Sunday, November 28, 2010

கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது

பெருநிலத்தின் கதைகள் : 01 - நவராஜ் பார்த்தீபன்

பெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண்டு வரப்படுகிறது. அபாயமும் இருளும் பொருந்திய சூழலில் இந்தக் குறிப்புக்களை எழுதுவதற்காக பெருநிலத்தின் ஊடாக செல்லுகிறேன்

பல உட் சிதைவுகளுக்கும் வெளிச் சிதைவுகளுக்கும் பிறகும் கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது என்ற அந்தப் பெயர்ப்பலகை உயிரைப் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறது. கிளிநொச்சி நகரம் ஆயிரம் ஆயிரம் வலிகளுடன் சிதைவுகளுடன் கனவு கிழிந்த முகங்களுடன் இன்னும் உயிருடன் இருந்தபடிதானிருக்கிறது. இது வரையில் முப்பதிற்கு மேற்பட்ட தடவைகள் கிளிநொச்சி நகரத்தின் ஊடக பயணித்திருக்கிறேன். நகரத்திற்குள் கால் பதித்து இறங்க முடியாமல் அல்லது இறங்குவதற்கு அனுமதிக்க முடியாமல் பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவுக்கும் சென்றவர்களில் நானும் ஒருவனாய் பயணித்திருக்கிறேன். முதல் முதலில் கிளிநொச்சியைப் பார்க்கும் பொழுது மிகப் பதறிப்போயிருந்தேன். கைப்பற்றிய பின்னர் படையினர் வெளியிட்ட புகைப்படங்களில் பார்த்ததை விட அழிந்து போயிருந்தது. பேரூந்தில் இருந்தவர்கள் எல்லோரது முகங்களும் இடிக்கப்பட்ட கிளிநொச்சசி நகரத்தையும் சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்ட வன்னி நிலத்தையும்தான் மிகப் பெருந்துக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.



கிளிநொச்சி மீண்டும் சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறது. ஈழப் போர் வரலாற்றின் எல்லாக் கட்டங்களிலும் கிளிநொச்சி அழிவைத்தான் கண்டு வந்திருக்கிறது. அழிந்த பொழுதெல்லாம் அதை கிளிநொச்சி மக்கள் மீளக் கட்டியெழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாழ் கண்டி வீதி முழுவதும் இம்முறை பெரும் சிதைவுக்குள்ளாகியிருக்கிறது. விடுதலைப் புலிகள் கிளிநொச்சி விட்டு வெளியேறிய பொழுது கிளிநொச்சி நகரம் ஓரளவு சிதைவுறாத நிலையிலேதான் இருந்திருக்கிறது. கூரைகள் கழற்றப்பட்ட வாணிபங்களின் சுவர்கள், ஊரைகள் கழற்றப்படாத அலுவலகங்கள், அப்படியே விட்டுச் செல்லப்பட்ட வீடுகள் என்று பல கட்டிடங்கள் சிதைவுறாத நிலையிலிருந்தன. கிளிநொச்சி உள் நகரில் எந்தச் சமர்களும் இடம்பெறிவில்லை. புற நகரமாகத்தான் சமர்கள் நடைபெற்றிருக்கின்றன. ஜனவரி 02 ஆம் திகதி 2009ஆம் நாள், அன்று புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி வெளியேறியிருந்தார்கள். அன்று மதியம் கிளிநொச்சியைப் படைகள் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வந்திருக்கின்றன. அதற்கு முன்பு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் அந்த நகரத்திலிருந்து வெளியேற வேண்டிய துயரம் நடைபெற்றது.

