுப்பப்பட்டார்கள். இந்தக் கண் மடல் திறந்து மூடாது... மாவுள் கண் போட்டாலும் அது திறந்து கொண்டிருக்கும்… எனக்கு ஏனய்யா இனி கண்ணை… என்று சுகியக்கா திரும்பவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

பொய்க் கால்கள்


பெருநிலத்தின் கதைகள் : 06 - நவராஜ் பார்த்தீபன்

கோபியின் அப்பாவின் நரைத்த தாடி முகத்தை மூடியிருந்தது. அலைச்சலும் துயரமும் அவரது முகத்தில் பெருங்களைப்பை வெளிப்படுத்தின. அவர் பேசுவதற்கு ஏலாதவரைப்போல குந்திக் கொண்டார். பாருங்கய்யா கோபியின்ட அப்பாவை… என்று கோபியின் அப்பாவை காட்டியபடி மீண்டும் அழத்தொடங்கினார் கோபியின் அம்மா. கோபியின் அம்மாவின் தலையிலிருந்த முடி முழுவதும் உதிர்ந்து போயிருந்தது. முகம் அழுதழுது கண்ணீர் பொருக்குகள் விழுந்திருந்தன. அழுவதும் திடீரென மௌனமாக யோசிப்பதுமாக மாறி மாறி முகம் சுருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் கூடாரத்திற்குள் நுழைந்து ஒரு சோடி பழைய செருப்புக்களை எடுத்துக் கொண்டு வந்தார். இது கோபி போட்ட செருப்பு சிலநேரம் என்ட வயிறு என்ட பிள்ளையை நினைச்சு எரியேக்க இந்த செருப்புக்களை வயித்துக்குள்ள வைச்சுக் கொண்டு கிடப்பனய்யா… என்று விம்மினார். அவன் பூட்டி விட்டு பொத்தானோட சேட்டக் கழற்றி வைச்சிட்டு போனான். அத எடுத்து பாப்பன். கடைசியா போகேக்க தன்ட உடுப்புப் பெட்டிய காட்டி நீங்க கஷ்டப்படேக்க இத திறந்து பாருங்க என்டான். ஒரு நாள் திறந்து பாத்தா தன்ட உடுப்புகளயும் தன்ட கொப்பிகளையும் வைச்சதோட இருப்பத்தையாயிரம் ரூபா காசையும் வைச்சிருந்தான். நாங்கள் எப்பிடி ஐய்யா அத எடுத்து செலவழிக்கிறது? என்றபடி உடுப்புப்பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.

கோபி இறுதிநாள் காணாமல் போயிருந்தான். ஆனால் கஜானந்தைப்போல உயிருடன் இருந்தால் திரும்பி வருவேன் என்ற வாக்குறுதிகளை கொடுத்துச் சென்றிருந்தான். யாழ்ப்பாணத்தில எங்கயாவது இருப்பானோ? எங்கள எங்கயாவது தேடிக் கொண்டிருப்பானோ? பாதை தெரியாம எங்கயாவது போயிருப்பானோ? காயப்பட்டு எங்கயாவது கிடப்பனோ என்று தொடர்ந்து எண்ணற்ற கேள்விகளை கோபியின் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். என்ட புள்ள வருவான். அவன் வருவான் என்டதாலதான் உயிர கையில பிடிச்சு வைச்சிருக்கிறன். இன்னும் ஒரு வருசம் பாப்பன். வராட்டி நான் செத்துப் போயிருவன் தம்பி… என்றபடி மீண்டும் விம்மி அழத் தொடங்கினார். கோபியின் பெரியம்மாவின் தலையிலும் முடியில்லை. தலை மொட்டையாக இருந்தது. கோபியை நினைத்து நினைத்து அழுது அவரது முடியும் உதிர்ந்து போய்விட்டது. யாழ்ப்பாணத்திலயும் வவுனியாவிலயும் ரோட்டுகளில பாருங்க தீபன். எங்கயாவது கோபி நிப்பான். நிண்டா அவனுக்கு சொல்லுங்க அம்மா பாத்துக் கொண்டிருக்கிறா என்டு. என்ட புள்ள ஓடி வருவான் என்னப் பாக்க…

கோபியின் அம்மாவின் வார்த்தைகள் தடுக்க முடியாத துயர ஆற்றைப்போல பேரெடுப்பில் பாய்ந்து கொண்டிருந்தன. பிள்ளையை இழந்த தாயின் பெருந்துயரும் ஆற்ற முடியாத காயமும் வெதும்பிக் கொண்டிருந்தது. போங்க… கோபியைப் பாருங்க என்ற வார்த்தைகள் கோபியை தெருக்களில் என்னை தேட வைக்கும் அளவில் பாதித்திருந்தது. கோபியை உன்மையில் ஏதாவது ஒரு தெருவில் சந்திக்க முடியுமா என்ற ஏக்கத்தை எனக்குள்ளும் உண்டு பண்ணியிருந்தது. ஆனாலும் கோபியின் அம்மாவை அடுத்த முறை சந்திக்கும் பொழுது என்ன சொல்லப் போகிறேன் என்ற கேள்வி மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. கோபியும் கஜானந்தும் எங்கு போயிருப்பார்கள்? காணாமல் போன பிள்ளைகள் எல்லோரும் எங்கு போயிருப்பார்கள். அவர்கள் ஏதோனும் ஒரு தெருவில் தாய்மார்கள் நினைப்பதைப்போல அலைந்து கொண்டிருப்பார்களா? வருவதற்கு வழிதெரியாமல் நிற்பார்களா? அல்லது நினைவிழந்து இருப்பார்களா?

மணியக்கா அப்படித்தான் சுரேஸ் வருவான் என்று நம்பியிருக்கிறார். இந்தத் தாய்மார்களும் தந்தைமார்களும் சகோதரர்களும் உறவுகளும், சித்திரவதை செய்யப்படும் இளைஞர்களின் புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்தருப்பார்களா? யார் தான் அவற்றை கொண்டு சென்று காண்பிக்க முடியும். முகம் கட்டப்பபட்ட பிள்ளைகளும் சுடப்படும் பொழுது பின்பக்கமாக காட்டப்படும் பிள்ளைகளும் தங்கள் பிள்ளைகளாக இருக்கலாம் என நினைப்பார்களா? எலும்புக்கூடுகளை மீட்கும் பொழுது இவர்கள் தங்கள் பிள்ளைகளை தேடி வருவார்கள். சித்திரவதையினால் கொல்லப்பட்ட பிள்ளையில் மிஞ்சிய துண்டங்களில் எப்படி முகம் தெரியும்? சீருடைகளோ, தகட்டுத் துண்டுகளோ, சட்டைத் துண்டுகளோ, காற்சட்டையின் துண்டுகளோ மணிக்கூடுகளோ, மோதிரங்களோ, சங்கிலிகளோ இறப்பர் வளையங்களோ இந்த பெற்றோர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் பெருநிலம் கிளறிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் அப்பாண்ணாவின் வீட்டை நோக்கி நானும் யசோவும் போய்க் கொண்டிருந்தோம். மகாத்மா வீதி என்ற அந்த ஒழுங்கை வரும் பொழுது எனக்கு முதலில் ஆங்கிலக்கல்வி ஞாபகம்தான் வந்தது. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது ஆங்கிலக் கல்வி நிலையத்திற்கு போவதென்பதே பெரிய தகுதியாகி விட்டது. நீ ஆங்கிலக் கல்வி நிலையத்திற்கு போறாயே? என்பது பெரிய கேள்வியாகிவிட்டது. இந்த தொல்லை தாங்க முடியாமல் நானும் ஒரு நாள் ஆங்கிலக் கல்வி நிலையத்திற்கு போனேன். வாங்கோ இருங்கோ என்று அங்கு கல்வி கற்பித்த ரீச்சரும் சேரும் இருத்தினார்கள். கோழிக்கூடு மாதிரி கம்பிகளால் கட்டப்பட்ட இந்த வகுப்பறைகள் எனக்கு சிறைச்சாலை மாதிரி தெரிந்தன. ஆங்கிலம் என்றாலே பேய் என்பதைப்போல இருந்த எனக்கு அன்றோடு ஆங்கிலக் கல்வி நிலையத்திற்கு விடை கொடுக்க வைத்தது. ஆனால் குமணனன். கோபி, நவப்பிரசாத், சுமன் எல்லாம் போவார்கள். ஆங்கிலக் கல்வியுடன் அந்த ரீச்சரும் சேரும் மட்டுமல்ல, அதற்கு முதலில் கற்பித்த இந்திரா ரீச்சரும், உருத்திரபுரம் பாடசாலையில் படிப்பித்த அன்டன் சேரும் சிம்ம சொப்பனங்களாகின.