புலிகளின் கனவு நகரத்தை கைப்பற்றியதாக அன்று கிளிநொச்சி நகரத்தை வெற்றி கொண்ட தன் வாழ்த்துக் குறிப்பில் மகிந்தராஜபக்ஷ தெரிவித்திருந்தார். முழுக்க முழுக்க கனவுகளாலும் ஈழ மக்களின் குருதிகளாலும் கட்டியெழுப்பட்ட கிளிநொச்சி நகரம், அதனை சுற்றி வரவுள்ள கிராமங்கள், குடியிருப்புககள் பக்கத்தலிருக்கிற மாவட்டங்கள், என்று எல்லாமே மக்களின் வாழும் கனவைக் குறித்த தீரத்துடன் இணைந்திருந்த நிலத்தை படைகள் கடும் கோரமாக சிதைத்திருக்கின்றனர். எப்பொழுதும் நிமிர்வின் குறியீடாகவும் செழிப்பான வாழ்வும் கனவும் என்று இருந்த பெரு நிலத்தை, சிங்கள அரசு இன்று சாம்பல் காடாகியிருக்கிறது. வன்னிப் பெரு நிலம் தமிழ் மக்களின் கனவுகளின் காடாக இருந்ததினாலும் கிளிநொச்சி நகரம் முதல் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முதலிய நகரங்கள் தமிழ் மக்களின் கனவு நகரங்களாக இருந்ததினாலும் அவற்றை படையினர் திட்டமிட்டு சிதைத்துள்ளனர். சமர்களின் பொழுது சிதைந்திருந்த நிலத்தை அவர்கள் பிறகு மேலும் சிதைத்திருக்கிறார்கள். சமரற்றபடி பின்வாங்கப்பட்ட கிளிநொச்சி நகரத்தை தன் கோர குணத்தை வெளிப்படுத்தும் வகையில் வன்மத்தை தீர்க்கும் வரையில் படைகள் சிதைத்திருக்கின்றன.



பரந்தன் பகுதியில் படைகள் தங்களுக்குரிய விருந்தினர் உணவகங்களை அமைத்திருக்கிறார்கள். பரந்தன் சந்தியில் முன்பிருந்த கடைகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன. பரந்தன் பகுதிக்கு வரும் பொழுதும் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுக்கு செல்லும் பொழுதும் பரந்தன் சந்தியில் உள்ள தேனீர்க் கடைகளில் தேனீர் குடித்திருக்கிறேன். அப்பொழுது என்னுடன் அமர்ந்திருந்த நண்பர்களை இப்பொழுது காணவில்லை. இன்னும் சந்திக்கவில்லை. அது ஒரு சிறு நகரம்போவும் முக்கியமாக பேருந்துகளில் வருபவர்கள் மாறி மாறி பேருந்துகளில் தொற்றி ஏறிக் கொள்ளும் தளமாகவும் விளங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்கள் பரந்தனின் இறங்கி அங்கு நின்றுதான் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுக்கு செல்லுவார்கள்.

பரந்தன் பகுதியில் கடும் சண்டைகள் நடைபெற்றிருந்தன. படைகள் பரந்தனைக் கைப்பற்றுவதற்காய் நடத்திய சண்டைகள் மிகுந்த உக்கிரமாக இருந்ததுடன் பரந்தனை தக்க வைப்பதற்காக போராளிகளும் கடும் சண்டைகளை புரிந்தார்கள். பரந்தன் சந்தியிலிருந்து பூநகரிக்கு செல்லும் வழியில் செல்லும் பொழுதும் குமரபுரம் பகுதிக்கு செல்லும் பொழுதும் அது பாரிய யுத்த களமாக இருந்ததிற்கான அடையாளங்கள்தான் காணக் கிடைக்கின்றன. மண் மூட்டைகளும் பதுங்குகுழிகளும் அமைந்திருக்கின்றன. வாய்க்கால்களும் மண் திட்டுக்களும் என்று சமர்களுக்கு ஏற்ற பகுதியாக இயற்கையாக அமைந்திருக்கிறது. பரந்தனை படைகள் கைபற்றிய பொழுது இடிபாடடைந்த அதன் சுவர்களுக்கு அருகாக முன்னெறிச் செல்லும் புகைப்படங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் வெளியிட்டிருந்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது. இன்னும் ஆக்கிரமிப்பின் கால்களுக்குள் உடைந்த அந்த சுவர்கள் அப்படியே இருக்கின்றன.


பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் செல்லும் பொழுது வீதியின் அருகருகாக இராணுவ காவல் முகாங்கள்தான் அமைந்திருக்கின்றன. படைகள் எந்நேரமும் வீதியைக் கண்காணித்தபடியிருக்கின்றன. கரடிப்போக்கு சந்தியில் உள்ள கடைகள் கட்டிடங்கள் உடைந்து நிலத்தில் பரவுண்டு கிடக்கின்றன. அங்கு தொண்டு நிறுவனங்கள் அமைத்திருந்த தொண்டு நிறுவனங்கள் இயங்கியவற்றில் மிஞ்சிய கட்டிடங்களில இப்பொழுது படையலுவலகங்கள்தான் இயங்குகின்றன. அதற்கு பக்கத்தில் உள்ள இலங்கை வங்கி கட்டிடத்தில் இயங்குவதற்கான தீவிர திருத்த வேலைககள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பக்கத்தில் முன்பு வெண்புறா என்ற நிறுவனம் அமைந்த இடத்தில் இப்பொழுது பாரிய புத்தர் சிலை ஒன்று எழுப்பட்டுள்ளது. பக்கத்தில் கைத் தொலை பேசிகளுக்கு மின்னேற்றும் நிலையமும் படையினர் உணவகமும் திறக்கப்பட்டிருக்கிறது.

கிளிநொச்சி நகரத்தின் மையத்திற்கு செல்லும் பொழுது எங்கும் முட்கம்பிகளால் சுற்றி இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற அழகான கட்டிடம் இராணுவ தலமையகமாக இயங்குகிறது. ஈழநாதம், அழகன் முதலிய பதிப்பகங்கின் பெயர் பலகைகளை படையினர் உடைத்துள்ளனர். அத்துடன் தமிழில் பெயர்கள் அமைந்துள்ள கடைகளின் பெயர் பலகைகளில் அதற்கு மேலாக வண்ணம் பூசி அழித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் எனப்படும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், அரசியல் துறை அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் அமைந்த பகுதி பாரிய பாதுகாப்புடன் படைமுகாங்களின் தெருவாக அமைந்திருக்கிறது. முட்கம்பிகளால் அடைக்கப்பட்டு அங்கு யாரும் உட் செல்ல முடியாதபடி இருக்கிறது.

உடைந்த பெரும் தண்ணீர் டாங்கியின் கீழாக சிங்களர்கள் தற்காலிக கடைகளை திறந்திருக்கிறார்கள். இப்பொழுதுக்கு அங்குதான் மக்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் இறப்பர் பொருட்கள் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை வாங்குகிறார்கள். தபாலகம் ‘அறிவதுமு’ என்ற புத்தகக் கடை அமைந்திருந்த கடைத் தொகுதில் இயங்குகிறது. அதில் ஒரு கூட்டுறவுக் கடையும் இயங்குகிறது. நகரத்திற்குள் சில கூட்டறவு உணவகங்கள்தான் அமைந்திருக்கின்றன. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அலுவலகம் விவசாய விரிவாக்க அலுவலகம் வடபிராந்திய போக்குவரத்து அலுவலகம் எனறு சில அரச அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு பணிகளுக்காக மீள் குடியிருத்தப்பட்டவர்களுடன் யாழ்ப்பாணம் வவுனியாவிலிந்தும் அங்கு தற்காலிகமாக தங்கியிருக்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் வருகிறார்கள்.

முன்பு விடுதலைப் புலிகளால் திறக்கப்பட்ட உணவு விடுதிகளான இளந்தென்றல் என்ற உணவகத்தில் பொலிஸ் பிரிவு காரியாலயம் அமைகக்ப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் காவல்துறை கட்டிடத்தில் புதிய பொலிஸ் அலுவலகம் அமைப்பதற்கான வரைபடத்துடன் முன்மொழியப்பட்ட அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முற்றவெளி எனப்படும் கிளிநொச்சி நகர விளையாட்டு மைதானம் வெறுமையுடன் கிடக்க அதன் பகத்தில் இருந்த ‘நந்தவனம்’ என்ற புலிகளின் அனைத்துலக தொடர்பகம் அமைந்த பகுதியில் இராணுவத்தின் படைத்தலமையகம் ஒன்று திறந்து வைக்கும் வைபவம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. படைகளின் அதிகாரத்தனமான அணிவகுப்புகளின் மத்தியில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் பெயர் பலகையை திறந்து வைத்துக்கொண்டிருந்தார். அதன் முன்பக்கத்தில் இராணுவ பதிகவம் ஒன்று அமைந்திருக்கிறது. முன்பு ஒரு முறை நான் கிளிநொச்சிக்கு வரும் பொழுது அங்கு பதிவு செய்ய பின்னர் தான் நகரத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்று படையினர் கூறியிருந்தனர். அன்று எந்தப் பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் திரும்பியிருந்தேன். அந்த இடத்தில் உள்ள கிளிநொச்சி தபாலகமும் அழிவுகளின் மேல் அழிவுகளை சந்தித்தபடி இருக்கிறது. யுத்தத்தின் முன்பும் அந்த பாரிய கட்டிடம் திருத்தப்படாமல் யுத்த சின்னமாக காட்சியளிக்க கீழ்மாடியில் இயங்கிக் கொண்டிருந்தது.