இந்திரா ரீச்சரும், ஆங்கிலக்கல்வி நிலைய சேரும் ரீச்சரும் சத்ஜெய யுத்தத்துடன் இடம்பெயர்ந்து கிளிநொச்சியை விட்டே போய் விட்டார்கள். இந்திரா ரீச்சர் மாமரத்திற்கு கீழே மணல் பரப்பி சுற்றி வர இருத்தி படிப்பித்துக் கொண்டிருப்பார். ஆங்கிலத்தோடு தமிழ் கணக்கு போன்ற பாடங்களும் படிப்பிப்பார். முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சத்ஜெய யுத்தம் தொடங்கும்வரை எங்கள் உயர் கல்வி நிலையம் இந்திரா ரீச்சரின் மாமரம்தான். மலையகத்தில் இருந்து 1970களில் இனக்கலவரத்தால் துரத்தப்பட்ட இந்திரா ரீச்சரை சத்ஜெய யுத்தம் கிளிநொச்சியிலிருந்து திருப்பி கலைத்து விட்டது.

மகாத்மா வீதி சனங்களின் நடமாட்டத்தை இழந்து பாழடைந்திருந்தது. ஆங்கிலக் கல்வி நிலையம் இருந்த இடத்திற்கு பக்கத்தில் வன்னி யுத்தத்திற்கு முதல் அருணகிரி கல்வி நிலையம் இருந்தது. ஓலைக் கொட்டில்களும் கழிவு மரத்துண்டுகளால் செய்த இருக்கைகளும் எழுதும் தட்டுக்களும் அழிந்திருந்தன. முந்தி நானிருந்து படிச்ச இடத்தை பாரடா தீபன்… என்று யசோ சொன்னான். இரவிரவாக அந்த இடத்தில் இருந்து யசோ படித்துக் கொண்டிருப்பான். நானும் யசோவும் இந்த வகுப்பறைகளில் இருந்து பாடங்கள் குறித்து விவாதித்திருக்கிறோம். வகுப்பறை கூரையை இழந்திருக்க மேலாக இருக்கும் புளியமரம் செழிப்பிழந்து கிடந்தது.

அப்பாண்ணாவின் வீடு இருந்த இடத்தில் சுவர் துண்டுகள் சில உடைந்து கரைந்து விழாமல் நின்றன. பழைய வீடு இருந்த இடத்தில் தகரங்கள் மூடப்பட்டிருந்தன. அப்பண்ணா யார் வந்திருக்கிறது என்று பாருங்க… என்றபடி யசோ அப்பண்ணாவை அழைத்தான். தரையில் கிடந்த அப்பண்ணா காலை இழுத்தபடி ஊன்றுகோல்களை ஊன்றியபடி எழுந்து வந்தார். இங்க பார் தீபன… என்றார் சிரித்தபடி. எப்படி இருக்கிறீங்கள்? என்று கேட்க முடியாமல் என்ன செய்யிறீங்க என்றேன். முதலில் தரப்பால் தந்தாங்கள். இப்ப தகரம் தந்திருக்கிறாங்கள். சும்மா மூடிக் கொண்டு இருக்கிறம். ஐஓஎம் நிறுவனத்திட்ட குடுத்துதான் வீடு கட்ட வேணும் வாரம் என்டவங்கள் காணேல்ல பாத்துக் கொண்டிருக்கிறன். என்று மாமரத்துடன் சாய்ந்தபடி ஊன்றுகோல்களை இறுகப் பிடித்தார்.

அப்பாண்ணாவின் காலை காணவில்லை. அவர் தனது காலை இழந்து போயிருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது என்னாலே தாங்க முடியாதிருந்தது. அப்பண்ணா பொய்க்காலை தூக்கி சதைந்த மண் திட்டில் வைத்துக் கொண்டு மீண்டும் என்னோடு பேசத் தொடங்கினார். ஜெயக்குட்டியை நான் தேடினேன். அவனும் மற்றப் பிள்ளைகளும் நந்தினி அக்காவும் வவுனியாவுக்கு போயிருக்கிறார்கள் என்று அப்பண்ணா சொல்லியபடி நீங்கள் இருந்து படிச்ச இடத்தை பாத்தியே எப்பிடி இருக்குது? என்றார். வெறும் நிலமாய் அழிந்து போயிருந்தது. நன் சைக்கிள் ஓடுவனடா என்றபடி மீண்டும் என்னைப் பாத்து புன்னகைத்தார். ஒற்றைக் காலை இழந்து சைக்கிள் ஓடுவதை தான் அடைந்த சாதனையாக அப்பண்ணா மகிழ்வதை நாங்கள் புரிந்து கொண்டோம். உன்மையாகவா? என்ற வார்த்தைகளுடன் அப்பண்ணாவின் பொய்க்காலை நான் வடிவாக பாத்துக் கொண்டிருந்தேன்.

எனக்கொரு பொய்க்கால் தாங்க… என்ற வார்த்தைகளை நான் பல இடங்களில் கேட்டிருந்தேன். காலில்லாத ஆக்களுக்கு பொய்க்கால் குடுக்கிறம் வாங்க… என்று இராணுவம் ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தது. எங்கட காலை எடுத்திட்டு இப்ப பொய்க்கால் தாரினம் என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன. ஒரு கால ஒரு என்ஜியோ தந்தது. அத வைச்சிட்டு இன்னொரு கால் வாங்கினால் மாறி மாறி போடலாம் என்று அப்பண்ணா சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அறிவிப்பிற்பால் கிளிநொச்சியில் அன்று பொய்க்காலுக்காக நிறையப்பேர் படயெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஊன்றுகோல்களுடன் வரிசையாக அமைதியாக குழப்பமின்றி அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பொறுங்கப்பா எல்லாருக்கும் கால் தருவினம் என்ற ஆறுதல் வார்த்தைகளும் கேட்டன. ஊன்றுகளை ஊன்றியபடி சிலர் பொய்க்கால்களை போட்டுக் கொண்டும் சிலர் கால் இலலாமலும் நின்று கொண்டிருந்தார்கள். ஏனப்பா காலைப் போட்டுக் கொண்டு வந்தனி கழட்டி வைச்சிட்டு வந்திருக்கலாமே? என்று ஒரு வயது முதிர்ந்த அய்யா சொல்லிக் கொண்டிருந்தார்.

கால்களற்றவர்களின் நகரம் என்றும் கால்களற்றவர்களின் நிலம் என்றும் எனக்கு அழைக்கத் தோன்றுகிறது. கோதாரி விழுந்த செல் என்ன மாதிரி விழுந்து இந்தக் காலை கொண்டு போனதெண்டுதான் எனக்கு தெரியேல்ல. ஏதோ பெரிய சத்தம் கேட்டது. முழிச்சா காலைக் காணேல்ல. ஈழப்போர் தொடங்கியதிலிருந்து கால்களை இழந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். போராளிகளில் பலர் கால்களை இழந்து போயிருந்தார்கள். ஆனாலும் கால்கள் இருப்பவர்களைவிட அவர்களின் பயணங்களும் பணிகளும் பலத்துடனிருந்தது. கால்களின் காயங்களுடனோ, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையிலோ பல போராளிகள் இருந்தனர். நானும் நினைவு தெரிந்த நாட்கள் முதலாக பலர் கால்களை இழந்து திரிவதை பார்த்து வருகிறேன். சிலவேளை கால்கள் துண்டிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருப்பதைபோல் யுத்தக்கனவுகள் எனக்கு வரும் துடித்து எழும்பி கால்களை பார்ப்பேன். நித்திரையை விட்டு முழித்ததும் எனது கால்கள் இருக்கின்றன என்று பெரிய ஆறுதலாக இருக்கும். அய்யோ! உனக்கு கால் இல்லாமல் போக கனவு கண்டனான் என்று யாராவது சொன்னால் கால் போகத்தான் போகுது என்று மனம் பதைபதைக்கும். எங்கள் நிலத்தில் எங்கள் நகரங்களில் எங்கள் கிராமங்களில் எங்கள் தெருக்களில் எங்கு கால் வைத்தாலும் கால் போகுதோ தெரியேல்ல… என்ற பயம் எல்லோரையும் பீடிக்கும். கண்ணிவெடிகளின் புதைந்திருக்கும் வெடிக்காத குண்டுகளின் நிலமாக பெருநிலம் மாறிவிட்டது.

அடே இதுக்கே நீ இப்படி பாக்கிறா முரசுமோட்டையில இருக்கிற இராசேந்திரத்தைப் போய் பார் இரண்டு காலயும் செல் ஒட்டக் கொண்டு போயிற்றுது… என்றார் அப்பண்ணா. இராசேந்திரத்துக்கு நான்கு பெண்பிள்ளைகள். கோரைக்கண்கட்டு என்ற குடியிருப்பில் இருக்கிறார்கள். செல் விழும்பொழுது மனைவியும் பிள்ளைகளும் படுகாயம் அடைந்தார்கள். அவருக்கு இரண்டு கால்களும் முற்றாக இல்லாமல் போய் விட்டது. இப்பொழுது ஒரு பெட்டிக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். சீ… தருமபுரத்தில வைச்சு இரவு கிபீர் அடிச்சதில கால்கள் இரண்டும் போயிட்டுது. இரவென்டபடியாலதான் நான் கால்களைப் பறிகொடுத்தன். என்று இராசேந்திரம் என்னைப் பாத்து சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கடைசி மகள் லக்சிகா பாடசாலையால் வந்து வெள்ளை உடுப்புடன் அவருக்கு ஒத்தாசை புரிந்து கொண்டிருந்தாள். உயரமாக உள்ள பொருட்களை எடுத்துக் கொடுப்பதும். இராசேந்திரம் அண்ணனை சக்கர நார்காலியில் வைத்து தள்ளுவதுமாக லச்சிகா தகப்பனுக்கு உதவிக் கொண்டிருந்தாள். இந்தப் பிள்ளையள படிப்பிக்க வேணும். எப்பிடி வளக்கிறது என்டு சிலவேளை மனம் உடைஞ்சும் போகும். நாங்கள் எல்லாரும் இப்பிடி நினைச்சா என்ன செய்யிறது? வாழத்தானே வேணும். இப்பிடியே விட்டிட்டு சாகிறதே? சாவில எத்தின பாடுகள பட்டம் என்று வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தார்.

தம்பி! இந்த இடத்தில கடையை போட வேணாமாம். முகாமில அருசிய பருப்ப வித்த காசில இந்த இடத்தில வந்து வெத்தில பாக்கு சீவல் என்டு வித்துத்தான் கடையை துடக்கினான். பிறகு வீடு கட்டத்தந்த காசில என்டு ஒருமாதிரி கடையை போட்டால் கடையை திருப்பி பிடுங்கிப் போட வேணுமாம்… என்ன செய்யிறது என்டு தெரியேல்ல? முற்றாக துண்டிக்கப்பட்ட கால்கள் இருந்த பகுதியை தடவிக் கொண்டு சொன்னார். அவர் நடக்க வேண்டிய நிர்பந்தத்தை அவரது கடைசிப் பெண்குழந்தை முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தார். எனக்கோ போன கிழமை பாத்தா துசாரஞ்சினி என்ற அக்கராயன் மகா வித்தியாலய பாடசாலை மாணவியும் நினைவுக்கு வந்தாள். ஆனைவிழுந்தான் சந்தியில் கடை வைத்திருக்கும் துசாரஞ்சினி ஒரு காலை இழந்திருந்தாள். மற்றையகாலும் சிதைந்து போயிருந்தது. அவளது இரண்டு கால்களும் பொய்க் கால்களைப் போலத்தானிருந்தன. மிக நெருங்கிப் போய் காலைப் பாhத்த பொழுது சிதைந்த கால் பொய்க்காலைப்போல சிதைந்து மாறியிருந்தது. அவளது அம்மா வைத்திருக்கும் சாப்பாட்டுக் கடையின் பின்னால் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் sபொய்க்காலை கழற்றி வைத்து விட்டு சிதைந்த காலில் இலையான்கள் மொய்க்காதபடி பழைய சீலையால் மூடியிருந்தாள். புண் இன்னும் ஆறேல்லை தீபன்ண... திருப்பி வெட்டி ஒப்பிரேசன் பண்ணினால் காலை எடுக்க வேண்டி வந்திரும் என்டு டொக்டர் சொன்னவர். ஆனா புண் மாறாமல் காலை எடுக்க வேண்டி வந்திருமோ தெரியெல்ல... என்று முகத்தை கோணிக் கொண்டு சொன்னாள். பொய்க்காலை போட்டுக் கொண்டு சிதைந்த காலை வைத்துக் கொண்டு துசாறஞ்சினி சைக்கிளில் வகுப்புக்கு செல்லத் தொடங்கினாள்.

துசாரஞ்சினியபை; போலவே வினோதினி என்று அவளுடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கும் கால்கள் சிதைந்திருந்தன. வினோதினி ஊன்று கோல்களின் உதவியுடன்தான் நடப்பாள். சிகிச்சை அளிக்கும் பொழுது அவளது கால் கட்டையாய் போய் விட்டது என்றும் மீண்டும் காலை சத்திரசிகிச்சை செயய வேண்டும் என்றும் வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏதோ கிடக்கிற துண்டுகள வைச்சு ஒப்பிரேசன செய்து நடக்க நிறையப்பேர் ரை பண்ணினம். நானும் இந்த பொய்க்கால்களப் போட்டு நடப்பம் என்டு நடக்கிறன் என்றான் ஜெயந்தன். ஜெயந்தன் பூநகரி வில்லடியில் வசிக்கிறான். அவனுக்கு முழங்கால்களுடன் இரண்டுகால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன.

ஜெயந்தன் யாழ்ப்பாணம் வரும் பொழுது யாழ் நகரத்திற்கு என்னை வரும்படி கேட்டான். நானும் அவனை சந்திக்க ஆவலுடன் வந்தேன். நான் அதற்கு முன்பு ஜெயந்தனைப் பார்த்தில்லை. எங்க எப்பிடி இருக்கிறாய்? என்று நான் கேட்ட பொழுது ஊன்று கோல்களுடன் பஸ்தரிப்பிட இருக்கையில் இருக்கிறேன் என்றான். நானும் தேடிக் கொண்டு வந்தேன். அப்பண்ணாவை மத்திய கல்லூரியில் தேடிய மாதிரித்தான். எனக்கு குறுக்கும் மறுக்குமாக சிலர் ஊன்று கோல்களுடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் தங்களின் கைகளுக்கு பக்கமாக ஊன்றுகோல்களை வைத்திருக்கிறார்கள். என்னை அடையாளம் படித்தபடி ஜெயந்தன் எழுந்தான். பற்களை இறுக்கியபடி சற்று தடுமாறித் தடுமாறி நடப்பேன் என்ற தைரியத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

கால்களை எடுத்துக் கொண்டு போய் எங்க எப்படி ஒட்டுறது என்டு தெரியேல்ல. என்ட கால் துண்டாய் விழேக்க எடுத்துக் கொண்டு வரவேணும் போல கிடந்தது என்று பிரபா அண்ணா சொன்னார். என்ட கால்கள் துணடாகி விழேக்க அத விட்டிட்டு வர எனக்க பெரிய கவலையாய் இருந்தது என்று காலை விட்டு வந்த துயரத்தை சொல்லிக் கொண்டிருந்தார். முந்தி பின்னேரத்தில சும்மா இருப்பனே? எந்த நேரமும் கிராவுன்ட்தான். கால்களால பந்தை தட்டிக் கொண்டிருக்க வேணும் போல கிடக்கும். இப்ப வீட்டில கிடக்கிறன். பூநகரிக்கு போய்க் கொண்டிருக்கும் பொழுது நல்லூரில் வைத்து ரங்கன் என்று இரண்டு கால்களையும் இழந்த ஒரு அண்ணனைக் கண்டேன். சக்கரநாற்காலியில் தெருவைப் பாத்துக் கொண்டிருந்தார். அவருக்கு பொழுதுபோக்காகவும் குடும்பத்தை கொண்டு நடத்தவும் ஒரு பெட்டிக்கடையை போட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

எப்பிடி உழழைச்ச பெடியன்? எப்பிடி ஓடியாடித் திரஞ்ச பெடியன்? இப்ப நாங்கள் குழந்தையள மாதிரி தூக்கி கிடத்தி இருத்த வேண்டி இருக்குது… நாங்கள் என்னய்யா பாவம் செய்தனாங்கள்? எப்பயும் இந்தப் பெடி வயலைக் உழுது பயிர் வளரத்துக் கொண்டிருந்தான் என்று ரங்கனின் அம்மா அழுது கொண்டிருந்தார். ரங்கன்தான் வீட்டில் மூத்த பிள்ளை. அவனுக்கு இளையவர்களாய ஐந்து கசோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கண்கலங்கியபடி ரங்கனைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

கால்களுக்காக வரிசை இன்னும் நீண்டு கொண்டிருந்தது. கால் கொடுக்கும் நிகழ்வில் என்ட பிள்ளைக்கு ஒரு கால் தாஙகோ என்று குழந்தை ஒன்றை தூக்கி வந்தபடி ஒரு இளந்தாய் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை கால் இழந்ததையும் பொய்க் கால்களையும் அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தது. அப்பண்ணா சிரித்தபடி சைக்களில் சென்று கொண்டிருந்தார்.