அதன் பக்கதிலும் மின் ஏற்றும் நிலையமும் படையினர் உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. திருநகருக்கு செல்லும் வீதியின் முன் பக்கத்தில் அதே மாதிரி தொலைபேசி மின் ஏற்றும் நிலையமும் படையினர் உணவகமும் அமைக்கப்பட்டிருந்ததுடன் அதிர்ச்சி தரும் விதமாக ஒரு பெயர் பலகை நடப்பட்டிருந்தது. ‘திருநகர் மாவத்தை’ என்ற அந்தப் பெயர் பலகை தமிழில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் நகரம் சிங்கள பெயா் பலகைகளாலும் அறிவிப்புகளாலும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. உலகத்திலேயே தமிழ் அதிகம் பாவிக்கப்பட்ட நகரத்தில் இன்று எழுத்துப் பிழைகளுடன் பல பெயர் பலகைகள் அமைந்திருக்கின்றன.

நான் நினைத்ததைப்போல ‘காவல்துறையில் இறக்கம்’ என்றுதான் பேரூந்தில் என்னுடன் அந்த இடத்தில் இறங்க முற்பட்ட இன்னொருவரும் சொன்னார். விடுதலைப் புலிகளின் காவல் துறை அலுவலகம் அமைந்திருந்த அந்தப் பகுதியில் இப்பொழுது படையினரின் நலச்வேவைக் விற்பனையகங்கள் எனப்படும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன. அதில் உணவகம், முடி திருத்தகம் முதலியன அமைந்திருக்கின்றன. அங்கு பொருத்தப்பட்டிருந்த தொலைக் காட்சியில் ஆங்கிலத் திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அங்கு பெரும்பாலும் பழைய முகவரிகளைத்தான் நமது மக்கள் பயன்படுத்துகிறார்கள். சேரனுக்கு முன்னால் பாண்டியனுக்கு முன்னால் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆபத்தை தரும் வகையில் கூட அமையலாம் என்று எனக்கு அப்படி இடங்களை குறிப்பிட்ட பிறகுதான் தோன்றியது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி இப்பொழுது ரி.ஆர். ரெக் எனப்படும் தமிழ் அகதிக் தொழில் நுட்ப நிறுவனத்தின் கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தில் மேல் மாடியில் கூரைகள் கழற்றப்பட்டிருக்க சில தரப்பாள்கள் இழுத்து கட்டப்பட்டிருக்கின்றன. அவை காற்றுக்கு அங்கும் இங்குமாக விலக மாணவர்கள் வெயிலில் இருந்து படித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். நான் செல்லும் பொழுது பாடசாலை முடிந்து மாணவர்கள் வெளியில் வந்து கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குள் அப்பன்னாவை பார்க்க திரும்பி பாடசாலையடிக்கு வந்தேன். அதற்காக யசோவைப் பார்த்துக்கொண்டு பாண்டியன் சுவையகம் அமைந்திருந்த இடத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்தேன்.

சேரன், பாண்டியன் என்ற உணவகங்களும் விடுதலைப் புலிகளது உணவகங்கள்தான். அவற்றில் மிகுந்த தரமான உணவு வகைள் விற்கப்படடன. பாண்டியன் உணவகத்தில் மிகுந்த குறைந்த பணத்தில்கூட உணவுகளை சாப்பிட முடியும். முப்பது ரூபாவிற்குள் மூன்று இட்லிகளும் ஒரு பால்தேனீரும் நான் காலையில் அங்கு சாப்பிடுவதுதான் ஞாபகத்துக்கு வந்தது. தினமும் பாண்டியனில் சாப்பிடுகிறேன் என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள். ஆனால் உள்ளே நான் இப்படி முப்பது ரூபாவுக்குள்தான் சாப்பிடுவது அவர்களுக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம்.

பாண்டியனுக்கு முன்னால் அழகிய பூங்கா மாதிரிதான் இருக்கும். அதற்கு முன்னால் சந்திரன் பூங்கா இருக்கிறது. சிறிய வயதில் அந்த பூங்காவிற்குள் விளையாடிய ஞாபகங்கள் வந்தன. அந்தப் பூங்கா அழிக்கப்பட்டு இப்பொழுது துப்பாக்கிச் சன்னம் குத்தி கிழித்து அதில் வெடித்து மலரும் நீலோற்பவ மலர் மலர்ந்து இலங்கை பிறக்கும் அர்த்தம் கொண்ட பாரிய நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பாண்டியன் சுவையகம் அமைந்திருந்த பகுதி எந்த அடையாளமுமற்றபடி வெறுமையாக கிடந்தது. என்னை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குள் அழைத்துக்கொண்டு செல்லுவதற்காக யசோதரன் வர நானும் அவனும் பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்காய் படையினரை நெருங்கினோம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...