பிள்ளைகளை காணாதிருக்கும் அம்மாக்கள்

பெருநிலத்தின் கதைகள் : 05 - நவராஜ் பார்த்தீபன்

கஜானந்தின் அம்மா வந்த பிறகு மீண்டும் வீட்டிற்குப் போனேன். காக்கா கடைச் சந்தியில் விழுத்தப்பட்ட தண்ணீர் டாங்கி கிடக்கும் இடத்தில் இருந்த தற்காலிக சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கூடாரத்திற்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தார். யாரம்மா வாரது? என்று பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டார். என்னைப் பார்த்ததும் முகத்தில் வலியின் பல்லாயிரம் கோடுகள் அசைந்தன. முகம் சுருங்கி கண்ணீர் பீறிட்டுக்கொண்டு வந்தது. பேசாமல் உடைந்து சிறிய துண்டாய் கரைந்து போன சுவரில் விழுந்து அமர்ந்து கொண்டார். நானும் அப்படிச் சிதைந்த மற்றறொரு சுவர்த் துண்டில் பேசாமல் இருந்தேன். ஒன்டுமாய்த் தெரியேல்ல தீபன் என்றபடி வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினார். நான் உயிருடன் இருப்பேனாக இருந்தால் வருவன் எண்டு சொன்னவன். இவ்வளவு நாளாகிட்டுது. எங்க தீபன் அவன் போயிருப்பான். விக்கி விக்கி குழந்தையைபோல அழத் தொடங்கினார்.

தாயுக்காக குழந்தைகள் அழும் காலம் போய் இங்கு குழந்தைகளுக்காக தாய்மார்கள் அழும் காலம் எங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. அவனை எப்பிடி எல்லாம் வளத்தன். இந்தப் பிள்ளையள் அண்ணா அண்ணா என்டு தவிக்கும் பொழுது இதுகளுக்கு என்ன பதிலத் தம்பி சொல்லுறது? அழுதழுது கஜானந்தைப் பறற்pயே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். நானும் கஜானந் வருவான் என்ற நம்பிக்கையை அம்மாவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது கஜானந்தின் அம்மாவை போன்ற தாய்மார்களை குழந்தைகளைப்போல கையாள வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

உயிருடன் எனது பிள்ளை இருக்கிறது என்று நம்பும் ஆயிரம் ஆயிரம் பிள்ளைகளைப்போல யுத்தகளத்தில் கஜானந் காணாமால் போயிருக்கிறான். அவன் இறந்து கிடந்ததைப் பார்த்தார்களாம் என்று யாராவது சொல்லிக் கொண்டு வந்தால் அப்பிடிச் சொல்ல வேண்டாம் என்று கஜானந்தின் அப்பா மறிப்பார். அவன் இராணுவத்தினரிடம் சரணடைந்ததை பார்த்தார்களாம் என்றும் அவனின் அம்மாவுக்கு பல கதைகள் கிடைத்து விட்டன. கஜானந் இருக்கிறான்., வருவான் என்ற காத்திருப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. சில பத்திரிகைப் பக்கங்களை எடுத்துக் கொண்டு வந்து எனக்குக் காட்டத் தொடங்கினார். தினக்குரலில் கல்லை கரைய வைக்கும் கதைகள் என்றும், சுடராளியில் உயிர் வலிக்கும் கணங்கள் என்றும் அந்தப் பக்கங்கள் காணாமல் போனவர்கள் பற்றிய உறவுகளின் கடிதங்களையும் குறிப்புக்களையும் இறுதிநாள் கதைகளையும் நிரப்பி வைத்திருந்தன. இப்பிடி கஜானந்தையும் போட்டு தேடிப் பாப்பம் என்டுதான் இந்தப் பக்கங்களை எடுத்து வைச்சிருக்கிறன். என்று என்னைப் பாத்து சொல்லிக் கொண்டிருந்தார்.

இரவில நித்திரையில்லை தீபன். சூரியன் வானொலியில எத்தின பேரைத் தேடுற கடிதங்கள வாசிக்கிறாங்கள். அவங்கள் அதை வாசிக்க எனக்கு உயிரே போகிற மாதிரி இருக்குது. என்ன மாதிரி எத்தின வீடுகளில பிள்ளையள, புருசன்மார, தாய்மார, உறவுகள இழந்து சனம் தவித்துக் கொண்டிருக்கிறது என்றபடி மீண்டும் கஜானந்தின் அம்மா அழத் தொடங்கினார். கஜானந்தை பிரிய எங்களாலேயே முடியாதிருக்கும் பொழுது அவனது அம்மா அதை எப்படி தாங்குவார்? அவன் வருவான் என்டபடியாலதான் நான் இன்னும் உயிரோட இருக்கிறன். கம்பஸ் கிடைச்சுது போய் படிக்க காத்துக் கொண்டிருந்தான். எப்படியாச்சும் வருவான் தீபன் என்று மிக உறுதியாக சொல்லிக் கொண்டு எனக்கு தேனீரை நீட்டினார். தீபனுக்கு போடுற தேத்தன்னியோட எனக்கும் ஒன்டு போடுங்க என்ற கஜானந்தின் வார்த்தைகள் வீடு சிதைந்துபோயிருக்கிற அவனது காணியிலிருந்து எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.

நானும் யசோதரனும் எங்களது காணியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். எங்கள் தெரு என்றதும் எனக்கு நிறைய ஞாபகங்கள் வந்தன. உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கோபிநாத்தோடு சேர்ந்து படிக்கும் ஞாபகங்கள் வந்து கொண்டிருந்தன. நானும் கோபிநாத்தும் ரஜனியும் இன்னும் சில பெடியளும் நின்று கதைத்துக் கொண்டிருக்கும் மைதானம் சிதைவு மண்டிப் போயிருந்தது. ரஜனியையும் கோபிநாத்தையும் என்னையும் கூட அந்த மைதானத்தில் காணவில்லை. பக்கத்தில் ஒரு முன்பள்ளி இருந்தது. முன்பள்ளி இருந்த இடமே தெரியவில்லை. ஒரு சில வீடுகளில் மீள வந்து ஆட்கள் இருந்தார்கள். சத்ஜெய யுத்தம் முடிந்து வந்த பிறகு மீண்டிருந்த எங்கள் ஊர் தெரு மறுபடியும் பழைய நிலையைவிட மோசமாக சிதைந்திருந்தது.

கோபிநாத்தின் அம்மா பூவரச மர வேலியைப் பிடித்தடி யோசித்துக் கொண்டிருந்தார். யாரய்யா போறது? என்ற அவரது வார்த்தைகளில் எதிர்பார்ப்பும் பேராவலும் துயரும் படிந்திருந்தது. கோபிநாத்தின் அம்மாவை கண்டால் என்ன செய்யிறது என்ன கதைக்கிறது என்டு தெரியேல்லடா என்று ரஜனி சொன்னதைப்போல எனக்கும் என்ன செய்வது எப்படி கதைப்பது என்று தெரியவில்லை. அவரைப் பாத்து எப்படி இருக்கிறீங்கள் என்று கேட்க முடியுமா? ஆனால் அவர் முதலில் படிப்பு முடிஞ்சுதா? எப்பிடி இருக்கிறிங்க? எங்க இருக்கிறிங்க? என கேட்டுக் கொண்டு கோபியைப் பாத்திங்களா? தீபன்… என்று அழத் தொடங்கினார். கடைசி வரைக்கும் எங்களோடதான் இருந்தான். உயிரோட இருந்தா வருவன் என்று சொல்லிட்டு;ததான் போனான் என்று குழந்தை மாதிரி விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

சாப்பாடு இல்லை. சனங்கள் எல்லாம் செத்து விழுந்து கொண்டிருந்தது. எங்களோடயே இருந்தான் என்று அழுது கொண்டே என்னை கூடாரத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். சில தகரங்களால் தடிகளின்றி மூட்டப்பட்டிருக்கும் கூடாரமும் இறப்பர் தரப்பாலினால் அமைந்த ஒரு கூடாரமுமாக வீடு சுருங்கிப் போயிருந்தது. தகரக்கூடாதரத்திற்குள் கோபியின் கடைசித் தம்பி நுளம்பு வலைக்குள் படுத்திருந்தான். அவர்களின் பழைய வீடு இருந்த இடம் மண்திட்டாக இருந்தது. மண்ணால் கட்டப்பட்ட அழகான அந்தப் பழைய வீடு எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. 1996 சத்ஜெய யுத்தத்திற்கு முன்பு கட்டப்பட்ட அவர்களின் வீடும் எனக்கு தெரியும். மீண்டும் அவர்கள் வந்து இரண்டு கூடாரங்களை அமைத்திருந்ததார்கள்.

கோபிநாத் என்னுடன் முதலாம் வகுப்பிலிருந்து படித்துக் கொண்டிருந்தவன். காலையில் பாடசாலை செல்லும் பொழுது என்னுடன்தான் வருவான். அவன் பாடசாலை போகும் பொழுது அவனது உருவம் மறைந்து கொண்டிருக்கும்வரை மறைந்து முடியும்வரை கோபியின் அம்மா பார்த்துக் கொண்டிருப்பார். வகுப்பில் கோபிக்கும் எனக்கும் சண்டைகள் வரும். இருவரும் அடிபட்டிருக்கிறோம். ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடியிருக்கிறோம். பிரத்தியேக வகுப்புக்களுக்கும் போயிருக்கிறோம். குண்டு மாமா என்று எங்கள் தெருவில் இருந்தவரின் மகளான சுமதி ரீச்சரிடம் மாலையில் போய் படிப்போம். கோபிநாத்தின் அம்மாவும் அப்பாவும் உடுப்பு தைப்பார்கள். கோபி வித்தியாசமான பல வடிவங்களில் காற்சட்டைகள் தைத்து போட்டிருப்பான். எனக்கும் அவர்கள்தான் சிறிய வளதில் கற்சட்டை தருவார்கள். தையல்கார வீடு என்றும் கோபியின் வீட்டை அழைப்பார்கள்.

ஏழாம் வகுப்பு வரை படித்த பிறகு சத்தெஜய போரால் கோபி அவனின் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து ஒட்டிசுட்டானுக்கு போனார்கள். நாங்கள் ஸ்கந்தபுரம், மணியங்குளத்திற்கு போனோம். ஒட்டிசுட்டானையும் இராணுவம் பிடித்த பிறகு அவர்கள் மாத்தளைக்கு போனார்கள். மீண்டும் நாங்கள் ஊர் திரும்பும் பொழுது இருவரும் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தோம். கோபி மாதத்தளை மாவட்ட பாசாலையில்தான் பரீட்சை எழுதினான். மாதத்தளைக்கு போன பிறகு அங்கு அவனுக்கு பல நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். நகைச்சுவையாக எப்பொழுதும் பேசும் கோபியை அங்கிருந்த நிறையப்பேருக்கு பிடித்து விட்டது. மீண்டும் கோபிநாத் ஊருக்கு வந்த பிறகு மாத்தளையில் படித்த அவனது நண்பர்கள் தொடர்ந்து கடிதம் எழுதுவார்கள். கடிதம் வந்தவுடன் என்னிடம் வந்து வாசித்து காட்டுவான். இங்கிருந்து பாடக்குறிப்புக்களையும் கேள்விகளையும் அனுப்புவான்.

மாத்தளையில் தமிழ், இந்துநாகரிகம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து சிலர் போய் கற்பித்து வந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருப்பான். நாங்கள் விடையளிக்கும் முறை, இங்கத்தைய பாடக்குறிப்புக்கள் என்றால் மாத்தளை தமிழ் மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லுவான். லோகேஷ் வாத்தியின் தமிழ் பாடக்குறிப்புக்கள் சிவஞானம் வாத்தியின் இந்துசமய பாடக்குறிப்புக்கள், கனைக்ஸ் வாத்தியின் இந்துநாகரிக படக்குறிப்புக்கள் எல்லாம் வாங்கி தானே சின்ன சின்ன எழுத்தாக எழுதி தபாலில் அனுப்பி விட்டு சந்தோசப்படுவான். நமது காலத்தில் நடந்த எல்லா துயரங்களையும் வலிகளையும் தனது பாடக்கொப்பிகளில் எழுதி வைத்திருப்பான்.

நானும் கோபியும் ஒன்றாகத்தான் படிப்போம். எங்கள் வீட்டில் நின்ற மாமரத்தின் கீழாக அல்லது என்ஈசி டீசனில் சிலவேளை பகலில் என்றால் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நாங்கள் சிறிய வயதில் படித்த வகுப்பறைகளில் இப்படி இருந்து இருவரும் விவாதித்து படித்துக் கொண்டிருப்போம். பாடங்கள் குறித்த எங்கள் விவாதங்கள் சிலவேளை பாடத்தைத் தாண்டி அரசியல் சினிமா என்றும் சென்றுவிடும். சிலவேளை இருவருக்கும் இடையில் முரண்பாடே வந்துவிடும். சண்டைக்குப் பிறகும் டேய் தீபன்… என்று என்னைக் கூப்பிட்டபடி கோபி வருவான். அல்லது கோபி நிக்கிறானா அம்மா என்றபடி அவனது வீட்டுக்கு போவேன். திரும்பவும் படிப்பதற்காக போவோம்.

என்ஈசி டீசனில் நானும் கோபியும் ஒன்றாகவே லோகேஷ் வாத்தியிடம் தமிழ் படித்தோம். ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஆழமான பதில் அளிப்பதில் எங்களுக்குள் போட்டி ஏற்படும். இருவரும் தேடிய புதிய விடயங்களை பறிமாறுவோம். என்ஈசியில் இரவில் அரிக்கன் லாம்மை கொண்டுபோய் வைத்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது மேசையில எங்கட பெயர எழுதி வைப்பமடா.. அதோட திகதியளையும் எழுதி வைப்பம். ஒரு காலத்தில பாக்கலாம். அப்பிடி பாக்கேக்க எப்பிடியிருக்கும் தெரியுமாடா? என்று சொல்லிக் கொண்டிருப்பான்.

அடுத்த நாள் வந்து என்ஈசி இயக்குனர் வந்து மேசையை வாசித்து விட்டு புது மேசை வாங்கித் தரச் சொல்லப் போகிறார் என்று நான் சொல்லிக் கொண்டிருப்பான். என்ஈசி இயக்குனர் நகுலன் படிக்கும் மாணவர்கள் அதை உடைச்சிட்டான்கள். இதை உடைச்சிட்டான்கள். என்று கத்திக் கொண்டிருப்பார். பியரை குடிச்சிட்டு வந்து பெடியள் கரும்பலகைகளிலயும் மேசைகளிலயும் வெளிப்பாடுகளை காட்டி உடைத்து வைத்திருப்பான்கள். சிலவேளை விளக்கங்களும் விசாரணைகளும் நடக்கும். சிலவேளை நம்மட பெடியள் தகரங்களையும் கழட்டிக் கொண்டு போயிருவாங்கள். திவா, நிரஞ்சன், கஜானந் இப்பிடி கொஞ்சப்பேர் இரவில தங்கிறதே அங்கதான். இது பழைய என்ஈசி பற்றிய கதையள். புதிதாய் மத்திய கல்லூரிக்கு முன்னால் கட்டிய டீசன் எனக்கும் நிறைய நாள் தங்கிறதுக்கு உதவியிருக்கிறது. என்னைப்போல இடமற்றலைந்த ஜெனிற், நவராஜ், அமலன், சேனா இப்படி நிறையப்பேர் தஞ்சமடைந்திருக்கிறோம். அங்கும் இப்பிடித்தான் உடைப்பாங்கள்.

இந்த ஆள் வகுப்பில வைச்சு காசு கட்டீட்டியா என்டு வதைக்குது… இப்பிடி செய்தாதான் சரி என்டுற சத்தங்கள் மட்டும் எனக்கு கேட்கிறதுண்டு. ஆனால் என்னைப் போன்ற வறுமையான மாணவர்களுக்கு இலவசமாக படிக்க விடுற நல்ல மனுசன் என்னும் அப்பிராயம் எனக்கு வகுப்பறைகளில் சேதங்களை உண்டு பண்ணும் விளையாட்டு எண்ணங்களை தருவதில்லை. கோபிநாத்தும் நகுலன்சேர் பாவமடா ஏன்டா நம்மட பெடியள் இதுகள உடைக்கிறாங்கள் என்டு கேட்பான். சிலவேளை நானும் கோபியும் படிச்சுக் கொண்டிருக்கும் பொழுது நகுலன் சேர் வந்து நல்லா படியுங்கட கம்பஸ் போகவேணும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். இப்ப நகுலன் இயக்குனரின் என்ஈசி இருந்த இடத்தில எந்த தடயங்களும் இல்லை. நாங்கள் எழுதி வைத்த குறிப்புக்களும் பெடியள் உடைச்ச மிச்சங்களையும் காணவில்லை.

கோபிநாத்திடம் ஞாபகங்களை சேமிக்கும் பழக்கம் நிறைய இருக்கிறது. படிக்கும் காலத்து கதைகளை சொல்லுவான். உனக்கு ஞாபகமிருக்காடா? என்று நினைவுக்கு வருவதையெல்லாம் என்னிடம் கேட்பான். அவனது உடுப்புப் பாட்டியிலும் புத்தகப் பட்டியிலும் அவன் நிறைய ஞாபகப் பொருட்களை சேகரித்து வைத்திருந்தான். மாத்தளை பாடசாலையில் படித்து பிரியாவிடை பெறும் பொழுது தனது வெள்ளைச் சேட்டில் மாணவர்களின் கையயொப்பங்களை வாங்கி வைத்திருந்தான். சிறிய வயது முதல் படித்த புத்தகங்கள், பாவித்த உடுப்புக்கள் எல்லாம் வைத்திருந்தான். நண்பர்களின் பெயர்ககள் என்று தன்னோடு அவன் நிறைய ஞாபகங்களை வைத்திருந்தான். இருவரும் பரீட்சை எழுதினோம். எனக்கு பல்கலைக்கழகம் கிடைத்தது. அவனுக்கு கிடைக்கவில்லை.

இருவரும் ஒன்றாகவே பெறுபேற்றை இணையத்தில் பாக்கப் போயிருந்தோம். எனக்கு பெறுபெறு பார்த்த இடத்திலேயே பகிடிவதைகள் தொடங்கின. என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு: வந்தான். அடுத்த முறை பரீட்சை எழுதுடா என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். இல்லடா இனி படிக்க ஏலாது.. ஆங்கிலத்தை படிச்சிட்டு எதாவது வேலையில இறங்குவம் என்று சொன்னான். அவனின் முகம் வாடிப் போயிருந்தது. அம்மாவுக்கு என்னடா சொல்லப்போறாய் என்று கேட்டதற்கு தெரியேல்லடா பாப்பம், சமாளிப்பம் என்று வாடிய முகத்தால் சிரித்தபடி சொல்லிக் கொண்டிருந்தான். எங்கள் வீட்டுக்கு வந்து அம்மா உங்கட மகனுக்கு கம்பஸ் கிடைச்சிட்டு. இனி ஒரு கவலையும் இல்ல உங்கட கஷ்டம் தீரப்போகுது என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

எனக்கு கோபிநாத்தின் குடும்பம்பத்தின் நிலையை நினைக்க கவலையாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அவின் அம்மா தைத்துக் கொண்டிருக்கிறார். அந்த தெருவால் செல்லும் பொழுது அவனது அம்மா தைக்கும் தையல் மெசினின் சத்தம்தான் பெரிதாக கேட்டுக் கொண்டிருக்கும். தையல் தவிர காலையிலும் மாலையிலும் கடைகளுக்கு கோபியின் அப்பா பாண் போடுவார். அதனால் அவரை பேக்கரி அண்ணன் என்றும் அழைப்பார்கள். இரவு பகலாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் அவரை பாக்கும் பொழுதெல்லாம் கழுத்தில் உடுப்பு அளக்கும் நாடாதான் தொங்கிக் கொண்டிருக்கும். வானொலிக்கான உறைகளை தைத்துக் கொண்டிருந்தார். கோபிநாத்தின் குடும்பம் ஓரளவு ஓடிக் கொண்டிருப்பதற்கு அந்த வேலைதான் கை கொடுத்தது. பிறகு ஆட்டோ கார் போன்ற வாகனங்களுக்கு சீட் தைத்துக் கொடுத்தார். அந்த சீட்டுக்களை இறுதியாக இழுத்துக் கட்டும் கடுமையான வேலையில் கோபிநாத்தும் அப்பாவுடன் இணைந்து செய்து கொண்டிருப்பான்.

நான் பல்ககைலக்கழகம் போகும் பொழுது என்னை வழியனுப்பி வைக்க வந்தான். கோபி ஆறு மாத ஆங்கில வகுப்பை நிலாந்தனிடம் படித்து முடித்திருந்தான். இப்ப நல்லா ஆங்கிலம் கதைக்கிறான் எழுதுறான் என்று நான் ஒரு முறை விடுமுறையில் போகும் போது நவபிரசாத் சொன்னான். இப்பொழுது படலையடியில் மழிக்கப்படாத முகத்துடன் கோபிநாத்தின் அப்பா பெருந்துயரம் பீறிட வந்து கொண்டிருந்தார்.

மாவீரர் துயிலுமில்ல வீதி

பெருநிலத்தின் கதைகள் : 04 - நவராஜ் பார்த்தீபன்

அன்றிரவு யசோதரனின் வீட்டுக்கு போனேன். அவனின் மனைவி விஜிதா எங்களுக்குச் சாப்பாடு பறிமாறிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் பாப்பாக்கா என்ற யசோதரனின் மாமியார் இருக்கிறார். சத்ஜெய போரில் வீடு பாக்க வந்த கணவனை இழந்த அவர் இப்பொழுது மனிதாபிமானத்திற்கான போரில் பிரபா என்ற தனது மகனை இழந்திருக்கிறார். கணவன் இல்லாமல் கடுமையாக உழைத்து பிள்ளைகளை வளர்த்து வந்த பாப்பாக்காவின் மூத்த மகன் பிரபாதான் அவர்களது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்தான். ஏனைய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பற்காக வேலைகளுக்குச் செல்லுவான். அவன் கிளிநொச்சியுள்ள கடைகளில் வேலைக்கு நின்றதையும் தெருக்களில் சைக்கிள்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு திரிந்ததையும் தினமும் பார்த்திருக்கிறேன்.

குடும்பத்தை நிமிர்த்த நினைத்த பிள்ளையை யுத்தம் தின்று விட்டது. பாப்பாக்காவும் மூன்று பெண் பிள்ளைகளும் இரண்டு மகன்மார்களும் புதுமாத்தளனிலிருந்து படகு ஒன்றின் மூலம் வந்து படைகளிடம் சரணடைய வந்தார்கள். கடலில் வைத்து படைகளை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது இவர்களை நோக்கி படைகள் துப்பாக்கிச் சுடுகளை நடத்தத் தொடங்கிவிட்டனர். கரைக்கு வந்தததும் காயமடைந்த மகனை படகுக்குள் ஒளித்துக் கொண்டு வந்தார்கள். படகை ஓட்டிய ஓட்டியோ இறந்து சரிந்து போயிருந்தான். மகனை கைப்பற்றிய இராணுவம் வைத்தியசாலைக்கு கொண்டு போகிறோம் என்று சொல்லி விட்டு கொண்டு போனது. சில நாட்களின் பின்னர் பாப்பாக்காவையும் பிள்ளைகளையும் அழைத்து உங்கள் மகன் இறந்து போய் விட்டார் என்பதை சொல்லி திறபடாத சவப்பெட்டியைக் காட்டி விட்டு அடக்கம் செய்யப்போகிறோம் வாருங்கள் என்று இயல்பாகச் சொன்னார்கள்.

கிளிநொச்சியில் உயதநகரில் உள்ள தங்கள் தெருவில் ஒரு சிறிய கடையை போட்டு இரண்டாவது மகன் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார். சிறிய கடைதான். முதலுக்கு ஏற்ற வகையில் கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை கொள்வனவு செய்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மண்ணை கையால் உருண்டை உருண்டையாகப் பிடித்து வைக்கப்பட்ட அரைவாசிச் சுவர்களுடன் அவர்களின் வீடு அமைந்திருக்கிறது. அக்கம் பக்கமெல்லாம் இப்படியான வீடுகளும் தகரங்களையும் கூடாரங்களையும் கூட்டி மூடியிருக்கும் குடில்களிலும்தான் சனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகாமிலிருந்து அழைத்து வந்த பாப்பாக்கவும் பிள்ளைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் மூடப்பட்டிருந்த சவப்பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நானும் யசோதரனும் காலையில் மீண்டும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சென்றோம். அங்கு பதிவுகள், புகைப்படப்பிடிப்புக்கள், விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு மண்டபங்களிலும் ஆட்கள் குவிந்தபடி தங்கள் அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும் அங்கவீனப்பட்டவர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். காயமடைந்த சுவர்களை பின்னணியாக் கொண்டு அவர்களை குடும்பம் குடும்பமாக இராணுவம் புகைப்படம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மீண்டும் நான் அப்பண்ணாவை தேடிக் கொண்டிருந்தேன். வரிசையில் நிற்கும் சனங்களுக்கிடையில் ஊன்றுகோல்களை ஊன்றிக் கொண்டு பலர் நின்று கொண்டிந்தார்கள். அவர்களது முகத்தைப் பார்த்தேன். அப்பண்ணா இல்லை. நிவாரண அட்டைகளையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். வெயிலோ எல்லாரையும் காலையிலேயே வாட்டத் தொடங்கி விட்டது. சரிவராது காணிக்குப் போகட்டும் அங்கு வைத்துச் சந்திப்பம் என நினைத்துக் கொண்டேன்.

அப்பண்ணவை சந்திக்க முடியாமல் மீண்டும் நகரத்திற்கு சென்றோம். பேரழிவுகளின் காட்சி தொடர்ந்து கொண்டேயிருந்தன. இன்னும் கஜானந்தின் வீட்டுப் பக்கம் செல்லவில்லை என்று யசோதரனுக்கு சொல்லிக் கொண்டு துயிலுமில்ல வீதியில் சைக்கிளை விடு என்றேன். துயிலுமில்ல வீதியில் முதலில் கிளிநொச்சி பொதுச்சந்தை இயங்கியிருந்த இடம் அழித்து வெறுமையாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில கட்டிடங்கள் இடிபாடடைந்த நிலையில் நிற்கின்றன. சந்தைக்கு முன்னால் இருந்த பேரூந்து நிலையம் முன்பு அங்கு ஒரு பேரூந்து நிலையம் அமைந்திருந்தது என்பதைக்; காட்ட உருத்திரபுரம், முல்லைத்தீவு முதலிய இடங்களுக்குரிய தரப்பிடங்களின் பெயர்கள் கொஞ்சம் அழியாமல் இருந்தன. ஏனைய எல்லா தரிப்பிடங்களும் அழிந்து போய்விட்டன. துயிலும் இல்ல வீதியில் இருந்த பல கடைகள், கமல் திரையரங்கு, இசைநிலா திரையரங்கு எல்லாமே அழிந்து விட்டன.

பாரதி உணவகம் இருந்ததிற்கான தடயங்களை நான் தேடிக்கொண்டே வந்தேன். பக்கத்தில் இருந்த லோன்றிக்கார அய்யாவின் கடை, முன்னால் இருந்த ராயு அண்ணனின் அகநிலவு தேனீர்க்கடை, அதற்கு பின்னாலிருந்த இசைநிலா திரையரங்கு எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருந்தேன். இடிபாடடைந்து சில துண்டுச் சுவர்கள் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தன. முதலில் கஜானந்தின் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். அங்கு கஜானந்தின் இரண்டு தங்கைகளும் கூடாரத்திற்குள் இருந்தார்கள். சின்னவள் அட்சயாவும் இடம்பெயருவதற்கு முன்பு பார்த்ததை விட நன்றாக வளர்ந்திருந்தாள். பெரியவள் அபர்ணாவும் வளர்ந்திருந்தாள். தங்கைச்சி தீபண்ணா வாரார் என்று கொண்டு இருவரும் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். எனக்கோ கஜானந் இல்லாத அவனது காணிக்குள் காலடி எடுத்து வைக்கவே மிக துயரமாக இருந்தது.

கஜானந் நிக்கிறானா? என்று கேட்டுக் கொண்டுதான் முன்பு அந்த வீட்டுக்குள் நுழைவேன். அந்தத் தெருவில் செல்லத் தொடங்கிய பொழுதே எனக்கு கஜானாந் பற்றிய ஞாபகங்கள் வந்து குவியத் தொடங்கின. இப்பொழுது அவனை நான் தேடிக் கொண்டு வரும் வீடும் இல்லை அவனும் இல்லை. அம்மா கடைக்குப் போயிற்றார். வந்திருங்க அண்ணா என்று சொல்லிக் கொண்டு என்னை தங்கை அபர்ணா நெருங்கி வந்தாள். எனக்கோ அங்கு நிற்க முடியாதளவில் துயரம் பெருகிக் கொண்டிருந்தது. அண்ணா எங்கேயம்மா என்று அட்சயாவைப்யைப் பார்த்துக் கேட்க அவளின் சிரிப்பு திடீரென சோர்ந்து போனது. நான் மேலும் அவர்களைப் பார்க்க தாங்க முடியாதவனாகிறேன். கஜானந்தும் நானும் அவனின் அம்மா சுட்டுத் தந்த ரொட்டிகளைச் சாப்பிட்டது. பியரைக் குடித்து விட்டு அவனின் வீட்டில் தூங்கியது எல்லாம் என் ஞாபகத்திற்கு வந்தன. சிதைவடைந்த சுவர் துண்டில் அமர்ந்திருந்தபடி எல்லாவற்றையும் நினைக்க ஓ.. என அழ வேண்டும் போலிருந்தது.

நான் பிறகு வாரன் என்று கூறிவிட்டு அகநிலவு தேனீரகத்தடிக்கு போவம் வாடா என்று யசோவை அழைத்துக் கொண்டு வந்தேன். அகநிலவு தேனீரகத்திற்கு முன்னாலுள்ள முற்றம் பற்றைகளும் புற்களுமாய் இருக்கிறது. மேலே நின்ற நாவல் மரம் காயத்துடன் மனிதர்களை இழந்து தனித்து அசைந்து கொண்டிருந்தது. அது கஜானந்தையும் சேனாவையும் அமலனையும் தேடுவதைப்போல இருந்தது. அது கிளிநொச்சியில் வாழ்ந்த பல மனித்களை பார்த்திருக்கும் அவர்களுக்காகவும் அது அசைந்து கொண்டிருந்தது. அவர்கள் திரும்பாத அந்த மரத்தடி நிழலுக்கு எங்கள் பழைய நண்பர்கள் யாரும் திரும்புவதில்லை. நாங்கள் கூடி நின்ற பழைய இடத்தில் ஒரு முறை நின்று பார்த்தேன். நீ எங்க போனாலும் இந்த இடத்திற்குத்தான் திரும்பி வர வேணும் என்று கஜானந் சொன்னதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. திரும்பவும் அதே இடத்தில் வந்து நிற்கிறோம். ஆனால் எங்களுடன் பயணத்தை தொடங்கியவர்கள் சேர்ந்திருந்தவர்கள் யாரும் இப்பொழுது இல்லை.

எங்கள் அணியில் பத்துப் பதினைந்து ஆட்களுக்க மேல் இருக்கிறார்கள். கிளிநொச்சியில் உள்ள அநேகமான கழிவுகள் எங்கள் அணியில்தான் இருந்தன. பியிரும், சிகரட்டும், மதுபானக் கடையும் தெருவும் அரட்டையும் என்று காலத்தை கழித்து இப்பொழுது ஓரளவுக்கு பல்கலைக்கழகம், கல்வியல் கல்லூரி என்று ஏதோ போய்விட்டார்கள். சிலர் போரில் இறந்து விட்டார்கள். கஜானந் எங்கள் குழுவில் மிகவும் கலகலப்பானவன். உயர்தரம் படித்த பின்னர் அந்தக் குழுவை அந்த இடத்தில் கஞ்சி பஜாரை உருவாக்கிய தந்தை அவன்தான். ஒருநாளும் அந்தப் பக்கமும் செல்லாத என்னையும் ஒருவாறு கொண்டுபோய் சேர்த்தது அவன்தான். பல்கலைக்கழகம் மூடப்பட்டு ஒரு வருடமாக ஊரில் நிற்கும்பொழுது விவரணப் படம் எடுக்கும் வேலை ஒன்று செய்து கொண்டிருந்தேன். அந்த வேலை தவிர்ந்த நேரங்களில் அந்த இடம்தான் பொழுதை சுகமாய் இனிதாய் கழிக்கும் இடமாக கடைசிவரை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஏன்டா இஞ்ச வாறீங்கள்? என்ட உயிர எடுக்கிறீங்கள்? நான் வியாபாரம் செய்யிறேல்லையா? என்று எல்லாரையும் ராயு அண்ணன் சிரித்துக் கொண்டே திட்டிக் கொண்டிருப்பார். உங்களின் கடையில் நாங்கள்தானே தேனீர் குடிக்கிறம், கண்ணாடிப் பெட்டியில வைச்சிருக்கிற வடையள், மோதகங்கள சாப்பிட யார் ராயுஅண்ண வரப்போறறாங்கள்? என்று கஜானந் சொல்லிச் சிரிப்பான். கடையில் இருந்த கதிரைகளில அரைவாசியில் எங்கள் பெடியள்தான் எந்த நேரமும் இருப்பார்கள். ராயுவர் எழுப்பி எங்களைக் கலைச்சுக் கலைச்சு களைச்சுப் போவார். ஒரு தேனீர் தாங்க ஒரு சிகரட் தாங்க போறம் என்று கேட்டு வாங்கிய பிறகும் குழு இடத்தை விட்டு நகராது. வேலைக்கு வெளிக்கிடும் பொழுதும் ராயு அண்ணனிடம் வந்த ஒரு தேனீர் குடித்து விட்டுத்தான் போவேன்.

கஜானந் எனக்கு மிகவும் பிரியமான நணபன். அந்த இடத்தில் பழகி கொஞ்ச நாட்களின் பின்னர் ஒருநாள் எல்லா நண்பர்களும் போய்விட்ட பின்னர் நானும் கஜாகனந்தும் லோன்றிக் கடை அய்யாவின் சுவரில் குந்திக் கொண்டு கதைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் அவன் தன் அப்பம் விற்கும் கதைகளை ஆரம்பித்தான். மாலை நேரத்தில் அரிசி மா இடித்து விட்டு காலையில் நேரத்துடன் அம்மா சுட்டுத் தரும் அப்பங்களை நகரத்தில் உள்ள சில கடைகளுக்கு போடுவேன். அப்பாவின் உழைப்பு காணாது அதனால்தான் ஒரளவு வீட்டில் சமையல்கள் நடக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தான். இதேபோலத்தான் யசோதரனும் றோல், மிதிவெடி என்ற பலகாரங்களை செய்து கடைகளுக்கு போடுகின்றான். அவனின் வீட்டில் அவனது அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் சேர்ந்துதான் இந்தத் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யசோவும் காட்போர்ட் பெட்டி ஒன்றில் பலகாரங்களுடன் செல்லுவதை சின்ன வயதிலிலேயே பாத்திருக்கிறேன். கஜானந்திற்குள் இப்படி பல கதைகள் உறைந்திருந்தன.

நாங்கள் துயிலுமில்ல வீதியில் நிற்கும் பொழுது எத்தனையோ நாட்கள் களத்தில் மரணித்த போராளிகளின் உடல்களை சுமந்து செல்லும் வண்டிகள் செல்லுவதைப் பார்த்திருக்கிறோம். சிலவேளை வண்டிகளுக்கப் பின்னால் சென்று துயிலும் இல்லம் வரை போய் வருவோம். எங்களுடன் படித்த பழகிய பல நண்பர்கள் வீரமரணம் அடைந்து வெற்றுப் பெட்டிகளில் வருவார்கள். சிலவேளை ஒரு நாளிலேயே நாலைந்து வெற்றுடல்களும் கொண்டு செல்லப்படும். கனவுக்காய் மரணித்த அந்த வீரர்கள் உறங்கும் நிலம் அந்த வீதியால் செல்லப்படும் பொழுது வரும் முறிப்பு என்ற இடத்தில்தான் இருந்தது. அங்கு சென்று பார்த்த பொழுது அடித்து அழிக்கப்பட்டு சாய்க்கப்பட்ட நிலத்தின் மேலால் புற்கள் அடர்ந்திருக்கின்றன. பச்சை நிறமாக செழித்து வளர்ந்து காடாகியிருக்கும் அந்த நிலத்தில் அழிந்த கல்லறைகளுக்கு மேலால் எருக்கம் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. கல்லறைகளை அழித்து விட்டார்கள் எருக்கம் மரங்களை அழிக்க முடியுமோ என்று ஒரு கிழவன் சொல்லிக் கொண்டு போகிறார்.

இறுதியாய் 2006 மாவீரர் நாளன்று முழுவதும் நான் கஜானந் மற்ற நண்பர்கள் எல்லாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நின்றோம். அணியணியாய் சனங்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்காய் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நின்றார்கள். எனது அண்ணாவின் கல்லறையின் முன்பாக அம்மாவும் தங்கைச்சியும் அண்ணாவின் மனைவியும் அண்ணாவின் குழந்தையும் அஞ்சலித்தபடி நிற்கிறார்கள். இதே நிலத்தில் அண்ணா புதைக்கப்பட்ட நாளன்று நாம் உருகி உருகி அழுது கொண்டிருந்தோம். எல்லாக் கல்லறைகளின் முன்பாகவும் அதே அழுகை ஆண்டுகள் கழிந்தும் தொடர்ந்து கொண்டிருந்தன. கஜானந் பார்த்து துயரில் உறைந்தபடி நின்றான். எங்கள் நண்பர்களில் பலரது சகோதரர்களும் மாவீரர்களாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். சில நண்பர்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் போன்றவற்றுக்கும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கும் போயிருந்தார்கள்.

நாவல்மரத்திற்குப் பின்னால் இப்பொழுது யாரும் இல்லை. ஒரு நாள் கிபீர் பெரும் இரைச்சலுடன் வந்து கொண்டிருந்தது. கிளிநொச்சியை சுற்றிச் சுற்றி இரைந்து அதிர வைத்துக் கொண்டிருந்தது. ஜெனிற் அந்த நாவல்மரத்தின் பின்பாகத்தான் ஒளிந்திருந்தான். கிளிநொச்சி நகரமே அதிர்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. தங்கச்சி பாடசாலைக்குப் போயிருந்தாள். அம்மா வேலைக்கு போயிருந்தார். என்ன செய்கிறார்களோ என்று பதை பதைத்துக் கொண்டிருந்தது. கிளிநொச்சி கீபர் நகமாக மாறும் அளவுக்கு கட்டுநாயக்கா முதலிய விமானத்தனங்களில் விமானங்கள் நிற்பதைவிட கிளிநொச்சியில்தான் கூடுதலான நேரங்களில் நிற்கும். கிபீர் இரணைமடுவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில்தான் உலாவித் திரிந்து கொண்டிருக்கும்.

இரவில் தூங்க முடியாது. டேய்.. கிபீர் என்று அமம்மா தட்டி எழுப்பும் பொழுதெல்லாம் கிபீர் குண்டை கொட்டி விட்டதுதேவா என்ற அதர்ச்சியுடன் எத்தனை நாள் நித்திரையில் துடித்தெழும்பியிருப்பேன். எழும்பியதும் தங்கச்சி எங்க அம்மா? என்பதுதான் என் முதலாவது கேள்வி. கிபீர் வந்து பெரும்பாலும் இரணைமடுப் பக்கமாக குண்டுகளை கொட்டி விட்டுப் போவதே வழக்கமாக மாறிவிட்டது. சரி கிபீர் போய்விட்டது என்று பதுங்குகுழியைவிட்டுத் திரும்பப் போய் படுத்து கண்ணயர திரும்ப வரும். என்னம்மா… என்று அம்மாவைக் கேட்டுக்கொண்டு மறுபடியும் பதுங்குகுழிக்கு ஓடுவோம். எங்கள் வீட்;டின் முன்னால் உள்ள வீட்டில் பிறந்து சில நாட்களேயான குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஒரு இளம்தாய் எங்கள் வீட்டிலுள்ள பதுங்குகுழிக்குள் வந்து எங்களுடன் சேர்ந்து இருப்பார்.

இப்பிடித்தான் ஒருநாள் நான் வேலையால் வந்து வீட்டுக்குள் நுழைய கிபீர் விமானங்கள் வந்து சுற்றிக் கொண்டிருந்தன. அன்றும் தங்கச்சி பாடசாலைக்குப் போயிருந்தாள். அம்மா வேலைக்குப் போயிருந்தார். திடீரென கிபீர் விமானங்கள் பதிந்து குண்டுகளை கொட்டத் தொடங்கின. பக்கத்து வீட்டு அம்மா ஒருவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சட்டென வெறும் நிலத்தில் விழுந்து கிடந்தார். என்னையும் படு தம்பி! படு! என்று சொல்லிக் கொண்டு பதைபதைப்புடன் கிடந்தார். விமானங்களோ குண்டுகளை தொடர்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. மாறி மாறி ஒவ்வொரு விமானங்களும் நாலலைந்து குண்டுகள் என நான்கு விமானம் இருபது குண்டுகளை பொழிந்தன. எனக்கு மேல்தான் குண்டுகள் விழுகின்றன என நினைத்தேன். புகை மண்டலமாக வீடு அதிர்ந்து பொருட்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டன. கிபீர் போன பிறகு பார்த்தால் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சசியும் அவனின் தம்பியுமான கிருசாந்தனும் அவனின் அப்பா அத்தை அத்தையின் கணவர் என்று ஐந்து பேர் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். சசியும் கிருசாந்தனும் எங்கள் பாடசாலையில்தான் அப்பொழுது உயர்தரம் படித்தார்கள். அவர்கள் கஜானந்துடனனும் மிக நெருக்கமாக பழகியிருக்கிறார்கள்.

இறுதியாய் நான் கிளிநொச்சியிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் கஜானந்துடன் கொஞ்சநேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இசைநிலா திரையரங்கின் வாசலில் நண்பர்hகளுடன் படித்திருந்தான். என்னை போகாதடா! என்று அவன் மறித்துக் கொண்டிருந்தான். பாஸை கிழித்தால் போக மாட்டாய்தானே என்று ராயுகடையில் இறுதியாய் தேனீர் குடிக்கும் பொழுதும் சொல்லிச் சிரித்தான். ராயு அண்ணனிடம் இறுதியாய் குடித்த தேனீர், அன்று எனது பிறந்தநாள் என்பதால் அவனுடன் இறுதியாய் சாப்பிட்ட கேக் எல்லாயும் மிக செழிய ஞாபகங்களாய் உள்ளன.

கஜானந் நவஜீவனம் என்ற விடுதியில்தான் இருந்து வளர்ந்து வந்தான். தற்பொழுது அவனது பெற்றோர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை என்பதால் நவஜீவனம் என்ற விடுதியிலிருந்து கஜானந்தை எடுத்து வந்து வளர்த்தார்கள். ஆனால் அவனின் அம்மாவும் அப்பாவும் மற்ற பிள்ளைகளை விட தன்னில்தான் அதிகமான பாசம் வைத்திருப்பதாக கஜானந் சொல்லிக் கொண்டிருப்பான். அவனின் அம்மாவின் பாசத்திற்கு முன்னால் இந்தக் கதையை யாரும் நம்ப மாட்டார்கள். இன்று கண்ணீரும் காத்திருப்புமாக கஜானந்திற்காய் அவனின் அம்மா காத்துக் கொண்டிருக்கிறார். கஜானாந் இல்லாமல் அவனது குடும்பம் மட்டுமல்ல, நாங்கள் மட்டுமல்ல அந்தத் தெருவே துயர முகம் அணிந்திருக்கிறது. கொஞ்சப் பொருட்களை வாங்கிக் கொண்டு கஜானந்தின் அம்மா ஒரு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...